18.08.2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு!
கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை !

குற்றவாளிகளான போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர் , துணை தாசில்தார் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்!

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா என்ற கார்ப்பரேட் கம்பெனிக்காக போலீசும் அரசும் நிர்வாகமும் சேர்ந்து தூத்துக்குடி மக்களை காக்கை குருவிகளைப் போல சுட்டது. குறிவைத்து மார்பிலும் நெஞ்சிலும் போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக தொண்ணூற்று ஒன்பது நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்கள் நூறாவது நாள் நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றார்கள்.

“லட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து திரண்ட மக்களுக்கு கிடைத்ததோ துப்பாக்கிச்சூடும் அரசு வன்முறையும் தான். மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உட்பட 13 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகி ஆனார்கள். சிலர் அடுத்தடுத்த நாட்களிலும் சில மாதங்களிலும் உயிரிழந்தார்கள். இத்தனை பேரை பலி கொடுத்தாலும் ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடல்களை வாங்க மாட்டோம் என்று உறுதியாக மக்கள் இருந்ததன் விளைவாக மட்டுமே ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.


படிக்க : ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !


போலீசும் மாவட்ட நிர்வாகமும் சேர்த்து நடத்திய மாபெரும் அரசு வன்முறையை டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று எகத்தாளமாக பேசினார் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ரஜினிகாந்தும், அன்றைய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் – இன்றைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனும் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தினர்.

இத்தனைக்குப் பிறகும் அனைத்து படுகொலைகளையும் மூடி மறைக்கவே அன்றைய அரசு முயன்றது. தொடர்ச்சியாக மக்கள் தமிழகம் முழுவதும் போராடியதன் விளைவாக வேறுவழியின்றி நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளை நெருங்கும் நிலையில் தற்பொழுது விசாரணை அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி.சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறியதன் மூலம் போராடிய மக்களை திட்டமிட்டு வேண்டுமென்றே அரசும் போலீசும் சேர்ந்து சுட்டுக் கொன்றது நிரூபணமாகிறது.

மக்களை சுட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இரண்டு துணை தாசில்தார்களிடம் விருப்பம் போல துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையைப் பெற்று இருக்கிறது போலீஸ்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது என்று பதிவு செய்துள்ள ஆணைய அறிக்கையின் வாயிலாக அரச பயங்கரவாதத்தை நம்மால் உணர முடிகிறது.

எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஆனால் படுகாயம் அடைந்தார்கள் போலீஸ் என்று, அன்று போலீஸ் நடத்திய நாடகத்துக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தார்கள் என்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.

போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கிக் குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர் என்றும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போராட்டக்காரர்களை, பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் சுட்டுள்ளனர் என்றும், அப்போதைய ஆட்சியர் வெங்கடேசன் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் என்பதையும் உறுதிசெய்கிறது அறிக்கை.

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது என்றும், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீசு சுடலைக்கண்ணுவை வைத்து மட்டும் 17 ரவுண்ட் சுடவைத்திருக்கிறது போலீசும் நிர்வாகமும்.


படிக்க : சுடுகாட்டு ஜனநாயகம்! உறுதியாய் நின்ற மக்கள்! மக்களிடம் கற்போம்! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடி நீதி பெறுவோம்!


ஒரே போலீசை 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல போலீசுத்துறை பயன்படுத்தியுள்ளதையும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

வேதாந்தா கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக போராடிய மக்களை பழிவாங்கிய இந்த அரசு வன்முறைக்கு காரணமான அத்தனை போலீஸ் உயர் அதிகாரிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடத்தப்பட்டு உச்சபட்ச தண்டனை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அன்றைக்கு அரசின் தலைமை பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் பங்கு குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

மேலும் ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,

தோழர் வெற்றிவேல் செழியன்,

மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க