மோடி 2014 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது மிகப் பரவலாகப் பேசப்பட்டது ‘குஜராத் மாடல்’ என்ற சொல்லாடல். குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த மோடி அம்மாநிலத்தை ஐரோப்பாவுக்கு நிகராக வளர்த்துள்ளதாக ஒரு உலகமகா மோசடி வைரலாக பரப்பிவிடப்பட்டது. உண்மையில் மோடி தலைமையிலான குஜராத் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடு. ஆர்.எஸ்.எஸ். அமைக்க விரும்பிய இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலை. 2002 குஜராத் கலவரத்திற்கு பின்புதான் அம்பானி, அதானி உள்ளிட்ட பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளால் மோடி தத்தெடுத்துக் கொள்ளப்பட்டார்.

அந்த வகையில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி ‘குஜராத் மாடலை’ தேசியமயமாக்கியிருக்கிறது. எங்கெல்லாம் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து காலூன்றியுள்ளதோ, அங்கெல்லாம் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். வேலைசெய்து பல்வேறு மதவெறிக் கலவரங்களை நடத்தியிருக்கின்றது. எட்டாண்டு காலத்தில் சுமார் 10 ஆயிரம் மதக் கலவரங்களை நடத்தியிருக்கின்றன சங்க பரிவார கும்பல்கள்.

இசுலாமியர்கள் நிலை :

பெரும்பான்மை இந்துக்களுக்கும் இந்த நாட்டிற்கும் முசுலீம்களால்தான் ஆபத்து என்ற கருத்தை கிட்டத்தட்ட நூறாண்டுகளாகப் பிரச்சாரம் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைக் கட்டமைப்பதற்காகவே காவி கும்பல் பல வழிகளில் வேலைசெய்கிறது. மாட்டுக் கறி, லவ் ஜிகாத், மதமாற்றம், நாட்டுக்கு எதிரான சதி என பல காரணங்களை வைத்துள்ளது. இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்றபடி பசுப்பாதுகாப்புப் படை, லவ் ஜிகாத் எதிர்ப்புப் படை என பல வன்முறை அமைப்புகளையும் கட்டிவைத்துள்ளது.

2016 தில்லியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கூறி அக்லக் என்ற முதியவர் அடித்தே கொல்லப்பட்டார். 2017-ல் மாட்டைக் கடத்துவதாகக் கூறி ஹரியானாவைச் சேர்ந்த பால் வியாபாரி பெஹ்லுகான் இந்துமதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பின் 2019-ம் ஆண்டின் அறிக்கைப்படி, அதுவரை குறைந்தபட்சம் 44 பேர் பசுப்பாதுகாப்பு குண்டர்களால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு காஷ்மீரின் கத்துவா பகுதியில் எட்டு வயதேயான முசுலீம் சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி முசுலீம் என்பதாலும் வல்லுறவு குற்றவாளி இந்து என்ற ஒரே காரணத்திற்காகவும் குற்றவாளியைப் பாதுகாப்பதற்காக தேசியக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போனது பா.ஜ.க.


படிக்க : சிறுபான்மை சமூகங்களை வஞ்சிக்கும் மோடி அரசு!


முசுலீம்களை நான்காந்தர குடிமக்களாக்க விழையும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இசுலாமிய மக்கள் நடத்திய ஷாகின்பாக் போராட்டங்களையும், ஜே.என்.யு, ஜாமியா பல்கலைக்கழகங்களின் போராட்டங்களையும் கடுமையாக ஒடுக்கியது பாசிச பா.ஜ.க. டெல்லியில் காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் போல உத்தரகாண்ட், அசாம், திரிபுரா, கர்நாடகா என தன்னுடைய இந்துராஷ்டிர சோதனைச் சாலைகளை விரிவுபடுத்திக் கொண்டே உள்ளது ஆர்.எஸ்.எஸ்.

ராம ஜென்ம பூமி இயக்கத்தின்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கலவரம் வெடித்த நிலையில், பெரிய அளவில் சலனங்கள் இல்லாத மாநிலங்களில் திரிபுரா முக்கியமானது. ஆனால் காவி கும்பல் ஆட்சி அமைத்த பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மசூதிகளை அடித்து நொறுக்கியும் முசுலீம்களின் வீடுகளுக்குத் தீவைத்து கொளுத்தியும் வெறியாட்டங்களை நிகழ்த்தியுள்ளது காவி கும்பல். ஹிஜாப் அணியத் தடை, ஹலால் ஜிகாத் என கர்நாடகத்தில் அடுத்தடுத்து இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களை இதுவரை அம்மாநிலம் கண்டதே இல்லை எனலாம்.

