குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!

இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.

1

குஜராத் தேர்தலில் யார் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற போகிறார்கள் என்பதை நாடே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலால் இந்தியாவிற்கு முன்மாதிரியாக முன்நிறுத்தப்பட்ட குஜராத்தில், பாசிஸ்டுகள் தங்கள் 27 ஆண்டுகால ஆட்சியை தக்கவைப்பார்களா? அல்லது ஆட்சி மாற்றம் நிகழுமா? என்பதுதான் விவாதப் பொருளின் மையம்; அதற்கு இத்தேர்தலில் புதிதாக களம் இறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் அதற்கெதிரான பாஜகவின் நடவடிக்கைகள்தான் காரணம்.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியானது, தற்போது குஜராத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக கவர்ச்சிவாத மற்றும் மிதவாத இந்துத்துவா அரசியலை தீவிரமாக பிரச்சாரம் செய்கிறது. இதற்கு எதிர்வினையாக பா.ஜ.க-வானது வேறுவழியில்லாமல் கவர்ச்சிவாத திட்டங்களை அறிவிக்கிறது; மக்கள் மத்தியில் சாதி அரசியலையும், இந்துமுனைவாக்கத்தையும் தீவிரப்படுத்துகிறது; அதிகார வர்க்கத்தின் உதவியுடன் தேர்தல் விதிகளை தனக்கு சாதகமாக மாற்றுவது என எல்லா வழிகளிலும் மூர்க்கமாக வேலை செய்கிறது.

மேலும் இத்தேர்தலின் வெற்றியானது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் பாசிசக் கும்பல் உள்ளது. ஆம் ஆத்மியும் குஜராத்தில் பா.ஜ.க.வை தோற்கடித்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை தனது தலைமையில் திரட்ட முடியும்; தேசியக் கட்சியாக உருவாக முடியும் என்பதைக் கணக்கிட்டே, ஹிமாச்சலப்பிரதேசத்தை விட குஜராத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்து வருகிறது.

படிக்க : 2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

இரு கட்சிகளுக்கும் குஜராத் தேர்தல் வெற்றியானது இந்தளவுக்கு முக்கியமானது என்பதால்தான், தங்கள் ஒட்டுமொத்த சக்திகளையும் குவித்து வேலை செய்கிறார்கள். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நாய்ச்சண்டையை தவிர வேறொன்றுமில்லை.

மற்றபடி, யார் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

கவர்ச்சிவாத அரசியல் – பாசிஸ்டுகளின் பிரம்மாஸ்திரம்!

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால் ஏப்ரல் மாதத்தில் இருந்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்; வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை குஜராத்திற்கு சென்று பல்வேறு மக்கள் பிரிவினர் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார்; இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை மையப்படுத்தியே அவருடைய தேர்தல் பிரச்சார உரைகள் பெரும்பாலும் இருந்தது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் மாதந்தோறும் 300 யூனிட் இலவசம்; விவசாயிகளுக்கு ஒரு நாளுக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம்; வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகை; 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை; பசுக்களை பராமரிப்பதற்காக ஒவ்வொரு பசுவுக்கும் ஒரு நாளைக்கு 40 ரூபாய் ஊக்கத்தொகை; மாவட்டந்தோறும் பசு பாதுகாப்பு இல்லம்; பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாதம் 10000 ரூபாய்; வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதத்தில் (ஜனவரி 31 ஆம் தேதிக்குள்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் ஆகியவை கெஜ்ரிவாலின் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களில் முக்கியமானவை.

அதுமட்டுமில்லாமல் ஆம் ஆத்மி கட்சியானது மக்கள் மத்தியில் கார்ப்பரேட் பாணியிலான கவர்ச்சிவாத அரசியலை மேற்கொண்டது. தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வானது  “ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தரப் போறாரு” என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதேபோல, “கெஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு; மாற்றம் சாத்தியம்” (one chance to kejriwal; change is possible) என்ற முழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 7.30 ரூபாய் ஆக இருப்பது; கிராமங்களில் பள்ளிக்கூடம், சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் முறையாக இல்லாமல் இருப்பது; தொடர்ந்து அதிகரிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம்; பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றின் காரணமாக மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அதை அறுவடை செய்யும் விதமாகவே, ஆம் ஆத்மியானது இம்முழக்கத்தை முன்னிறுத்தியது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிராக மோடி, குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னாலேயே தன்னுடைய உரைகளில் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளை சேர்த்துக்கொண்டார். “நாட்டின் பொருளாதாரத்தை இலவசங்கள் அழிக்கின்றன” என்ற அவர் கூற்று அதற்கு சிறந்த சான்று. மோடி மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாசிசக் கும்பலும், அதிகார வர்க்கமும் இணைந்து இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டன. மாநிலக் கட்சிகளான தி.மு.க, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மூலம், மக்களின் வாக்குகளைக் கவருவதே அதற்கு முக்கிய காரணம்.

