மேற்குவங்கம்: பள்ளிச் சேவை ஆணைய ஆட்சேர்ப்பு ஊழல் – மலைபோல் குவியும் மக்கள் பணம்!

மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலைபோல் குவியும் போல் இருக்கிறதே!

0

மேற்கு வங்க பள்ளிச் சேவை ஆணையம் (SSC) ஆட்சேர்ப்பு ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் ஜூலை 23 அன்று பார்த்தா சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார்.

மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், குரூப் C மற்றும் D பணியாளர்கள் மற்றும் அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.

ஜூலை 22 அன்று, முகர்ஜியின் வீட்டில் இருந்து 21.90 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜூலை 27 அன்று மாலை, அமைச்சரின் கூட்டாளிகளில் ஒருவரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஒன்றில் இருந்து, 28 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை அமலாக்க இயக்குனரகம் (ED) கைப்பற்றியது. இந்த இரண்டு இடங்களில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளின் அளவு 50 கோடியைத் தாண்டியுள்ளது. கொல்கத்தாவில் சமீப காலங்களில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய பணம் இதுவாகும்.

ஜூலை 27 அன்று இரவு வரை பணத்தை எண்ணும் பணி தொடர்ந்தது. ED அதிகாரிகள் ரூ.29 கோடி ரொக்கம் மற்றும் ஐந்து கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன என்று கூறியது. இது குறித்து கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த ஊழலில் பணப் பட்டுவாடாவை ED கண்காணித்து வருகிறது.


படிக்க : பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !


கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மொத்தம் மூன்று இடங்களில் ED அதிகாரிகள் ஜுலை 27 அன்று சோதனை நடத்தினர். தெற்கு கொல்கத்தாவில் உள்ள ராஜ்தங்கா மற்றும் நகரின் வடக்கு எல்லையில் உள்ள பெல்காரியாவில் உள்ள சொத்துக்கள் சோதனையிடப்பட்டன. மூவருக்கும் முகர்ஜியுடன் தொடர்பு இருப்பதையும், சொத்துக்கள் இருப்பதையும் விசாரணையில் உறுதி செய்தது ED.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழலை விசாரிக்கும் ED, மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவரான TMC MLA மாணிக் பட்டாச்சார்யாவை விசாரணைக்குட்படுத்தியது. ஜூலை 22-ம் தேதி அவரது வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தினர். “வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரொக்க தொகையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சரியான தொகையை அறிய மூன்று நோட்டு எண்ணும் இயந்திரங்களை கொண்டு வந்துள்ளோம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார். சோதனையின்போது பல “முக்கியமான” ஆவணங்களும் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜூலை 28 அன்று நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைமை கூட்டத்தில், பார்த்தா சாட்டர்ஜியை கட்சியில் இருந்து இடைநீக்கம், பொதுச் செயலாளர் மற்றும் தேசிய துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது செய்யப்பட்டார். பார்த்த சாட்டர்ஜி பொறுப்பில் இருந்த துறைகளில் மாநில தொழில்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறைகளும் அடங்கும். சட்டர்ஜி 2014 முதல் 2021 வரை கல்வித் துறை அமைச்சராக இருந்தார்.


படிக்க : ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி


மேற்கு வங்கத்தின் ஒரு அமைச்சரின் ஒரு துறையிலேயே 50 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கிறது என்றால், அனைத்து கறைபடிந்த அமைச்சர்களையும் வீதிக்கு இழுத்தால் பல கோடிகள் மலை போல் குவியும் போல் இருக்கிறதே! கார்ப்பரேட் முதலாளிகளின் பாகாசுர ஊழல்களுக்கு அடுத்த கட்டத்தில் இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் தான் வளம்வருகிறார்கள்.

உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, இஞ்சம் முறைகேடுகளின் ஈடுபட்டு கொள்ளையடித்து, பொதுத்துறைகளில் கொள்ளையடித்து கொழுத்து வரும் இதுபோன்ற அமைச்சர்களை ஒழிக்க வேண்டும் என்றால், ஊழலின் ஊற்றுக்கண்ணான முதலாளித்துவத்தையும், அதை பாதுகாக்கும் அரசு கட்டமைப்பையும் அடித்து நொறுக்கும் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் இறங்க வேண்டும் என்பதே ஒரே வழி!


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க