நேற்றைய நாள் (09.07.2022) அரங்கேறிய, இலங்கை உழைக்கும் மக்களின் பேரெழுச்சி நடவடிக்கையைப் பார்த்து, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளின் இதயங்கள் பெருமகிழ்ச்சியால் நிறைந்திருக்கின்றன. ராஜபக்சே கும்பலை ஒத்த உலகெங்கிலும் உள்ள பாசிஸ்டுகளுக்கோ தங்கள் எதிர்காலத்தை நினைத்து வயிறு கலங்கியிருக்கும்.

09.07.2022 அன்று காலிமுகத்திடல் போராட்டம் 90-வது நாளை எட்டுவதை ஒட்டி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தார்கள் போராட்டக்காரர்கள். அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தின் ஒருபகுதியாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அதிபர் செயலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளனர். தற்போது வரை அதை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதே நேரத்தில் கொழும்பில் இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடும் மக்களால் முற்றுகையிடப்பட்டது. அவரது வீடு தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. அதிபர் செயலகத்திலிருந்து, ராணுவத்தின் உதவியுடன் தப்பியோடிவிட்டார் கோத்தபய. தற்போதுவரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதிபர் செயலகத்தையும் கோத்தபயவின் அதிகாரப்பூர்வ இல்லமான அலரி மாளிகையையும் கைப்பற்றிய தருணத்தில் நடந்த நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை.

அலரி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து நீந்தி மகிழ்ந்தனர். உணவகத்திற்கு சென்று சேமித்து வைத்திருந்த உணவை உண்டு பசியாறினர். நாற்காலிகளில் அமர்ந்து பார்த்தனர். சொகுசுக் கட்டிலில் படுத்துக் களைப்பாறினர். இவ்வாறெல்லாம் தங்கள் வெற்றிக்களிப்பை வெளிப்படுத்திய மக்கள், அங்கிருந்த எந்தப் பொருட்களையும் சேதப்படுத்தவில்லை என்பது முக்கியமானது.

மேலும் கோத்தபய-வின் இல்லத்தில் கட்டுக்கட்டாக பதுக்கிவைக்கப்படிருந்த ரூபாய் நோட்டுகளை (1.78 கோடி) கைப்பற்றிய மக்கள், அதை போலீசு உயர் அதிகாரியிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இது போராடும் மக்களை இலட்சியமற்ற வன்முறையாளர்களாகவும் அராஜகப் பேர்வழிகளாகவும் சித்தரிக்கும் ஆளும் வர்க்கங்களின் பிரச்சாரத்திற்கு கிடைத்த செருப்படி.


படிக்க : இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை


மக்கள் எழுச்சியின் அழுத்தம் காரணமாக, கோத்தபய ராஜபக்சே வரும் 13-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவியாக தானும் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்க. அவர் தலைமையில் பொறுப்பேற்றிருந்த அமைச்சர்களும் ஒவ்வொருவராக தங்களது பதவி விலகலை அறிவித்து வருகிறார்கள்.

கடந்த 05.07.2022 ஆம் தேதி காலி முகத்திடல் போராட்டத்தின் 90-வது நாளை முன்னிட்டு ஆறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய பிரகடனத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்தார்கள் போராட்டக்காரர்கள். அதில் முதன்மையான கோரிக்கை, கோத்தபய – ரணில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே. நேற்றைய பேரெழுச்சியின் மூலம் இலங்கை மக்கள் இதை சாதித்துள்ளார்கள்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளின் உழைக்கும் மக்கள் இலங்கை மக்கள் பேரழுச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்புரட்சிகர நடவடிக்கையை உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களும் புரட்சிகர சக்திகளும் ஆரவாரத்தோடு வரவேற்பதைப் போல, நாமும் நெஞ்சார வரவேற்கிறோம். இலங்கை உழைக்கும் மக்களுக்கும் அங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

***

எனினும் புரட்சிப் போராட்டத்தில் தீர்மானகரமான வெற்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமே முழுமையடைகிறது. அந்த வகையில் இலங்கை உழைக்கும் மக்கள் தங்கள் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான தருணத்தில் உள்ளார்கள்.

