க்கள் பேரெழுச்சியின் முதல் சுற்றில் (மே 9), தனது பிரதமர் பதவியை துறந்தோடிவிட்டு ரகசியமாக பதுங்கிவிட்டார் மஹிந்த ராஜபக்சே. சரியாக இரண்டு மாதங்கள் கழித்து எழுச்சியின் இரண்டாவது அலை. மக்கள் பெருந்திரள் அதிபர் மாளிகையை கைப்பற்றிய ஜூலை 9 எழுச்சியில், நாட்டை விட்டே துரத்தப்பட்டார் கோத்தபய. மாலத்தீவு, சிங்கப்பூர் என தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் போராட்டங்களை எதிர்நோக்க, தஞ்சமடைய நாடு இல்லாமல் சர்வதேச அகதியாய் திரிந்து கொண்டிருக்கிறார் அவர். பிற நாட்டுப் பாசிஸ்டுகளுக்கும் பீதியூட்டின இப்போராட்டங்கள்.

மறுமுனையில் ராஜபக்சே கும்பலை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, அவ்விடத்தில் தங்களது அடிமைச் சேவகன் ரணிலை அமர வைக்க எண்ணிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய ஆளும் வர்க்கங்கள், இம்மக்கள் எழுச்சியின் பின்னணியில் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள். இடைக்கால அதிபராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார் ரணில்.

ஆனால் ஆர்ப்பரித்த மக்கள் எழுச்சி அடங்கவில்லை. “கோட்டா கோ ஹோம்” என்றபடி தொடங்கிய போராட்டமாக இருந்தாலும் ‘புதிய அரசியலமைப்புச் சட்டம்’, ‘மக்கள் பங்கேற்புடன் கூடிய அரசாங்கம்’ என போராட்ட முன்னணியாளர்களால் எழுச்சியானது அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டப்பட்டிருந்தது. போராட்டம் ரணிலுக்கு எதிராக திரும்பத் தொடங்கியது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகமும் மக்களால் முற்றுகையிடப்பட்டது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்தையும் முற்றுகையிடும் நோக்கில் பெருந்திரளான மக்கள் விரைந்து கொண்டிருந்தார்கள்.


படிக்க : மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ரணில் அதிபரானார் – இது இலங்கை மக்களுக்கு விடப்பட்ட சவால் !


பிரதமர் அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளான சில மணி நேரத்தில், மக்கள் எழுச்சியை ரணில் இவ்வாறு வர்ணித்தார்:

“ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரச சொத்துக்களை அழிக்க அனுமதிக்க முடியாது”; “எனது அலுவலகத்தில் இருப்பவர்கள் செயல் தலைவர் என்ற பொறுப்பை நான் நிறைவேற்றுவதைத் தடுக்க விரும்புகிறார்கள். அவர்கள் நமது அரசியல் அமைப்பை கிழித்தெரிய அனுமதிக்க முடியாது.”

மக்கள் எழுச்சி அடுத்த கட்ட இலக்குடன் முன்னேறுவதை கண்டு அச்சமுற்ற ஆளும் வர்க்கம், போராட்டத்தை ஒடுக்குவதற்கு வெளிப்படையாக களமிறங்கிவிட்டது என்பதற்கான சமிஞ்சையாக இருந்தது ரணிலின் பேச்சு. எழுச்சியை பலவந்தமாக ஒடுக்குவதற்கான உட்சபட்ச அதிகாரம் ராணுவம் மற்றும் போலீசுத் துறைக்கு வழங்கப்பட்டது.

இதனை உணர்ந்த போராட்ட முன்னணியாளர்கள் அதிபர் அலுவலகம் மற்றும் பிற அரசு கட்டிடங்களை கைப்பற்றி இருந்த மக்களை அவற்றிலிருந்து வெளியேறச் சொல்லி அழைத்தனர். கட்டுப்பாடுடனும் ஒழுங்குடனும் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார்கள் மக்கள்.

