மதுரை காமராஜர் பல்கலையில் ஒப்பந்த ஊழியர்கள் 135 பேர் பணி நீக்கம் !

குறைந்த சம்பளத்தில் உழைப்பை சுரண்டிய நிர்வாகம் அவர்களை பல்கலைக் கழகத்தைவிட்டு தூக்கிறிந்துள்ளது. “நிதி நெருக்கடிக்கு நாங்கள் காரணம் இல்லை, தவறான நிர்வாகமே காரணம்” என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

0
துரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் ஒருங்கிணைந்த ஊழியர்கள் 135 பேர் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து போராடிவந்த ஊழியர்கள் ஏப்ரல் 21 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் வெளியேற்றப்பட்டனர்.
மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய அவர்கள் பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போராட்ட இடத்தில் இருந்து காலி செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் போலீசுத் துறையை ஏவிவிட்டுள்ளது. அவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக பல்கலைக் கழகத்தில் வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல் பணியில் இருந்து 135 போரையும் நீக்கியுள்ளது நிர்வாகம்.
படிக்க :
♦ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அடுத்த RSS துணைவேந்தர் யார்? 
♦ நிதி நெருக்கடியால் ஸ்தம்பிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் !
தங்களின் வேலை எப்போதாவது முறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில்தான் மிகவும் சொற்ப சம்பளத்திற்கு வேலை செய்துவந்துள்ளனர் ஒப்பந்த ஊழியர்கள். நிதிப் பற்றாக்குறையை காரணம்காட்டி, குறைந்த சம்பளத்தில் உழைப்பை சுரண்டிய பல்கலைக் கழக நிர்வாகம் அவர்களை பல்கலைக் கழகத்தைவிட்டு தூக்கிறிந்துள்ளது. “நிதி நெருக்கடிக்கு நாங்கள் காரணம் இல்லை, பல்கலைக் கழகத்தின் தவறான நிர்வாகமே காரணம்” என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
“சேவ் எம்கேயூ” அமைப்பின் செயலாளர் மற்றும் பேராசிரியர் ஆர். முரளி, பல்கலைக் கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், முக்கிய வருவாய் ஆதாரமான தொலைதூரக் கல்வித் துறை மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறினார். அதாவது, தற்போது நடக்கும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் ஆகியவற்றால், ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த தொலைதூரக்கல்வி துறையை பல்கலைக் கழகம் நிர்வாகம் அழித்துவிட்டது.
பல்கலைக் கழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், அந்த நிர்வாகம் ஒருபோதும் ஆட்சேர்ப்பு குறித்த தெளிவான கொள்கையைக் கொண்டிருந்ததில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களை பத்தாண்டுகளாக சுரண்டிய பிறகு அவர்களை முறைப்படுத்துவது வழக்கம், ஆனால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேப்போல், கடந்த பிப்ரவரி மாதம் முறையாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. நிதி நெருக்கடியை சமாளிப்பதாகக் கூறி பல்வேறு முறைகேடுகள் தில்லு முல்லு வேலைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் ஈடுபட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, பங்களிப்பு ஓய்வூதிய நிதியை சம்பள தருவதற்கு பயன்படுத்துவது அம்பலமானது. மேலும் கார்பஸ் எனப்படும் நிதியையும் முறையாக பராமரிக்கவில்லை. இந்த அனைத்து நிதியும் போராசிரியர்கள் வேலை செய்யும்போது பிடித்தம் செய்யப்பட்டு, பணி ஓய்வு பெரும் காலத்தில் வழங்கப்படுவதாகும். இந்த நிதியில் கை வைப்பது என்பது மிகவும் ஆபத்தானது என்றும், பல்கலைக் கழகத்தில் ஊழல் முறைகேடுகளே நிதி நெருக்கடியில் சிக்குவதற்கும், ஓய்வூதிய நிதியில் சம்பளம் வழங்குவதற்கு காரணம் என்கிறார்கள் பேராசிரியர்கள்.
ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு, மொத்த நிதியையும் காலிசெய்துவிட்டு ஒப்பந்த ஊழியர்களை பணியிலிருந்து துரத்தியடிப்பதென்பது அயோக்கியத்தனம். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இந்த அயோக்கியத்தனத்தை, ஊழல் முறைகேடுகளை, நிர்வாக சீர்கேடுகளை விசாரித்து உரிய நடவடிக்கையை தமிழக உயர்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக் கழக நிர்வாகத்தால் நீக்கப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு உடனே பணிநியமனம் வழங்கப்பட வேண்டும். போராடும் ஊழியர்களுடன் போராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மதுரைக் காமராஜர் பல்கலைக் கழக நிர்வாகத்தின் அடாவடித்தனங்களை முறியடிக்க போராடுவோம்.
புகழ்  
செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க