ம.பி: சிறார் காப்பங்களின் உணவில் முட்டை, இறைச்சியை நிறுத்தும் பாஜக அரசு!

சிறார்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நிறுத்துவதன் மூலம் தனது இந்துராஷ்டிரக் கொள்கைக்காக சிறார் காப்பகங்களில் திணிக்கிறது பாஜக அரசு.

1

முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றை சிறார் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வழங்க மாட்டோம் என்று மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செப்டம்பர் 4 அன்று தெரிவித்தார்.

சிறார் காப்பகங்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க மத்தியப் பிரதேசத்தில் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இது மாநிலத்தில் செயல்படுத்தப்படாது என்று கூறினார்.

மத்தியப்பிரதேச சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகள், 2002-ன் அரசிதழில், மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்ட சிறார் நீதிச் சட்டம் (JJ) 2016-ஐ அமல்படுத்துவது குறித்த அரசிதழில், மாநிலத்தின் சிறார் காப்பகங்களில் வழங்கப்படும் உணவுப் பட்டியலில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் வழங்கப்படுவது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆகஸ்ட் 25-ஆம் தேதி நாடாளுமன்ற மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) வெளியிட்டது.

படிக்க : பொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது !

“ஒவ்வொரு குழந்தை பராமரிப்பு நிறுவனமும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊட்டச்சத்து தரநிலை மற்றும் உணவு அளவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களில், வாரத்திற்கு ஒருமுறை 115 கிராம் கோழிக்கறி மற்றும் வாரத்திற்கு நான்கு நாட்கள் முட்டை, பருப்பு (பருப்பு), ராஜ்மா, சானா, பால் மற்றும் காய்கறிகள் போன்ற பிற உணவுப் பொருட்களும் அடங்கும்.

இந்த அறிவிப்பு குறித்து மாநில உள்துறை அமைச்சர் மிஸ்ராவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “இது மத்தியப் பிரதேசத்தில் அனுமதிக்கப்படாது. இதில் ஏதோ குழப்பம் உள்ளது. மாநில அரசிடம் அத்தகைய திட்டம் எதுவும் நிலுவையில் இல்லை, அது செயல்படுத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், பாஜக-வின் கர்நாடக துணைத் தலைவர் தேஜஸ்வினி அனந்த்குமார், “நமது கர்நாடக அரசு ஏன் மதிய உணவில் முட்டை கொடுக்க முடிவு செய்தது? இவை மட்டுமே ஊட்டச்சத்துக்கான ஆதாரம் அல்ல. சைவ உணவு உண்பவர்களான பல மாணவர்களுக்கும் முட்டை உண்ணவியலாது. ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் உணவு பட்டியல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தீர்ப்பதில் முட்டைகள் இன்றியமையாதவை என்று கூறும் ஒரு கமிஷன் அறிக்கை குறித்து அனந்த்குமார் கர்நாடக அரசிடம் கேள்வி எழுப்பினார். முட்டையால் மட்டுமே ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்க முடியும் என்று நினைப்பது தவறு என்று கூறிய அவர், பருப்பு, முளைக்காய் மற்றும் பிற வீட்டு விளைபொருட்களை மாநில அரசு சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

“சிறார் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது. முட்டைகள்தான் நேரடியாக ஆற்றலை அளிக்கும் ஒரே உணவு” என்று WCD துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் மிகவும் முக்கியமான முட்டை மற்றும் இறைச்சி உணவுகளை சிறார் காப்பகங்களில் மத்தியப்பிரதேச அரசு நிறுத்தவிருக்கிறது. சிறார்களின் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நிறுத்துவதன் மூலம் தனது இந்துராஷ்டிரக் கொள்கைக்காக சிறார் காப்பகங்களில் திணிக்கிறது பாஜக அரசு.

சந்துரு