ப்போலாம் யாருங்க சாதி பாக்குறாங்க” என ஒரு கும்பல் எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்கிறது. ஒருபுறம் சாதி ஆணவப் படுகொலை என்பதும் நடந்த வண்ணம் உள்ளது. பள்ளிகளில் சாதி தீண்டாமைகளினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்கள் தலித்களாக இருந்தால் அவர்கள் அவமதிக்கப்படுவது மட்டும் இல்லாமல், அவர்கள் வேலைகளையே செய்யவிடாமல் தடுக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் எதோ ஒரு இடத்தில் நடந்தது என்று மட்டும் விட்டுவிட முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.
நாம் சமூகநீதி ஆட்சி நடக்கிறது என்று பெருமை பீற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டு சிலாகித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே வேலையில்தான் தமிழகத்தில் 445 ஊர்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கின்றன என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்துள்ளது.
படம் : பி.பி.சி
அதிலும் மாவட்டம் வாரியாக எத்தனை கிராமங்கள் என்ற தகவலும் சேர்த்து வெளியாகி உள்ளது.
இந்த தகவல் என்பது தமிழ்நாடு அரசின் போலீசுத் துறையால் பதியப்பட்ட வழக்குகளில் இருந்து கொடுக்கப்பட்டதுதான். மேலும், பதியப்படாத வழக்குகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன என வி.சி.க.வின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
படிக்க :
குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !
வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். அப்படியானால் இவற்றை ஒழிக்க அரசு என்ன வகையான முயற்சியை எடுக்கிறது? சாதி தீண்டாமையை ஒழிப்பதற்காக 2015 – 2016 ஆண்டு முதல் 2021 – 2022-ம் ஆண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கு பெயர்தான் சமூக நீதி ஆட்சி.
சட்டங்களின் செயல்பாடு:
1955-ம் ஆண்டு இந்த சட்டம் இந்தியாவில் பட்டியலினத்தவர் எனப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதன் பிறகு 1976-ல் பி.சி.ஆர் சட்டம் (குடியுரிமை பாதுகாப்பு சட்டம்) என மாற்றப்பட்டது. இந்த சட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதாலும், சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதாலும் இளைய பெருமாள் என்பவரது தலைமையில் பாராளுமன்றம் ஒரு கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (சட்டம் எண் 33/1989) கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் மிகவும் தாமதமாக 1995-ல் தான் நடைமுறைக்கே கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் பிறகு பழங்குடியினர் மீது போலீசுத்துறை நடத்திய வன்கொடுமை பலாத்காரம் சம்மந்தமாக போலீசுத்துறை, இராணுவத்திற்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் இந்த சட்டம் போலீசுத்துறையினர் தங்களுக்கு எதிராக இருப்பதாக கருதி கிடப்பிலே போட்டு உள்ளனர். இந்தியா முழுக்க இதுதான் நிலை.
கீழ்க்காணும் செயல்களுக்கு இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்
  1. சாதியை கொச்சைப்படுத்தி பேசுதல்,
  2. சாதி பெயரை சொல்லி திட்டுவது,
  3. சாதியின் பெயரால் விலக்கி கொள்வது
இதேதான் நம் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளிலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கை பதிய சொன்னால் இந்த போலீசுத்துறையோ உயர் அதிகாரிகளோ சாதாரண சண்டையாகதான் பதிவு செய்து பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியானால் இந்த சட்டம் எந்த வகையில் யாருக்குதான் பயன்படும்?
ஆனால், சொல்லுவது என்னமோ பட்டியலினத்தவரை அவர் சாதி சொல்லி திட்டினாலும், அவரை அருவருப்பான பொருள்களை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவதும், குறிப்பிட்ட இடத்தில் அவர்களை உட்காரக் கூடாது, வரக்கூடாது என்று சொல்வதும், அவர்களை சாதி பெயர்களை சொல்லி இழிவுபடுத்தி திட்டுவதும், அவர்களின் இடங்களிலோ, குடியிருப்புகளை அழித்தோ யாரேனும் ஆக்கிரமித்தாலோ, ஆதிக்க சாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்டாலோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம் என அரசு சொல்கிறது.