இப்படி இலவச – கவர்ச்சிவாத திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்ட பா.ஜ.க கும்பலானது, வேறுவழியில்லாமல் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆம் ஆத்மிக்கு நிகராக தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இலவச – கவர்ச்சிவாத திட்டங்களை வாரி வழங்கி  இருப்பது அதன் விளைவுதான்.

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்; பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின்; குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர்; குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 4 முறை சமையல் எண்ணெய் மற்றும் மாதந்தோறும் ஒரு கிலோ கொண்டைக்கடலை இலவசம்; உயர்சாதி ஏழைக் குடும்ப கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் இலவச ஊட்டச்சத்து உணவுப்பொருள்; உயர்சாதி ஏழை குடும்பங்களுக்காக 110 கோடி செலவில் நோயறிதல் திட்டம்; பேருந்துகளில் வயதான பெண்களுக்கு இலவச பயணம் போன்றவை பா.ஜ.க கும்பலின் இலவச – கவர்ச்சிவாதத் திட்டங்களாகும்.

இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மட்டுமல்லாமல், பா.ஜ.க கும்பலானது தங்களுடைய முக்கியமான தலைவர்களை எல்லாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ள செய்தது. இப்பிரச்சாரங்கள் அனைத்தும் மோடி, அமித்ஷா, நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரை சுற்றியே இருந்தது. குறிப்பாக, மோடிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

இத்தேர்தலுக்காக மோடி மட்டும் 31 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி உள்ளார். கிட்டதட்ட 160 உத்திரப்பிரதேச பா.ஜ.க தலைவர்கள் இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அமித்ஷா மற்றும் நட்டா பொதுக்கூட்டங்களில் பேசியது மட்டுமல்லாமல், பா.ஜ.க ஆதரவு ஊடகங்களுக்கு பேட்டியளிப்பதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

சமூக வலைதளங்களிலும் பா.ஜ.க கும்பல் தீவிரமாக பிரச்சாரம் செய்தது. இதற்காக குஜராத் நான்காக பிரிக்கப்பட்டு நான்கு பகுதிகளிலும் மையக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த  மையக் குழுக்களுக்கு கீழ் உள்ள சமூக ஊடகக் பிரிவின் குழுக்களில் கிட்டதட்ட 10,000 கட்சித் தொண்டர்கள், பா.ஜ.க.வின் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க-வின் மேற்கூறிய நடவடிக்கைகளை விட முக்கியமானது, தங்களுடைய கவர்ச்சிவாத அரசியலைப் பயன்படுத்தி மோர்பி தொங்கு பால விபத்தை கையாண்ட விதம்தான். பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடித்தது மற்றும் வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருக்கிறேன் என்று கூறி நடித்தது ஒருபுறம் என்றால், மறுபுறம் தொங்கு பால விபத்தில்  மக்களைக் காப்பாற்றினார் என்று கூறி, பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியாவை மோர்பி தொகுதி வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது.

எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் மோர்பி தொங்கு பால விபத்தை பிரச்சாரம் செய்து வாக்குகளைக் கவரலாம் என்று கருதி இருந்த சமயத்தில், தங்கள் கவர்ச்சிவாத அரசியலின் மூலம் ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கையும் தலைகீழாக மாற்றியது பா.ஜ.க. கும்பல்.

சாதி அரசியலும் இந்துமுனைவாக்கமும்

சமீபத்தில் உச்சநீதிமன்றமானது கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பானது குஜராத் தேர்தலுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்குள் படிதார் சமுதாயத்தை சேர்ந்த மக்களும் வருகின்றனர். குஜராத்தில் இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டங்களைக் கட்டியமைத்து வந்துள்ளனர்.

ஹர்திக் படேலும் இச்சமுதாயத்தை சேர்ந்தவரே ஆவார். இம்மக்கள் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் பெரும்பான்மையாக உள்ளனர். இம்மக்களின் போராட்டத்தின் காரணமாக பா.ஜ.க. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சௌராஷ்டிரா பகுதியில் தோல்வியைத் தழுவியது.

