ளங் கம்யூனிஸ்டுகள் துணிவுமிக்க முன்னணி இளைஞர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மக்கள் நலனுக்காக, ஆபத்து நிறைந்த வேலைக்கு அஞ்சா நெஞ்சர்களான மனிதர்களை அனுப்புவது கட்சிக்கு அவசியம் என்னும்போது முன்னே வருபவர்கள் யார்? எப்போதுமே இளங் கம்யூனிஸ்டுகள்தாம்.

புதிதாகச் சாலைகள் போட வேண்டும். இந்த அழைப்பை முதன் முதல் ஏற்பவர்கள் யார்? இளங்கம்யூனிஸ்டுகள். போர்முனை செல்லவும் இளங் கம்யூனிஸ்டுகள் தயங்குவது இல்லை.

உள்நாட்டுப் போரில் இளங் கம்யூனிஸ்டுகள் ஆயிரமாயிரம் அருஞ்செயல்கள் புரிந்தார்கள். சைபீரியாவிலும் உக்ரேய்னாவிலும் கிரைமியாவிலும் வோல்காப் பிரதேசத்திலும் கூர்ஸ்க் நகரின் அருகிலும் பெத்ரோகிராதின் நகர்ப்புறங்களிலும் புல்லும், பூச்செடிகளும் மண்டிய பல்லாயிரம் இளங் கம்யூனிஸ்ட் கல்லறைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான இளங் கம்யூனிஸ்ட் வீரர்களின் கல்லறைகள்….

லெனின் பென்சிலை வைத்தார். மேஜை மேலிருந்த காகிதம் நுண்ணிய வீச்சுள்ள வரிகளால் நிறைந்துவிட்டது. லெனின் தமது பேச்சின் திட்டத்தை அதில் குறித்திருந்தார்.

அன்று இளங் கம்யூனிஸ்டுகள் சங்கத்தின் மூன்றாவது காங்கிரஸில் அவர் பேசுவதாக இருந்தார். ருஷ்ய இளங் கம்யூனிஸ்டுகள் சங்கத்துக்கு இரண்டே வயதுதான் ஆகியிருந்தது. இளங் கம்யூனிஸ்டுகளைப் பற்றி எண்ண லெனினுக்கு இன்பம் உண்டாயிற்று. உற்சாகிகள், விடாப்பிடி உள்ளவர்கள்! தொழிலாளர்கள், ஏழைக் குடியானவர்களின் மக்கள். “நாங்கள் புரட்சி செய்தோம். ஆனால் கம்யூனிஸச் சமூகத்தைத் தேவையான விதத்தில் அமைத்து முடிக்க எங்களுக்கு வாய்ப்பது சந்தேகமே. இளந் தலைமுறையினர்தாம் அதைக் கட்டி முடிப்பார்கள்.” – இவ்வாறு எண்ணமிட்டார் லெனின்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

இதற்குள் இளங் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் காங்கிரஸ் நடக்கும் இடத்தில் கூடினார்கள். தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுவிட்டு நேரே அங்கே போனார்கள் அவர்கள். காலை முழுவதும் ரயில் நிலையங்களில் சரக்கு வண்டிகளிலிருந்து சாமான்களை இறக்கினார்கள், விறகைக் கிட்டங்கிகளில் அடுக்கி வைத்தார்கள், வீதிகளைத் துப்புரவு செய்தார்கள். மாஸ்கோ நகரை அழகு படுத்தினார்கள்.

1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி குளிராக இருந்தது. வானம் மப்புப் போட்டிருந்தது. திடீரென காற்று வீசிற்று. மஞ்சள் பழுப்புகள் கிளைகளிலிருந்து படலம் படலமாக உதிர்ந்து காற்றில் சுழன்று சலசலக்கும் மழைபோலத் தரையில் விழுந்தன.

காலையின் குளுமையும், சலசலக்கும் இலைகளும், கைகள் காய்த்துப் போகும்படி செய்த ஒருமித்த வேலையும் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு மகிழ்வு ஊட்டியது. எல்லாவற்றையும் விட, இப்போது காங்கிரஸில் லெனின் பேசுவார் என்பது அவர்களுக்கு உவகை அளித்தது.

