விடியல் திமுக அரசே !
தூத்துக்குடியில் நடப்பது திராவிட மாடல் அடக்குமுறையா !
மக்கள் விரும்பும் வடிவில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்காதே !
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை மூடு !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி அமைதியாக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி போலீசு.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் தூத்துக்குடி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான போலீசை தூத்துக்குடியில் குவித்து மக்களை அச்சுறுத்துவதும், அச்சப்படாமல் அஞ்சலி நிகழ்வை நடத்த தயாராகும் மக்களை ஊரைவிட்டு வெளியேசெல்ல விடாமலும், வெளியூர் நபர்களை கிராமப்புறங்களுக்குள் செல்லவிடாமல் தடுப்பதும் என்று அனில் அகர்வாலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.
போலீசின் கடுமையான அடக்குமுறைகளுக்கு நடுவில் அஞ்சாமல் ஒவ்வொரு ஆண்டும் எழுச்சிகரமாக அஞ்சலி நிகழ்வை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மக்கள்.
எடப்பாடி அரசின் அடக்குமுறையை அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கண்டித்ததோடு அடக்குமுறைகளுக்கு அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக பொறுப்பாக்கினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்; அடக்குறையை கைவிட வேண்டும் என்று தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுத்தவர் அன்றைய எதிர்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமாகிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்.
வழக்கம்போல இந்த ஆண்டு மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தூத்திக்குடி மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஆயத்தமாகும் இடங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்த ஆண்டும் போலீசு குவிக்கப்பட்டுள்ளது
வெளி ஆட்கள் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள போலீசு தடை விதித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அஞ்சலி கூட்டம் நடத்துபவர்கள் கடந்த ஆண்டுகளில் நடத்தியதைப் போல அவரவர் ஊர்களின் உள்ளேயே நடத்திக் கொள்ளுங்கள், யாரும் பொது வெளியில் கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் நடத்தக்கூடாது, மீறினால் கைது செய்ய முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்துள்ளது ஸ்டாலின் போலீசு.
பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் அச்சக உரிமையாளர்களை மிரட்டியுள்ளதோடு, அரங்கக்கூட்டம் நடத்த அரங்கம் கொடுக்க கூடாது என்று அரங்க உரிமையாளர்களையும் ஸ்டாலின் போலீசு மிரட்டியுள்ளது. கடந்த காலங்களில் போலீசு மிரட்டலை மீறி பிளக்ஸ் அச்சடித்து கொடுத்த அச்சக உரிமையாளர்கள் அரசாங்கத்தால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி மறுத்துள்ளது ஸ்டாலின் போலீசு.
ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தியும், தியாகிகளுக்கு நினைவிடம் எழுப்ப கோரியும் மக்கள் அதிகாரம் ஒட்டிய சுவரொட்டிகள் மற்றும் பு.இ.மு அமைப்பினர் ஒட்டிய சுவரொட்டிகள் முழுவதும் தூத்துக்குடியில் கிழிக்கப்பட்டுள்ளது.
இவை நடப்பது கருத்துரிமையை பாதுகாக்கப்படுவதாக கூறப்படும் விடியல் ஆட்சியில் தான்!
அன்று நடந்த அடக்கு முறைக்கும் இன்று நடைபெறும் அடக்குமுறைக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எடப்பாடிக்கு பதில் ஸ்டாலின் முதல்வர் என்பதைத் தவிர.
ஆனால், அன்று நடந்த அனைத்து அடக்குமுறைகளுக்கும் எடப்பாடியை பொறுப்பாக்கிய அரசியல் கட்சியினர், அரசியல் இயக்கத்தினர் அதே அடக்குமுறையை தொடரும் இன்றைய திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலினை அதற்கு பொறுப்பாக்காமல், போலீசை மட்டும் பொறுப்பாக்குகின்றனர். இது போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், போராடிவரும் தூத்துக்குடி மக்களுக்கும் இழைக்கும் துரோகமேயன்றி வேறென்ன?