***

இதற்கிடையில், இலங்கை வரலாற்றிலேயே முதல்முறையாக அதிபர் தேர்தல் நாடாளுமன்ற அவையில் நடைபெற்றது. ராஜபக்சே கும்பலுடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டு, அக்கும்பலது ஊழல் சொத்துக்களை பாதுக்காப்பவர் என்று ரணிலைக் கருதிய மக்கள், அவரைத் தோற்கடிக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு அறைகூவினார்கள். ஆனால் நாடாளுமன்ற பன்றிகள் ஆளும் வர்க்கத்தின் விருப்பத்தையே வழிமொழிந்தன.

ரணிலுக்கு முக்கியப் போட்டியாளராக இருந்த சஜித் பிரேமதாச சொல்லிவைத்தார் போல கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கிக் கொள்ள, டலஸ் அழகம்பெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரை தோற்கடித்து 134 ஓட்டுகள் பெற்று அதிபர் தேர்தலில் வென்றார் ரணில் விக்ரமசிங்க.

தன் கட்சிக்கு ஒரு இருக்கை கூட இல்லாத ரணிலின் வெற்றிக்கு, நாடாளுமன்றத்தில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள ராஜபக்சேக்களின் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவே அடித்தளமாக இருந்தது. மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உள்ளிட்ட சில தமிழ் குழுக்களும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ளன.

தமிழர் கட்சிகளில் அதிக இருக்கைகளைக் கொண்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு டலஸ் அழகம்பெருமவை ஆதரிப்பதாகச் சொன்னாலும் ரகசிய வாக்கெடுப்பின்போது அக்கட்சியின் ஒரு அணி ரணிலுக்கு வாக்குசெலுத்தியதாகச் சொல்கிறார்கள். தேர்தலுக்கு முதல்நாள் இரவு த.தே.கூ கூட்டிய கூட்டத்தில் இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் கலந்துகொண்டதாகவும் அவர் ரணிலை ஆதரிக்கும்படி கோரியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மலையகத் தமிழர்களின் ஓட்டு வங்கியைக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இந்திய ஆளும் வர்க்கங்களோடு நெருக்கமான உறவு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 21 அன்று அதிபராக பதவியேற்கிறார் ரணில். மறுநாள் அதிகாலை (ஜீலை 22) காலிமுகத்திடல் போராட்ட முகாம் ராணுவத்தினரால் வேட்டையாடப்படுகிறது. திடீரென்று பெருத்த எண்ணிக்கையில் மைதானத்தைச் சுற்றி வளைத்த ராணுவம் முகாம்களை அடித்து நொறுக்கியது. போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்கி விரட்டப்படுகிறார்கள். அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்லவந்த ஆம்புலன்ஸைக்கூட தடுத்து நிறுத்தியுள்ளது ராணுவம். 24 மணி நேரத்திற்குள் தான் யாரென்று காட்டிவிட்டார் ரணில்.

கோத்தபய ஆட்சியின் கீழ் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, காலிமுகத்திடல் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய ரணிலின் நோக்கம் ராஜபக்சேக்களை விரட்டிவிட்டு தான் அதிகார பீடத்தைப் பிடித்துக் கொள்வதுதான் என அம்பலமாகிவிட்டது.

ராணுவச் சூறையாடலுக்கு ஒருநாள் முன்னர் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான், அதிபர் செயலகம் அமைந்துள்ள காலிமுகத்திடல் மைதானத்திற்கு பதிலாக, விஹாரமகாதேவி பூங்காவை போராட்டக்காரர்களுக்கு ஒதுக்கித் தரப்போவதாக கூறியிருந்தார் ரணில். மேலும் போராட்டக்காரர்களில் ஒருபிரிவினரும் முறைப்படி போராட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறப்போவதாக அறிவித்திருந்தனர். இச்சூழலில், அதுவும் முன்னறிவிப்பில்லாமல் நடைபெற்ற காலிமுகத்திடலில் தாக்குதல் மக்களை அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டே அரங்கேற்றப்பட்ட பாசிச நடவடிக்கையாகும்.

