முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10 சதவீதம் இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. முதுநிலைப் படிப்பில் 10 சதவீத உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என அறிவித்தார்கள். இதை எதிர்த்து அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் மனு போட்டார்கள்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகம் என்பது தமிழக அரசின் நிதியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை கொண்டுள்ளது. மத்திய அரசு சில படிப்புகளுக்கு நிதி உதவி தருகிறது என்பதற்காகவே அதன் இட ஒதுக்கீடு கொள்கையை தமிழக பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த முடியாது. தமிழகத்தில் வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடே தொடரும் என அறிவித்தார்கள். அதை தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
படிக்க :
அப்படி என்றால் இந்த நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செயல்படும் அளவுக்கு அவருக்கு துணிச்சலை கொடுத்தது யார்? பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங் பரிவாரக் கும்பல்தான்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தரை நியமிப்பது ஆளுநர்தான். அந்த அடிப்படையில் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்களை துணைவேந்தராக நியமித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழகத்தில் காலூன்ற வைப்பதற்கு அரும்பாடு படுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தத் துணைவேந்தர்களை வைத்து இன்னொரு அதிகார மையத்தை உருவாக்கி தமிழகத்திற்கு கட்டுப்படாமல் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை நடைமுறைப்படுத்தி விட முயற்சிக்கிறார்கள்.
அதனால்தான் இவர்கள் தாங்களே சொல்லிக் கொள்ளும் சட்ட திட்டங்களுக்கு கூட கட்டுப்படாமல் மீண்டும் மீண்டும் மத்திய அரசு கொண்டுவந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நினைக்கிறார்கள்.
பல்லக்குத் தூக்கும் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பிற்போக்கு கும்பலிடம் பணிந்தது திராவிட மாடல் அரசு; அதைத்தொடர்ந்து சிதம்பரம் தீட்சிதர் கும்பலிடம் தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்திக் கொண்டது. இவை இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு மேலும் துணிச்சலைத் தருகிறது.
ஆகவே, காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு துணைபோகும் துணைவேந்தர் குமார் போன்றவர்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியது அவசியம். பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் உடனடியாக இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். பாசிஸ்டுகள் எதிர்க் கருத்தை கண்டு அஞ்சுபவர்கள் அதனால் நாம் துணிச்சலாக ஒன்றுபட்டு எதிர்த்து களமாடுவோம்.

ரவி
Related