தனியார்மயமும், கார்ப்பரேட் கொள்கையும் எடப்பாடியையும், ஸ்டாலினையும் இணைக்கும் புள்ளி, இவர்களை மட்டுமல்ல மோடி, ராகுல் இவர்களையும் இணைக்கும் புள்ளி இதுதான். இந்த தனியார்மயம், கார்ப்பரேட் கொள்கைக்கான சேவைதான் இந்த அடக்குமுறை.
திமுக பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கோ, தனியார்மயத்திற்கோ எதிரான கட்சியா?
திமுக சுயவிருப்பத்தின் அடிப்படையிலா ஸ்டெர்லைடை எதிர்ப்பதாக கூறியது?
தூத்துக்குடி மக்களின் விடாப்பிடியான போராட்டம்தானே திமுகவை ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசவைத்தது!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில் தூத்துக்குடியில் நலத்திட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த ஸ்டெர்லைட் ஆலை மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எடப்பாடி அரசும், அதன் பின் ஸ்டாலின் அரசும் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது என்பதை மறுக்க முடியுமா?
ஆனால், மறுபுறம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முடக்க அன்று எடப்பாடி அரசும் அதன் பின்பு இன்றைய திராவிட மாடல் ஸ்டாலின் அரசும் கடுமையாக அடக்குமுறைகளை ஏவி வருகின்றது என்பதை மறுக்க முடியுமா?
மக்களின் கருத்துரிமையும் கார்ப்பரேட் நலனுக்கு உட்பட்டதுதான் அனுமதிக்கப்படும்! இதற்கு திமுக ஒன்றும் விதிவிலக்கல்ல!
இந்த அடக்குமுறைகள் திராவிட மாடல் விடியல் முதல்வருக்கு தெரியாமல் நடக்கின்றது என்று மெத்த படித்த அறிவாளிகள் சிலர் கூறலாம்; ஆனால் அதை நம்புவதற்க்கு தூத்துக்குடி மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
அடக்கு முறைகள் நிகழ்த்தப்படுவதை திராவிட மாடல் அரசின் முதல்வரின் கவனத்திற்கு மக்களே கொண்டு சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு அதிமுக இதுவரை அஞ்சலி செலுத்தியதில்லை; ஆனால் திமுக அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது, அஞ்சலி செலுத்தப்போவதாக அறிவித்துவிட்டு மறுபுறம் மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது பச்சை துரோகமில்லையா? இதுதான் திராவிட மாடல் அடக்குமுறை போல!
தூத்துக்குடி மக்களின் முதன்மையான கோரிக்கையான சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை மூடு என்ற கோரிக்கையை திராவிட மாடல் முதல்வர் கண்டுகொள்ளாமல் மௌனம் காக்கிறார் ஏன்?
பாஜக வந்துவிடும் என்று திமுக கூட்டணி கட்சியினரும் அதன் ஆதரவு இயக்கங்களும் திமுக பின்னால் ஒளிவது பாஜக நுளைவதையும் தடுக்காது ஸ்டெர்லைட்டின் அத்துமீறலையும் தடுக்காது. களத்தில் போராடும் மக்கள் மீது திமுக ஏவும் அடக்குமுறையை வெளிப்படையக அனைவரும் கண்டிக்க வேண்டும்.
திமுகவால் பாஜக நுளைவதை தடுத்துவிட முடியும் என்று நம்புவது அரசியல் முதிர்ச்சியின்மையே காட்டுகின்றது.
பா.ஜ.க.வையும், ஸ்டெர்லைட்டையும் களத்தில் போராடி மட்டுமே வீழ்த்த முடியும்.
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக விரட்ட சமரசமின்றி போராடும் தூத்துக்குடி மக்களுடன் களத்தில் இணைவோம், ஸ்டெர்லைட் போராட்ட வழியில் கார்ப்பரேட் கொள்ளையை முறியடிப்போம்.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம். – 9385353605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க