அடக்குமுறை மட்டுமல்லாமல் தமது கேடுகெட்ட அவதூறுகள் மூலமும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியது ரணில் அரசு. போராட்ட முன்னணியாளர்கள் சிலரது வங்கிக் கணக்கில் திடீரென பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும் வெளியிலிருந்து சிலர் பணம் கொடுத்துதான் காலிமுகத்திடல் போராட்டத்தை இயக்குகிறார்கள் என்றும் வதந்தி பரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த இலங்கை புலனாய்வுத்துறையே அவ்வாறான தகவல் – வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பல கோடி ரூபாய் – போலி என்று அறிவித்துள்ளது. இருப்பினும் கைக்கூலிகளின் அவதூறுகள் தொடருகின்றன.

‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ என்ற பெயரில் ரணில் பலரை நியமித்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினரும் ரணிலின் பள்ளி நண்பருமான தினேஷ் குணவர்த்தன பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜபக்சேக்களுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுகிறார். கோத்தபய ராஜபக்சேவால் முன்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றவர்களையே, ரணில் மீண்டும் அமைச்சர்களாக நியமித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, அனைவரின் பங்கேற்போடும் அமைக்கப்படுவதற்குப் பெயரே அனைத்துக் கட்சி அரசாங்கம். ஆனால் ரணிலோ தனக்கு தோதானவர்களை தன் விருப்பம் போல நியமித்து வருகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வழமையான போலித்தனங்களைக்கூட கையாள மறுக்கிறார் ரணில்.

***

ஒருபக்கம் ராணுவமும் போலீசும் போராடுபவர்களை வேட்டையாடி வருகிறது; முன்னணியாளர்களை கைதுசெய்து போராட்டங்களை நசுக்கும் நயவஞ்சக வேலையில் இறங்கியிருக்கிறது ரணில் அரசு. மறுமுனையில் “கோத்தபய ஓட்டிவிட்டார்; போராட்டங்களை ரணிலுக்கு எதிராகத் தொடருவது பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும்” என்று பிரச்சாரம் செய்கிறது ஆளும் வர்க்கம். ‘அரசியல் உறுதித்தன்மையை விரைந்து நிலைநாட்ட வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது அமெரிக்கா.


படிக்க : இலங்கை உழைக்கும் மக்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகள்!


உண்மையில் ரணில் என்ன செய்யப்போகிறார். எந்தப் பாதையில் போனதால் இலங்கை திவாலகிப் போனதோ அதே பாதையில், ஐ.எம்.எஃப், உலக வங்கி விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றுவதன் வடிவில் அதே மறுகாலனியாக்கப் பாதையில் தீவிரமாகச் செல்வார். ‘அரசியல் உறுதித்தன்மையை’ நிலைநாட்டுவதைப் பற்றி அமெரிக்கா பதறுவதற்குப் பின் உள்ளது இவையே.

அடக்குமுறைகளுக்கு அஞ்சாமலும் அவதூறுகள், திசைதிருப்பல்களுக்கு பலியாகமலும் இலங்கை உழைக்கும் மக்களின் எழுச்சி அடுத்த திசையை நோக்கி நகர வேண்டியிருக்கிறது.

‘அனைத்துக் கட்சி அரசாங்கம்’ எனும் ரணிலின் மக்கள் விரோத ஏற்பாட்டை தூக்கி வீசிவிட்டு, காலிமுகத்திடல் பிரகடனம் முன்வைப்பதைப் போல, ‘போராடும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கூடிய ஒரு தற்காலிக அரசாங்கம்’ உடனடியாக நிறுவப்பட வேண்டும். அதுவே விடியலை நோக்கிய பாதையின் தொடக்கமாகும். ராஜபக்சேக்களைப் போல ரணிலையும் நாட்டைவிட்டே துரத்தும்படியான, எழுச்சியின் மூன்றாம் சுற்றை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது சர்வதேச பாட்டாளி வர்க்கம்.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
26.07.2022

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க