நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்?
டந்த நூற்றாண்டில் ஊடகங்கள், அவற்றின் போக்கு எப்படியிருந்திருக்கிறது என்பது குறித்து விரிவாக வெகுசில ஆய்வுகளே வெளியாகியிருக்கின்றன. ஆனால், ஊர் ஊராகப் பயணம் செய்து, தீவிரமாக செயல்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் ஒரு கால் நூற்றாண்டிற்கு ஊடகங்களைக் கவனித்து, அவற்றின் போக்கு குறித்து மக்களிடம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் பெரியார்!
ஒரு கால் நூற்றாண்டிற்கு, அதாவது 1925 முதல் 1949 வரை பெரியாரின் ஊடகங்கள் குறித்த கட்டுரைகளை பொருள்வாரியாகப் பிரித்து தொகுத்திருக்கிறார் டாக்டர் இரா. சுப்பிரமணி.
இந்தக் கால் நூற்றாண்டில் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி ஆகிய இதழ்களில் இதழியல், ஊடகங்கள், பத்திரிகைகள் குறித்து வெளியான உரைகள், தலையங்கங்கள், துணைத் தலையங்கங்கள், கட்டுரைகள், குறிப்புகள் ஆகியவை
1. தந்தை பெரியாரின் பார்வையில் இதழ்கள்
2. ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள்?
3. பெரியார் போற்றிய தோழமை இதழ்கள்
4.தந்தை பெரியாரின் வழக்காடும் இதழியல்
5. தந்தை பெரியாரின் நூல் மதிப்புரைகள்
என ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தம் 410 கட்டுரைகள்!
இந்தக் கட்டுரைகளையும் பெரியாரின் பார்வையையும் சரியாகப் புரிந்துகொள்ள ஏதுவாக, அந்த காலகட்டத்திலும் அதற்கு சற்று முந்தைய காலகட்டத்திலும் வெளியான இதழ்கள் குறித்தும் அந்த காலகட்டம் குறித்தும் 14 விரிவான அறிமுகக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார் சுப்பிரமணி.
அந்த காலகட்டத்தின் இதழ்கள் மக்கள் மீது செலுத்திய செல்வாக்கைச் சரியாகவே உணர்ந்திருந்த பெரியார், அவற்றைப் பற்றி எழுதுவதும் சொந்தமாக பத்திரிகைகளைத் தொடங்கி தனது கருத்தைப் பரப்புவதும் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்.
குறிப்பாக, ஏன் தொடங்கினேன் இத்தனை இதழ்கள் என்ற பகுதி மிகச் சிறப்பான ஒன்று. குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட், விடுதலை, உண்மை என வெவ்வேறு பத்திரிகைகளை அவர் தொடங்கி நடத்த வேண்டிய காரணம், ஒவ்வொரு இதழையும் கொண்டுவருவதில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், ரெய்டுகள், வழக்குகள், அபராதங்கள், அவற்றை முடக்க மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைகள் போன்றவை இந்தப் பகுதியில் விரிவாக காணக்கிடைக்கின்றன. தனது பத்திரிகைகள் குறித்த சின்னச் சின்னத் தகவல்களைக்கூட வாசகர்களிடம் பகிர விரும்பியிருக்கிறார் பெரியார்.
புத்தகத்தின் இறுதியில் பல்வேறு பத்திரிகைகள் குறித்த சிறு அறிமுகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில ஆர்வமூட்டும் தலைப்புகளைப் பாருங்களேன்:
‘நமது துணை ஆசிரியர் விலகுகிறார்’
‘குடி அரசு வாசகர்களுக்கு ஒரு உண்மையான முன்னறிவிப்பு’
‘பயமுறுத்தல் கடிதங்கள்’, ‘1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது’
‘ஆளவந்தாருக்கு எச்சரிக்கை’
‘மித்திரன் புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்’!
சுதேசமித்திரன், தினமணி, விகடன் போன்றவை அவருடைய விருப்ப இலக்குகளாக இருந்திருக்கின்றன.
பெரிய சைஸில் 800 பக்கங்களோடு பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம்.
இதழியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், 20-ம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தமிழ் சமூகத்தின் மீது இருந்த தாக்கங்களை புரிந்துகொள்ள விழைவோர் கண்டிப்பாக வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது!
ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்?
வெளியீடு: விடியல் பதிப்பகம்
விலை : ரூ. 1000/-
புத்தகக் கண்காட்சியில் ரூ. 700க்குக் கிடைக்கும்.
முகநூலில் : முரளிதரன்
000
இப்போது உயிரோடிருக்கிறேன்
மிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான இமையத்தின் நாவல்களாக இருந்தாலும் சிறுகதைகளாக இருந்தாலும், அவை படிப்பவர்களை ஒரு கணமாவது உலுக்கிவிடும்.
படிக்க :
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
‘கோவேறு கழுதைகள்’லில் இருந்து இப்போது வெளியாகியுள்ள ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’வரை இதில் விதிவிலக்கு இல்லை. அவருடைய எல்லாப் படைப்புகளோடும் ஒப்பிடுகையில் மிகுந்த துயரமும் கையறுநிலையும் படிந்த படைப்பாக இந்த நாவலைச் சொல்லலாம்.
பள்ளிச் சிறுவன் ஒருவனுக்குத் திடீரென சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. இதற்குப் பிறகு அந்தக் குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. கிராமத்தைச் சேர்ந்த அவனுடைய பெற்றோர் இருக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு, நகரத்திற்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும். முடிவில் அவனது தாயாரின் சிறுநீரகம் அவனுக்குப் பொருத்தப்படுகிறது.
ஆனால், அதோடு பிரச்சனை முடியவில்லை. திடீரென க்ரியாட்டின் அளவு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே நொறுங்கிப் போயிருக்கும் அவனுடைய தந்தை, இடி விழுந்ததைப் போல ஆகிவிடுகிறார். பயாப்சி சோதனைக்காக அந்தச் சிறுவன் காத்திருப்பதைப் போல நாவல் முடிவுக்கு வருகிறது.
இந்த ஒற்றைச் சிறுவனின் வாழ்வைச் சொல்வதின் மூலம், நாள்தோறும் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் ஊசலாடும் ஆயிரக்கணக்கான சிறுநீரக நோயாளிகளின் வாழ்விற்குள் அழைத்துச் செல்கிறார் இமையம்.
ஒரு படைப்பு என்றவகையில் இமையம் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஆனால், இந்த நாவலைப் படிக்கும்போது உணர்வுரீதியாக பெரும் விலகலோடு படிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்தச் சிறுவனாகவோ அவனது பெற்றோராகவோ உணர்ந்து மனமுடைய நேரும்.
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. ஆனால், ஒருவருக்கு செயலிழப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுக்க நோயாளிதான். ஆகவே, சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் அவற்றைப் பின்பற்றுவதுமே மிக முக்கியம். தமிழ்நாடு அரசின் கவனத்தை அந்தத் திசையில் இந்த நாவல் திருப்புமானால், அதுதான் இமையத்தின் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.
நூல் : இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் : இமையம்
வெளியீடு : க்ரியா (Stall No. 228)
விலை : ரூ. 345/-
முகநூலில் : முரளிதரன்
disclaimer

2 மறுமொழிகள்

  1. தலைப்புகளை ஒன்றாக போட்டு குழப்பியிருக்கிறீர்கள்.இரண்டு நூல்களின் ஆசிரியர் பெயரும் வேறுவேறு.இரண்டும் தனிதனி நூல்கள் என்பது விமர்சனத்துக்குள் போகும்போதுதான் புரிகிறது.அட்டை படங்களை ஒன்றைப் போல போட்டு குழப்புமளவு ஆர்வமா?முதலில் இதை தவறு என ஒத்துக்கொள்கிறீர்களா?

    • குழப்பம் ஏற்படும் வகையில் இரண்டையும் ஒரே பதிவில் வெளியிட்டதற்கு வருந்துகிறோம் தோழர்.. இனி சரி செய்து கொள்கிறோம்.

      சுட்டிக் காட்டியமைக்கு நன்றி !

Leave a Reply to josephwilliam பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க