மாலயா திமீத்ரவ்கா வீதியில் 6 ஆம் நம்பர் வீட்டில் காங்கிரஸ் நடப்பதாக இருந்தது. இளங் கம்யூனிஸ்ட் பிரதிநிதிகள் ஓட்டமும் நடையுமாக அங்கே போய்ச் சேர்ந்தார்கள். இப்போது இந்தக் கட்டிடத்தில் லெனின் இளங் கம்யூனிஸ்டுகள் சங்க நாடக மன்றம் உள்ளது. அப்போது நாடக மன்றம் இருக்கவில்லை. அரங்கே இருக்கவில்லை. அரங்குக்குப் பதில் திரை அற்ற, வண்ணம் பூசாத மேடை மட்டுமே இருந்தது. மேடை மேல் நீண்ட மேஜையும் பேச்சாளர் பீடமும் அமைந்திருந்தன. சிவப்புத் துணிகளில் போஸ்டர்களும் கோஷங்களும் எழுதப்பட்டிருந்தன.

ஒரு போஸ்டரில் செம்படைவீரன் ஒருவன் விரலால் சுட்டியவாறு, ”நீ தன்னார்வத் தொண்டனாகப் படையில் சேர்ந்து விட்டாயா?” என்று கேட்பதுபோலப் படம் தீட்டப்பட்டிருந்தது.

பல இளங் கம்யூனிஸ்டுகள் போர்முனையிலிருந்து நேரே வந்திருந்தார்கள். பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலுமிருந்து வந்திருந்த இந்த இளங் கம்யூனிஸ்டுகள் பள்ளி மாணவர்கள் அல்ல. சிலருக்கு எழுதப் படிக்கத் தெரியும், சிலருக்குத் தெரியாது. சிலரோ புத்தகத்தைத் தொட்டுக்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் போர்முனைகளில் புரட்சி விரோதிகளின் கும்பல்களை இவர்கள் தயவு தாட்சணியம் இன்றித் தாக்கி நொறுக்கினார்கள். குலாக்குகள் பதுக்கி வைத்திருந்த தானியத்தை அஞ்சாமல் ஜப்தி செய்தார்கள் சோவியத் ஆட்சிக்காக எந்த ஆபத்தையும் மேற்கொள்ளத் தயாராய் இருந்தார்கள்.

இளங் கம்யூனிஸ்டுகளின் இதயங்கள் கிளர்ச்சிப் பெருக்கால் அடித்துக் கொண்டன. இதோ லெனின் வருவார். அவர் பேசசை கேட்கலாம்!

இராணுவ மேல்கோட்டுகளும் தோல் கோட்டுகளும் அணிந்து, தோளோடு தோள் இடிக்கும்படி நெருக்கமாகப் பெஞ்சுகளில் அமர்ந்து லெனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். ஸ்வெர்திலோவ் அணிந்தது போன்ற கறுப்புத் தோல் கோட்டு அணிவது அந்தக் காலத்தில் இளங் கம்யூனிஸ்டுகளும் மிகவும் பிடித்திருந்தது. இராணுவ மேல்கோட்டும் – வியர்வையும் வெடி மருந்தும் கலந்த நெடி வீசும் மேல்கோட்டும் – செந்நட்சத்திரம் பொறித்த தொப்பியும்கூட நல்ல உடைதான்.

லெனின் என்ன சொல்லப் போகிறார் என்று ஊகித்தார்கள் பிரதிநிதிகள். போரைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். போருக்கு, வீரச் செயல்களுக்கு, அருஞ்செயல்கள் ஆற்றுவதற்கு அழைப்பார் என்று நினைத்தார்கள். செஞ்சேனை புரட்சி விரோதி வெண்படையினரை விரட்டியடித்துவிட்டது, ஆயினும் உள்நாட்டுப் போர் இன்னும் முடியவில்லை.

”சோவியத் ஆட்சியைக் காத்திடவே”

என்ற பாட்டு அரங்கின் ஒரு மூலையிலிருந்து தொடங்கியது. பின்பு அரங்கமே பாட்டை எதிரொலித்தது.

”துணிவுடன் சென்றே போரிடுவோம்.
ஆவியும் உடலும் நல்கிடுவோம்
ஆட்சி இதை நிலைநாட்டிடவே!”

பின்பு அரங்கில் அமைதி நிலவியது. வழக்கமாகக் கூட்டங்களில் நடப்பது போலவே தலைமைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைமைக் குழுவுக்கான மேஜைமேல் சிவப்புத் துணி விரிக்கப்பட்டிருந்தது. தோழர்கள் இடங்களில் அமர்ந்தார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய படங்களும் சுவற்றில் தொங்கின. இரு பெரியோரும் இளங் கம்யூனிஸ்டுகளை நோக்கினார்கள்.

“லெனின்!” என்ற முழக்கம் திடீரென்று எழுந்தது.

இளங் கம்யூனிஸ்டுகள் துள்ளி எழுந்திருந்தார்கள், கைகளைத் தட்டினார்கள். லெனின் மேல் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு “அளவில்லாத அன்பு, தன்னலமற்ற ஈடுபாடு.