மக்கள் பேரெழுச்சியால் இலங்கை குலுங்கிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்டு மேலாதிக்க வெறிபிடித்த கழுகுகள் இலங்கையை சுற்றி வட்டமடித்து வருகின்றன. அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான மாற்றுத் திட்டத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“மக்களது அதிருப்தியை போக்குவதற்கு, நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் தீர்வுகளை அடைய விரைவாக முன்வரவேண்டும்” என்று அறைகூவியுள்ளது அமெரிக்கா.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை தாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

போராடும் மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றன. மக்கள் போராட்டங்களை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். ‘அமைதியை நிலைநாட்ட’ போலீசு மற்றும் ராணுவத்தினருக்கு ஒத்துழைக்க முன்வருமாறு போராடும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், ராணுவத் தளபதி.

அரசியல் அதிகாரம் தற்போதும் ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருபுறம் போராடும் மக்களை போலீசு மற்றும் ராணுவத்தை வைத்து ஒடுக்கிக் கொண்டே, மறுபுறம் மீண்டும் ‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’, ‘தேர்தல்’ என்ற பெயரில் தங்களுக்கு சேவைசெய்யும் அரசுக்கட்டமைப்பை காப்பாற்றிக் கொள்வதற்கு எத்தனிக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

இந்த எத்தனிப்புகளை முறியடித்து உழைக்கும் மக்கள் தங்களது சொந்த அரசியல் அதிகாரத்தை நிறுவிக் கொள்ளும் திசையில்.. தேசிய இனங்களின் தன்னுரிமையை அங்கீகரிக்கும் வகையிலான, ஏகாதிபத்திய சூறையாடலை ஒழித்துக் கட்டி தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டும் வகையிலான அரசியல் அதிகாரத்தை நிறுவும் திசையில் இப்பேரெழுச்சி முன்செல்ல வேண்டியுள்ளது. இதற்கிடையில் ஆளும் வர்க்கங்களின் திசைதிருப்பல்கள், சூழ்ச்சிகள் மற்றும் அவர்கள் மக்கள் முன்வைக்கும் போலித் தீர்வுகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டியுள்ளது. இக்கடமை இலங்கை புரட்சிகர சக்திகளுக்கு உரித்தானதாகும்.


படிக்க : இலங்கையின் விடுதலைக்குத் தேவை மக்கள் அடித்தளம் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி!


அந்தவகையில், இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியானது மக்களிடம் பல்வேறு கருத்துப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளது. காலி முகத்திடல் பிரகடனத்தை ஆதரித்து மக்கள் போராட்டங்களில் அக்கட்சியும் அதன் மக்கள் திரள் அரங்குகளும் பங்கேற்றுள்ளன. வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை இப்பேரெழுச்சியில் இணைப்பதற்கு அக்கட்சி தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துவருவதை நாம் வரவேற்கிறோம்.

ஆளும் வர்க்கங்கள் முன்வைத்த தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கை தோற்று திவாலாகிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய பாதையொன்றுதான் இலங்கை மக்களுக்கு விடிவைத் தரும் ஒரே பாதை. அதை நோக்கி முன்னேற வேண்டுமானால் உழைக்கும் வர்க்கம் அரசியலதிகாரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

மஹிந்தாவுக்கு பதில் ரணில் மாற்றாக முன்வைக்கப்பட்டதைப் போல, வேறொரு ‘மீட்பரை’ ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கக் கூடும். அதை உழைக்கும் மக்கள் புறந்தள்ள வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டு புரட்சிகர வர்க்கங்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உடனடியாக ஒரு இடைக்கால அரசமைக்கப்பட வேண்டும். அதிலிருந்தே அடுத்தடுத்த நகர்வுகளுக்கு முன்னேற முடியும்.

05.07.2022 அன்று வெளியிடப்பட்ட காலிமுகத்திடல் பிரகடனமே ‘இடைக்கால அரசு’, ‘மக்கள் பங்கேற்புடன் புதிய அரசியலமைப்பு’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் திசைதிருப்பல்களை முறியடித்து, இப்பிரகடனத்தை உறுதியாக அமல்படுத்தப் போராடுவதில் புரட்சிகர சக்திகளின் ஊக்கமான தலையீடு அவசியமாகிறது.


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
10.07.2022