தங்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக இசுலாமியர்கள் திரண்டெழுந்து போராடினால் புல்டோசரைக் கொண்டு வீடுகளை இடித்துத்தள்ளுகிறது காவி அரசு. ராமநவமி கலவரங்களின் போதும், நபிகளை அவதூறாகப் பேசிய நுபுர் ஷர்மாவிற்கு எதிராகப் போராடிய போதும் புல்டோசரைக் கொண்டுவந்து போராட்டங்களை ஒடுக்கினார்கள் காவிகள். சட்டவிரோதமான இந்த இடிப்பை நீதிமன்றங்கள் ஆதரித்து நிற்கின்றன. இஸ்ரேலில் யூத இனவெறி அரசு பாலஸ்தீனிய மக்களை ஒடுக்குவதற்கு ஒப்பாக, இந்தியாவில் புல்டோசர் இடிப்பு திகழ்கிறது.

நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்து பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கண்ணைய லால் இரண்டு இசுலாமியர்களால் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக இந்துமதவெறியைத் தூண்ட முயற்சித்த பஜ்ரங்தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஹரியானா மகாபஞ்சாயத்தில் கலந்துகொண்டார்கள். அம்மாநாட்டில் “தேவைப்பட்டால் குஜராத்தை மீண்டும் நடத்துவோம்” “இந்துராஷ்டிரத்தை அடைவதற்கு உயிரையும் கொடுப்போம்” என்று கூச்சலிட்டுள்ளார்கள் காவிகள்.

கடைசியில் இசுலாமியர்களான அந்த இருவரும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் என்று அம்பலமானது. கண்ணைய லால் படுகொலையை வைத்து மிகப்பெரிய மதக்கலவரத்தை நடத்த முயன்ற காவிகளின் சதித்திட்டம் இதன் மூலம் வெளிவந்திருக்கிறது.

பிப்ரவரி 26 அன்று சர்வதேச அளவில் நடைபெற்ற இணையவழியிலான உச்சிமாநாட்டில், இந்தியா இனப்படுகொலைக்கான பாதையில் பயணிப்பதாக ஐநா மன்றத்தில் பொறுப்பு வகிக்கக்கூடியவர்களும் மற்றும் பலதுறை அறிவுஜீவிகள், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். மோடி அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாசிச ஜெர்மனியின் நுரெம்பர்க் சட்டத்துடன் ஒப்பிடத்தக்கது என்று இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறினார்கள்.

இதற்கு முன்னதாகவே, உத்தரகாண்டில் நடைபெற்ற சாமியார்கள் மாநாட்டில் இசுலாமியர்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்துராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்று காவி பாசிஸ்டுகள் வெளிப்படையாக அறைகூவினார்கள்.

தலித்துகள் நிலை :

2016 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டம், மோட்டா சமதியாலா கிராமத்தில் செத்த மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக தலித் குடும்பத்தினர் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு உன்னவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டு ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தலித் இளம்பெண்ணின் உடலை பெற்றோரிடம்கூட ஒப்படைக்காமல் நள்ளிரவிலேயே சட்டவிரோதமாக தீ வைத்து எரித்தது உ.பி. போலீசு.

மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக, குஜராத்தில் கட்டி வைத்து அடிக்கப்படும் தலித் குடும்பத்தினர்

தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள், வன்கொடுமைகள், கொலைகள் ஆகியவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே அதிகம் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் அம்மாநிலங்களின் பிற்போக்குத் தன்மை. இரண்டாவது முக்கியக் காரணம் அதிகாரத்திலிருக்கும் காவிகள், ஆதிக்க சாதி வெறியர்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறார்கள் என்பதுதான். தேசிய குற்றவியல் ஆணவக் காப்பகப் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்களில் 25.3 சதவிகிதம் யோகி தலைமையிலான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நடக்கிறது.