கறுப்பு வெல்வெட் காலர் வைத்த மேல்கோட்டைக் கழற்றி நாற்காலி மேல் ஒழுங்காக மடித்துப் போட்டார் லெனின். தலைமைக் குழு தோழர்களுடன் கை குலுக்கி முகமன் கூறினார். அவருடைய ஒவ்வொரு கைகையும் புன்னகையும், அவர் செய்தவையும், அவற்றைச் செய்த தோரணையும், அவருடைஅ நடத்தை முழுவதுமே இளங் கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்கு அவர் நல்லவராக, அருமையானவராக, இனியவராகத் தோன்றினார். உள்ளக் கிளர்ச்சியாலும் அடக்க முடியாத மகிழ்ச்சியாலும் உற்சாகம் ஊற்றெடுக்க இந்த இளங் கம்யூனிஸ்டுகள் பலருடைய விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.

லெனின் மேடை விளிம்புக்கு வந்து, உள்கோட்டுப் பையிலிருந்து பைக் கடிகாரத்தை எடுத்துப் பார்த்தார். கை தட்டலை நிறுத்துங்கள், வேலை தொடங்குவோம் என்று சொல்வது போல் இருந்தது அந்தச் செய்கை.

இதனால் இளங் கம்யூனிஸ்டுகளின் மதிப்பில் அவர் இன்னும் உயர்ந்துவிட்டார்.

”நண்பர்களே, ஒரு நிமிடங்கூடத் தாமதிக்காமல் ஒருவர் பாக்கியின்றி எல்லோரும் போர்முனைக்குப் போங்கள்!” என்று அவர் சொல்லியிருந்தால் அவர்கள் எல்லோருமே மறு பேச்சின்றிப் போர்முனைக்குப் போயிருப்பார்கள்.

லெனின் சொன்னதோ வேறு. அதைக் கேட்டு இளங் கம்யூனிஸ்டுகள் முதலில் திகைத்தார்கள். வியப்பும் குழப்பமும் அடைந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

லெனின் நிலைத்து நிற்காமல் மேடை ஓரமாக நடந்தவாறே பேசினார். தலைமைக் குழுவினரில் பெரியவர்கள் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள். நாற்காலிகள் போதவில்லை. தலைமைக் குழுவைச் சேர்ந்த இளங் கம்யூனிஸ்டுகள் வெகு நேரம் யோசனை செய்யாமல் மேடைத் தரையிலேயே உட்கார்ந்து விட்டார்கள். லெனின் அவர்களுக்கு நடுவே ஜாக்கிரதையாக அடிவைத்து நடந்தார். நடந்தபடியே பேசினார்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா? தற்போது இளங் கம்யூனிஸ்டுகளின் கடமை கற்றுக் கொள்வதே என்றார்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

இளங் கம்யூனிஸ்டுகள் வியந்தார்கள். ஆர்வத்துடன் உற்றுக் கேட்கும் இளைஞர்களின் முகங்களில் ஆச்சரியமும் குழப்பமும் தென்பட்டதை லெனின் கவனித்தார். தமது கருத்தை முடிந்தவரை புரியும் விதத்தில் விளக்க அவர் முயன்றார். விரைவில் நாம் உள்நாட்டுப் போரை முடித்து விடுவோம். எதிரிகளை விரட்டி விடுவோம். அப்புறம்? கட்டுமானம் தொடங்க வேண்டும். தொழிற் சாலைகளும் ஆலைகளும், டிராக்டர்களும், விமானங்களும், இயந்திரங்களும் நிறுவ வேண்டும். நாட்டை மின்சார மயம் ஆக்க வேண்டும். மின்சாரம் என்பது என்ன, அறிவீர்களா, இளங் கம்யூனிஸ்ட் தோழர்களே?

அறிய வேண்டும். நிறைய அறிய வேண்டும்!

படிப்பறிவு இல்லாமல் கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பது நடவாது என்று இளங் கம்யூனிஸ்டுகளுக்கு விவரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார் லெனின்.

உழைக்க வேண்டும். அறிய வேண்டும். “தொழிலாளர்களுடனும், குடியானவர்களுடனும் சேர்ந்து உழைப்பதன் மூலமே ஒருவன் உண்மைக் கம்யூனிஸ்ட் ஆக முடியும்.” கம்யூனிஸத்தைக் கற்றுக் கொள்வது என்றால், பழைய சமூக அமைப்புக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் இணைத்துக் கொள்வதும் புதிய, கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பதுமே என்றார் லெனின்.

(லெனினுக்கு மரணமில்லை எனும் நூலிலிருந்து….)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க