ஆனால், தமிழகத்தில் 445 கிராமங்களில் சாதி வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், பல கிராமங்கள் பதியப்பாடாமலும் உள்ளது. அப்படியானால் இவற்றை ஒழிக்க இந்த சமூக நீதி ஆட்சியில் என்னதான் திட்டம் உள்ளது. சமூகநீதி கூட்டம் மட்டும் நடத்தினால் போதுமா? அப்படியானல் இந்த திட்டங்கள் எல்லாம் ஒரு கண்துடைப்பு என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக சாதி தீண்டாமை அதிகமாக கடைபிடிக்கும் மாவட்டத்தில் முதலிடத்தில் மதுரை மாவட்டம்தான் உள்ளது. அதைத் தடுக்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அரசின் திட்டத்தினாலோ அல்லது சட்டத்தினாலோ இதை தடுக்க முடியுமா?
1955-ம் ஆண்டுகளுக்கு முன்பு சாதி தீண்டாமை படுகொலை என்பது மிகவும் அதிகமாக இருந்ததினால்தான் அதை தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த சட்டங்களை அமுல்படுத்தவே அடுத்தடுத்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், சம்பவங்களோ தீண்டாமையோ ஒழிந்ததா? அல்லது குறைந்ததா? வடமாநிலங்களில் இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.
சாதிக் கட்சிகள் சொல்லும் தீர்வு என்ன?
இந்தியாவில் 1108 பட்டியல் சாதிகளும் 744 பழங்குடியின சாதிகளும் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு ஆணை 1950 குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் பழங்குடியினரில் 36 சாதிகளும், பட்டியல் சாதிகளில் 76-ம் உள்ளது. இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல சிறிய சிறிய அமைப்புகளை வைத்து உள்ளனர். ஆனால், இவர்கள் மீதான கொடுமைகள் என்பதும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. மேலும், பொது வழிகளை பயன்படுத்துவது, பிணங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கப்படாதது போன்ற தீண்டாமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற உரிமைகளுக்கே போராடி வழக்கு போட்டுதான் பெற முடிகிறது.
படிக்க :
சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
ஆனால், வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சொல்வதுபோல பட்டியலினத்தில் உள்ளவர்களை இந்து மதம் என்பதிலிருந்து நீக்கி அனைவரையும் பெளத்த மதத்தில் சேர்த்து விட்டால் இந்த தீண்டாமையில் இருந்து அவர்கள் விடுபட்டு விட முடியுமா? பல நூறு ஆண்டுகளாக பழக்கப்படுத்தி வைக்கப்பட்ட அடிமைத் தீண்டாமை தனத்தை மதமாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியுமா? ஏன் கிறிஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை இல்லையா? இந்த வர்ணாசிரம நிலப்பிரத்துவ பிற்போக்குதனமான சமூகக் கட்டமைப்புதான் மக்களைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது. இதன் உள்ளே நின்று கொண்டே இதை மாற்ற வேண்டும் என்றால் எப்படி மாற்ற முடியும்?
அவரவர் செய்யும் தொழில் அந்த அடிப்படையில்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் என்பது அந்த காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படியானால் இதை மாற்ற வேண்டாமா? பொருளாதார ரீதியிலான பாகுபாட்டை போக்க வேண்டாமா? ஆனால், பல தலித் அமைப்பினர் தன் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உள்ளது என்று பேனர் அடித்து கூட வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் ஆதிக்க சாதியினர் போட்டுக் கொள்ளும்போது நாங்கள் எங்கள் சாதி பெருமையை போட்டுக் கொள்கிறோம் என்கின்றனர். ஆனால் இதனால் சாதி ஒழிக்கப்படுமா? சாதிக் கட்டமைப்பைப் பலப்படுத்ததான் செய்யும்.
இதுவரை நடத்தப்பட்ட ஆணவக் கொலைகள் நமக்கு பாடம் கற்றுத்தரவில்லையா?, இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் மேலும் பலர்… தொடர்ந்து கொண்டே செல்கிறது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன? சாதி ரீதியில் அமைப்பாக திரளாமல் வர்க்கம் என்ற அடிப்படையில் அமைப்பாக திரண்டு, ஒன்றிணைந்து சாதிய பிற்போக்கான நிலப்பிரபுத்துவ கட்டமைப்பிற்கு எதிராகப் போராடி தகர்ப்பது மூலமே உண்மையான சமத்துவ ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.

ஓவியா