09.11.2022

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு!
ஆர்.எஸ்.எஸ்-பாஜக; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் அடுத்த கட்ட நகர்வு !

பத்திரிகை செய்தி

யர்சாதியினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை (Economically Weaker Sections -EWS10%) உறுதிசெய்து, 103-வது சட்ட திருத்தத்தையும் ஆதரித்து தீர்ப்பளித்திருக்கிறது, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு.

ஏற்கனவே சில ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறப்படும் நபர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 60 புள்ளிகள் தேவை என்றால் அதுவே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 28 புள்ளிகளாக இருக்கின்றது.

இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் சாதிரீதியாக பின் தங்கியவருக்கு ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதுதான்.

எல்லாத் துறைகளிலும் பார்ப்பனர்கள் வீற்றிருந்த காலத்தில்தான் பார்ப்பனரல்லாத சாதியினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்ற உரிமைக்காக போராடி பெற்றனர். அதன் காரணமாக தற்பொழுது தங்களை ஆண்ட சாதி என்று கூறிக் கொள்ளும் பலரும் கல்வி அறிவு பெறவும் வேலை வாய்ப்பு பெறவும் தொடங்கினர்.

படிக்க : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

அவ்வாறு கல்வி அறிவும் வேலை வாய்ப்பும் பெற்றவர்கள் அரசு கட்டமைப்பை குறிப்பாக பொதுத் துறையை குறிப்பிட்ட அளவில் பலப்படுத்தினர்.

ஒட்டுமொத்த நாட்டையும் அம்பானி-அதானி பாசிச கும்பலுக்கு தாரை வளர்ப்பதையே லட்சியமாகக் கொண்டிருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு இனியும் இடஒதுக்கீடு, ஜனநாயகம், உரிமைகள் என்று பேசிக் கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேலைவாய்ப்பு கல்வி மற்றும் அரசு துறைகள் அனைத்திலும் இயல்பிலேயே பார்ப்பன பாசிச சிந்தனை உள்ளவர்களை நிரப்புவதன் மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறது கார்ப்பரேட் கும்பல்.

முன்பு தன்னை ஒரு ஜனநாயக நாடாக காட்டிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்த காரணத்தினாலேயே  வேறுவழியின்றி இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய ஆளும் வர்க்கம் தள்ளப்பட்டது.

இனியும் ஜனநாயக உரிமைகள் என்று பேசிக் கொண்டிருந்தால் அதானி-அம்பானி பாசிச கும்பலுக்கு நாட்டை விற்பதில் தடங்கல்கள் ஏற்படும்.

மக்களின் அனைத்து உரிமைகளும் தொழிலாளிகளின் அனைத்து உரிமைகளும் படிப்படியாக எவ்வாறு  பறிக்கப்பட்டு வருகின்றதோ அதன் ஒரு பகுதியாகவே தற்பொழுது இடஒதுக்கீட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று பிச்சை எடுத்து அதனை சாதித்துக் காட்டிய பார்ப்பன கும்பல், கார்ப்பரேட்டின் தேவைக்காக தற்பொழுது இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அத்துக் கூலிகளாகவும் கல்வியறிவற்ற பாமரர்களாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காரணமாக அனைத்து அரசு துறைகளும் அவுட்சோர்சிங் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இடஒதுக்கீட்டு நோக்கமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு தான் கொண்டிருக்கிறது.

அரசு வேலை, இலவச கல்வி என்பது மறுகாலனியாக்கச் சூழலில் சட்டரீதியான இடஒதுக்கீடு என்பதை பெயரளவில் வைத்து கொண்டு மட்டும் என்ன செய்ய முடியும் என்ற நிலைதான் தற்போது இருக்கிறது.

படிக்க: ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!

இடஒதுக்கீட்டை ஒழிப்பதே ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி பாசிச கும்பலுக்கும் அதானி-அம்பானி பாசிச கும்பலுக்கும் தேவையாக இருக்கிறது. அதனால்தான் இந்த காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. உறுதி செய்தும் இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்திய நாட்டின் வருமான உச்ச வரிவரம்பே ரூ2.5 லட்சமாக இருக்கும் பொழுது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறிக்கொள்ள கூடியவர்களுக்கு மட்டும் வரிவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தி இருப்பது என்பது ஒன்றே இந்த அரசு பார்ப்பனர்களுக்காக மட்டுமே இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அநீதியான தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதும் மறுசீராய்வு செய்வதும் எவ்விதத்திலும் பலனளிக்க போவதில்லை. ஏனெனில் அனைத்து துறைகளும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப்பட்டு இருப்பதுபோல நீதித்துறையும் அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மாறாக பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்  பெறமுடியும்.

அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது நம்முடைய தலையாயப்பணியாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க