ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக!

அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

தமிழகத்தில் சாதி, மத கலவரங்கள் மூலம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழ்நாட்டை கைப்பற்ற துடிக்குது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல்.

அந்த நாசகர நோக்கத்திற்காக பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒன்றை நடத்த உள்ளது.

அந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், சாதி, மத கலவரங்களை ஏற்படுத்தி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், நாட்டின் உழைக்கும் மக்கள் ஆகியோருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் முற்றிலும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்கிற இலக்கிலும்,
இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பார்ப்பன பாசிச கும்பலுக்கு எதிரான களம் தான் தமிழ்நாடு என்பதை அறிவிக்கும் விதமாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து அக்டோபர் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க பேரணி – மனித சங்கிலியை தமிழகமெங்கும் நடத்தப்பட உள்ளன.

இதில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் பங்கேற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் என்பது தமிழகத்தில் உள்ள மற்ற அமைப்புகளைப் போன்றதல்ல! அது ஒரு பாசிச அமைப்பு. அதன் வழிமுறையே நாடு முழுவதும் குண்டு வைப்பதும், இஸ்லாமியர்கள், தலித்துகள், கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்வதும், அச்சுறுத்துவதும் அதன் வழிமுறையாகும்.

இதன் நோக்கம் இந்து ராஷ்டிரமே. ஆர்.எஸ்.எஸ் அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரம் என்பது மத சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட, தலித் மக்களுக்கு எதிரான ஒரு பாசிச அரசு தான் என்பதை அவர்களது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசிச அரசை அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அவர்களது லட்சியம்.

உலகத்திலேயே தொடர்ச்சியாக 100 ஆண்டுகள் இயங்கிய ஒரே பாசிச அமைப்பு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே. அந்த அளவுக்கு அதன் உள் கட்டமைப்பு இறுக்கமாகவும், நுணுக்கமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவது நாட்டின் நலம் மீதும், மக்கள் நலன் மீதும் அக்கறை கொண்டவர்களது இயல்பான கோரிக்கையே. அது மட்டுமன்றி அந்த அமைப்பு முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அளவுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

தமிழ்நாட்டின் மரபு என்பது பௌத்தம், சமணம் உள்ளிட்ட நெறிமுறைகளாலும், திருவள்ளுவர் சித்தர்கள் வள்ளலார், பெரியார் போன்றவர்களுடைய சிந்தனைகளையும் வரித்துக் கொண்ட சனாதன எதிர்ப்பு மரபாகும்.

வைதீக, வேத, பார்ப்பன, ஆரிய எதிர்ப்பு மரபே தமிழ்நாட்டின் மரபு. அந்த மரபின் தொடர்ச்சியாகவே, நாம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை முறியடிக்கும் பொறுப்பை உணர்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ் வெறியனான கோட்சே காந்தியைக் கொன்றது அப்பட்டமான மதவெறியின் துவக்கமாகும். காமராசரைக் கொல்ல முயன்றது அதன் தொடர்ச்சியாகும்.

அம்பேத்கரது நூற்றாண்டு விழாவின்போது அவரது பெயர் சூட்டப்பட்ட மரத்வாடா பல்கலைக் கழகத்தை எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ், இந்துமதவெறி பார்ப்பன பாசிச கும்பல். ஒவ்வொரு இடஒதுக்கீடு பிரச்சினையின் போதும் மாணவர் அமைப்பான ABVP மூலம் கலவரங்களை முன்னெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி, அம்பேத்கர் ஆகியோரை முன்னிறுத்தி அவர்களின் நினைவாக பேரணி நடத்தவுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பது கேலிக்கூத்தான விசயம்.

தமிழ்நாட்டில் சாதி மற்றும் மதக் கலவரங்களை உருவாக்கி இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் தயாராக இருக்கிறது.

இதன் மூலமாக தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறி ஆட்சியை கைப்பற்றுவதற்கான திட்டமும் இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனது கார் மீது செருப்பை வீசியது, முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவை சமீபத்திய உதாரணங்கள்.

இப்படிப்பட்ட நாசகர நோக்கமுடைய பாசிச ஆர்.எஸ்.எஸ், பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

அதுமட்டுமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி போன்ற பாசிச அமைப்புகள் தமிழ்நாட்டில் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடே ஒருமுகமாக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிர்ப்பை பதியவைக்கும் விதமாக அக்டோபர் 11 ஆம் தேதி விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைத்திருக்கக் கூடிய சமூக நல்லிணக்கப் பேரணியை வரவேற்பதுடன் அப்பேரணியில் எமது அமைப்புகள் கலந்து கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ்-பாஜக, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் !

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்போம்!

ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை

தொடர்புக்கு : 9791653200, 9444836642, 7397404242, 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க