இடைச்சாதிகளில் உள்ள சாதி வெறியர்கள் இயல்பாக இந்துமதவெறியர்களின் கூட்டாளியாகவும் உள்ளார்கள். தமிழகத்தில் பொன்பரப்பியில் நடந்த கலவரத்தில் வன்னியர் சாதிவெறியர்களோடு சேர்ந்துகொண்டு தலித் மக்களின் வீடுகளைச் சூறையாடியது இந்து முன்னணியும்தான்.


படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !


கிறித்தவர்கள் மீதான தாக்குதல் :

கிறித்தவ தன்னார்வ நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு இந்துக்களை மதமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று கூறும் காவிகள், நாடுமுழுக்க கிறித்தவர்கள் மீது பரவலான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு கிறித்துமஸ் தினத்தில் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமதவெறி அமைப்புகள் உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடாகா என பல மாநிலங்களிலும் தேவாலயங்களின் மீது தாக்குதல்களைத் தொடுத்தனர். கிறிஸ்மஸ் தாத்தாவின் உருவ பொம்மையைக் கொளுத்தினார்கள். கிறித்தவ பள்ளிகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில், தென் மாவட்டங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு கிறித்துவப் பள்ளிகள் மீது மதமாற்றக் குற்றஞ்சாட்டி, இந்து முன்னணி பல முறை கலாட்டாக்களில் ஈடுபட்டிருக்கிறது.

இந்துராஷ்டிர கொடுங்கோல் அரசு :

1976 கணக்கெடுப்பின் படி, நாடாளுமன்றத்தில் 9.3 சதவிகிதமாக இருந்த முசுலீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாசிஸ்டுகள் தேசிய அரசியலில் செல்வாக்கடைந்த பிறகு, 2019 ஆம் ஆண்டு 5 சதவிகிதமாகச் சுருங்கியது.

பெரும்பான்மை ஓட்டுக் கட்சிகள் இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள். நாம் இந்துமதவெறி பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு ஆளாவோம் என்று அவர்கள் கருதுகிறார்கள். பாரம்பரியமாக இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் பெரிய கட்சிகளும்கூட அவர்களுக்கு பொதுத்தொகுதிகளை ஒதுக்குவதில்லை. முசுலீம்கள் அடர்த்தியாக வாழக்கூடிய தொகுதிகளில் ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டுமே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இந்துமதவெறி அரசியல் மைய நீரோட்டத்தில் செல்வாக்கு செலுத்துகிறது.

காமன் காஸ் (Common Cause) என்ற என்.ஜி.ஓ.வின் 2019 ஆம் ஆண்டின் அறிக்கை, போலீசுத் துறையில் இருக்கக்கூடிய 50 சதவிகிதம் பேர் முசுலீம்களை தன் இயல்பிலேயே வெறுப்பவர்களாக, குற்றவாளிகளாகக் கருதுபவர்களாக உள்ளனர் என்று கூறுகிறது. மேலும் அவர்கள் முசுலீம்களுக்கு எதிரான வழக்குகளை புறக்கணிக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களுக்கான நிதியும் அத்திட்டங்களின் கீழான பயனாளர்களின் எண்ணிக்கையும் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்துள்ளன. இதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியே நாடாளுமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் முசுலீம் மக்களுக்கு எதிராகவும் காவி பாசிச கும்பலுக்கு ஆதரவாகவும் உருக்கி வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இனிமேலும் ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவைப் பற்றி பேச யாருக்கும் துணிவில்லை. தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்கு கூட மென்மையான இந்துத்துவம் பேச வேண்டியிருக்கிறது.

பசுப்பாதுகாப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடைச்சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், பொதுச்சொத்து சேத தடுப்புச் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், உத்தரப் பிரதேசத்தில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை, ஹிஜாபுக்கு தடைவிதித்த நீதிமன்ற உத்தரவு என இசுலாமியர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாகவே பாசிச நடவடிக்கைகள் ஏவப்படுகின்றன.

ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்களாகிவிட்டன. அதாவது அவை கோரிக்கைகளாகிவிட்டன. “நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பு இந்துராஷ்டிரக் கொடுங்கோலாட்சிக்கு உகந்த வகையில் மாற்றப்பட்டுவிட்டது, இனி இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வில்லை” என்பதுதான் இவைகளின் பொருளாகும்.


சந்திரசேகர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க