பெரியாரின் 142 வது பிறந்தநாள் ! கடலூர் பு.மா.இ.மு. மாலை அணிவிப்பு நிகழ்வு !!

 

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142 வது பிறந்தநாளை முன்னிறுத்தி விருத்தாசலம் திரு. கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பெரியாரின் சிலைக்கு புமாஇமு தோழர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மாலை அணிவிக்கும் நிகழ்வு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் மணியரசன் தலைமையில் நடந்தது.

இந்த மாலை அணிவிப்பு நிகழ்வில் சமூக நீதிப் போராளியான தந்தை பெரியார் முன்னெடுத்த போராட்டங்கள் சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பெண்களுக்கு சம உரிமை,கல்வி பயிலும் உரிமை, கடவுள் மறுப்புக் கொள்கை,கோயில் நுழைவு போராட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றின் வரலாறு குறித்து பேசப்பட்டது.

மேலும், இன்று மீண்டும் மனுதர்ம ஆட்சி நடந்து கொண்டிருக்கும் சூழலில், பார்ப்பனியத்தை எதிர்க்கும் வகையில் தனது இறுதி நாள் வரை போராடிய தந்தை பெரியாரின் வரலாற்றை இளைய சமூகம் படிக்க வேண்டும். மருத்துவம் படிக்கும் உரிமையை பறிக்க வந்த நீட் தேர்வால் தொடரும் மாணவர் படுகொலைகள், மூன்றாம் வகுப்பிலே பொது தேர்வு வைத்து குலத் தொழிலுக்கு அனுப்பும் புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை நாம் எதிர்க்க வேண்டும்.

இதனைச் செய்ய நாம் பெரியாரின் கருத்துக்களை இளையதலைமுறை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் ஒழிய இந்த பார்ப்பன பாசிச கும்பலை அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்க முடியாது என்ற வகையில் கண்டன உரையும், கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் தோழர் மணிவாசகம் பார்ப்பனப் பாசிசத்துக்கு எதிராக கண்டன உரை ஆற்றினார். புமாஇமு உறுப்பினர்கள் தோழர் மணிகண்டன்,சுகதேவ், இளங்கோ ஆகியோரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கோ பூவனூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலாஜி மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர்-  இளைஞர் முன்னணி.
கடலூர்.
தொடர்புக்கு: 97888 08110

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க