உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாபூரில் நடக்கும் நிகழ்வுகள், பல காணொலிக் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவருகின்றன. அவற்றில் ஒரு காணொலியில் முஸ்லீம் மாணவியர், ஹிஜாப் அணிந்து கல்லூரி வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு காணொலிக் காட்சியில் பள்ளி மாணவ மாணவியர் தங்களது சீருடைக்கு மேலே காவித் துண்டை அணிந்து ஜெய் ஸ்ரீராம் என கத்திக் கொண்டே சாலையில் செல்கின்றனர்.
கடந்த மாதம், கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக 6 மாணவியர் வகுப்பறைக்குள் நுழைய மறுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஹிஜாப் அணிவது இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 25-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை என்றும் இஸ்லாத்தின் இன்றியமையாத நடைமுறை என்றும் அறிவிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாஜக பாசிசக் கும்பல் தொடர்ச்சியாக முசுலீம் மாணவியர் ஹிஜாப் அணிய எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ வெறியர்கள் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகின்றனர்.
படிக்க :
♦ கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
♦ கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்
ஹிஜாப்களை அகற்ற மறுக்கும் முசுலீம் மாணவியருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிப்ரவரி 2 அன்று இந்துத்துவ அமைப்புகளை சார்ந்த சுமார் 100 மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர்.
பிப்ரவரி 3-ம் தேதியன்று ஹிஜாப் அணிந்த 20 முசுலீம் மாணவியரை கல்லூரி வாயிலில் நிறுத்தி கல்லூரிக்குள் நுழையும் முன் ஹிஜாபை நீக்குமாறு அந்த கல்லூரி முதல்வர் கேட்டுக் கொள்ளும் காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியானது.
அதில் ஒரு மாணவி, “எங்களை ஏன் தடுக்கிறீர்கள். ஹிஜாப் அணியக் கூடாது என எங்களை தடுப்பதற்கு ஏதேனும் விதிகள் இருக்கிறதா? என்று கேட்கிறார். மற்றொரு பெண் தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கோருகிறார்.
#WATCH | Students wearing hijab denied entry to Govt PU College in Kundapur area of Udupi, Karnataka amid a row on wearing the headscarf in classrooms
"They were not wearing the hijab earlier & this problem started only 20 days ago," State Education Minister BC Nagesh has said. pic.twitter.com/3pT418rb0y
— ANI (@ANI) February 4, 2022
பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கோடு பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல், இந்த வேலைகளைச் செய்து வருகிறது.
இது குறித்து கர்நாடகா மாநில கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ், இதற்கு முன் மாணவியர் ஹிஜாப் அணியவில்லை என்றும் 20 நாட்களுக்கு முன்புதான் இந்த பிரச்சினை தொடங்கியது என்றும் கூறுகிறார்.
பிப்ரவரி 5 அன்று பாஜகவின் கர்நாடகா மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல், கல்வி முறையை ‘தலிபான்மயமாக்கலை’ மாநில அரசு அனுமதிக்காது என்று கூறினார். “ஹிஜாப் அணிந்தால் எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். பள்ளி கல்லூரியின் விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். தாலிபான்மயமாக்கலை (கல்வி முறையை) அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.
Hindu students in Karnataka, India wearing Hindu Right-wing’s saffron scarves opposing Muslim women students’ wearing of hijabs! A nation has lost its mooring! pic.twitter.com/omEGyMSuX1
— Ashok Swain (@ashoswai) February 4, 2022
கல்வி நிறுவனங்களில் பிள்ளையாரை வழிபடுவது குறித்தும், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் நெற்றியில் குங்குமம் வைத்து செல்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “இது இந்தியா நமது நாடு இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவானது. ஹிஜாப் அணிவதற்கு மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானை நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்று விஜயபுரா பாஜக எம்.எல்.ஏ பசனகவுடா பார்டீல் யத்னால் கூறியுள்ளார்.
“மாணவர்களின் ஹிஜாப் அவர்களின் கல்விக்கு தடையாக வருவதன் மூலம் இந்தியா பெண்களின் எதிர்காலத்தை நாம் சூறையாடுகிறோம்” என்று இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவு வரும் வரை தற்போதுள்ள சீருடை தொடர்பான விதிகளை பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி 4 அன்று கூறியுள்ளது.
கல்லூரி மாணவர்களோ, “ஹிஜாப் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எங்கள் சீனியர்கள் ஹிஜாப் அணிந்து இதே கல்லூரியில் படித்தவர்கள். திடீரென்று இந்தப் புதிய விதி எப்படி அமலுக்கு வந்தது? ஹிஜாப் அணிந்தால் என்ன பிரச்சினை? சமீப காலம் வரை எந்த பிரச்சினையும் இல்லை.” என்று கூறுகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக ஹிஜாப் அணிவதை தடுத்து, இந்துமதவெறியை மாணவர்களிடையே திட்டமிட்டு உருவாக்கி பாஜக அரசே இதுபோன்ற ஒடுக்குமுறைகளை செய்து வருகிறது. காவிக் கும்பலை ஒழிக்காமல் கர்நாடக முஸ்லீம் சிறுபான்மை மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் பாதுகாப்பாக படிப்பது சாத்தியமில்லை.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்