ரஷ்ய புரட்சியின் ஓராண்டு நிறைவின் போது, புரட்சியின் வீரர்களை நினைவு கூறும் விதமாக தோழர் லெனின், புரட்சி வீரர்களின் மகத்தான அர்பணிப்பையும் தியாகத்தையும் பற்றி எடுத்துரைத்தார். அந்த மகத்தான ரஷ்ய சோசலிசப் புரட்சியின் வீரர்களை 106-வது ரஷ்ய புரட்சி நாளில் நினைவு கூறுவதன் மூலம், அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், புரட்சிகர உணர்வையும் வரித்துக்கொள்வோம். நம் நாட்டில் ஓர் புரட்சியை நடத்திட சூளுரைப்போம்!

– வினவு

000

அக்டோபர் புரட்சியில் உயிர் இழந்தவர்களுக்கான நினைவுக்கல் திறப்புவிழாவின் போது ஆற்றிய உரை

நவம்பர் 7, 1918

தோழர்களே! 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியில் வீழ்த்தப்பட்டவர்களை நினைவு கூரும் ஒரு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்திட இங்கு கூடியுள்ளோம். நாடுகளை ஏகாதிபத்தியப் பிடியினின்றும் விடுதலை செய்திட, நாடுகளுக்கிடையே போர்களை ஒழித்திட, மூல தன ஆதிக்கத்தை வீழ்த்திட மற்றும் சோஷலிசத்தை அடைந்திடப் புரட்சி ஒன்றினைத் துவக்கி அதில் உழைக்கும் மக்களின் தவப்புதல்வர்கள் தங்களது உயிரினைத் தியாகம் செய்தார்கள்.

தோழர்களே! ருஷ்யாவின் பலபத்தாண்டுக் கால நவீனகால வரலாற்றில் புரட்சிகரத் தியாகிகளின் நீண்ட பட்டியல் இருந்து வந்துள்ளது. ஆயிரம் ஆயிரம் பேர்கள் ஜாராட்சியை எதிர்த்துப் போரிட்டு மடிந்தனர். அவர்களது உயிர்த்தியாகம் புதிய போராளிகளை எழுச்சியுறச் செய்தது, போராட்டத்திற்குள் இன்னும் அதிகமதிகமான மக்களை ஈர்க்க உதவியது.

கடந்த அக்டோபரின் போது வீழ்த்தப்பட்ட இந்தத் தோழர்கள் வெற்றியின் மகத்தான நற்பேற்றைக் கொண்டு வந்தார்கள். மனித குலத்தின் புரட்சிகரத் தலைவர்கள் கனவு கண்ட அந்த மகத்தான சிறப்பினை இவர்கள் வென்று பெற்றார்கள் : போர்க்களத்தில் வீரமரணம் அடைந்து இந்தத் தோழர்களின் சடலங்களைத் தாண்டி தமது வெகுஜன வீராவேசத்தினால் வெற்றி ஈட்டிய ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான புதிய இதேபோன்று அச்சமென்பதே அரியாத வீரர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

இன்று, அகில உலகிலும், தொழிலாளர்கள் கோபாவேசத்தால் கொதித்துக் குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் சோஷலிஸ்டுப் புரட்சி துவங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதுமுள்ள முதலாளிகள் திகிலாலும் குரோதத்தாலும் புரட்சியினை அடக்கிட அவசரமாக அணி திரளுகின்றனர். மேலும் ருஷ்யாவின் சோஷலிஸ்டு சோவியத் குடியரசு அவர்கள் விலாவினைக் குத்திடும் குறிப்பிட்ட முள்ளாக இருக்கிறது. ஒன்றுபட்ட உலக ஏகாதிபத்தியவாதிகள் நம்மைத் தாக்கிடத் தயாராக உள்ளனர். இன்னும் பல புதிய போர்களில் நம்மை இழுத்து விடவும் நம் மீது இன்னும் அதிகமான தியாகங்களைச் சுமத் திடவும் தயாராக உள்ளனர்.

தோழர்களே! இவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்ற நடப்போம் என்றும், இவர்களது துணிவையும் வீரத்தையும் நாம் முன்மாதிரியாகக் கொள்வோம் என்றும், இவர்களது நினைவுச் சின்னத்தின் முன்னின்று சபதமேற்பதன் மூலம் இந்த அக்டோபர் வீரர்களின் நினைவை நாம் கௌரவப்படுத்துவோம். அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : “வெற்றி அல்லது வீர மரணம்!’

ஆகவே இந்த குறிக்கோள் வாசகத்தை ஏற்ற பாட்டாளி வர்க்கச் சர்வதேச சோசலிஸ்ட்டு புரட்சியின் போராளிகள் வெல்ல முடியாதவர்கள் ஆவர்.

லெனினின் அட்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி (1918-1922 உரைகள், அறிக்கைகள், கட்டுரைகள்) எனும் நூலிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க