தற்போது இச்சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது மற்றும் ஹர்திக் படேலும் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து இருப்பது, பா.ஜ.க.வுக்கு இம்மக்களின் வாக்குகளைக் கவர வாய்ப்பாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க.வால் இச்சமுதாயத்தை சேர்ந்த பூபேந்திர படேலே முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதும் பாசிஸ்டுகளுக்கு கூடுதல் பலம். மாநிலம் முழுவதும் இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 15 சதவிகிதம் உள்ளதால், வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கை வகிப்பர்.

அதேபோல, கோலி சமூகத்தின் ஆதரவை பெறுவதற்காக “ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு” என்ற தனது கொள்கையை பா.ஜ.க. தளர்த்தியிருக்கிறது. கோலி சமூகத்தைச் சேர்ந்த பர்ஷோத்தம் சோலாங்கிக்கு பாவ் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் அவரது தம்பி ஹைரா சோலாங்கிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அச்சமுதாயத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சமுதாயத்தை சேர்ந்த மக்கள் 32 தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே பா.ஜ.க. தனதுகொள்கையை தளர்த்தி அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

எல்லா தொகுதிகளிலும் யாரை வேட்பாளராக முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியும் என்பதைக் கணித்தே, பா.ஜ.க.வானது வேட்பாளர்களை நிறுத்துகிறது. அவ்வேட்பாளர்கள் பெரும்பாலும் சாதி அரசியலின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு பா.ஜ.க. சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதும் இதனடிப்படையில்தான்.

இதனால் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 6 பேர் உட்பட 30-க்கும் அதிகமானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் விளைவாக, வாய்ப்பு வழங்கப்படாத பா.ஜ.க.வினர் அதிருப்தியாளர்களாக மாறி, சிலர் காங்கிரஸில் இணைந்துள்ளனர்; சிலர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். எனவே அவர்களை பா.ஜ.க.வானது கட்சியை விட்டு நீக்கியுள்ளது. இதுவரை 19 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுள்ளனர். அதில் 6 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர்.

மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர்களை பா.ஜ.க.வானது பேரம் பேசி தன் கட்சியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே பழங்குடி மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பா.ஜ.க.வானது தன்னுடைய ஆதிக்கத்தை மேலும் விரிவுப்படுத்திக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பதற்கு, இந்து – முஸ்லிம் கலவரம் ஏற்பட்டால் பா.ஜ.க. கும்பலே தங்களை பாதுகாக்கும் என்ற மக்களின் மூடநம்பிக்கையே காரணமாக உள்ளது. “அடிக்கடி மதக்கலவரம் நடக்கும் பகுதிகளிலும் கூட பாஜக அமைதியை நிலைநாட்டி உள்ளது” என்று அமித்ஷா கூறியிருப்பதே அதற்கு சிறந்த சான்று. இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.

மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளார்கள். இதுவும் மக்கள் மத்தியில் இந்துமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி, இந்துக்களின் வாக்குகள் அனைத்தையும் கவர்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தேர்தலுக்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை. பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலில் இத்திட்டம் ஓர் அங்கம். இதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகள் மேலும் பறிக்கப்படும்.

ஆம் ஆத்மி கட்சியும் சாதி அரசியலை முன்னிறுத்தி வேட்பாளர்களை களம் இறக்குகிறது. குறிப்பாக, படிதார் சமுதாயத்தை சேர்ந்தவர்களை முன்னிறுத்துகிறது. அதேபோல, கெஜ்ரிவால் பொதுக்கூட்ட மேடையில் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுவது, “குஜராத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும் அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச பயண வசதி செய்யப்படும்” எனக் கூறுவதன் மூலம் தன்னையும் மக்கள் மத்தியில் இந்துவாக முன்னிறுத்திக் கொண்டாலும், பா.ஜ.க. அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதிகார வர்க்கத்தின் துணை

ஹிமாச்சலப்பிரதேசத்துடன் சேர்ந்து நடத்தப்பட வேண்டிய குஜராத் தேர்தலானது, தேர்தல் ஆனையத்தால் திட்டமிட்டு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டது. பா.ஜ.க. கும்பல் இலவச – கவர்ச்சிவாத திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் தங்கள் ஆதரவை பெருக்கி கொள்வதற்காகவே இக்கால அவகாசம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. கும்பலின் செயல்பாடுகளே அதை நிருபிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தால் ஹிமாச்சலப்பிரதேசத்துடன் சேர்த்து குஜராத் தேர்தல் தேதி இரண்டு நாள் கழித்து, சிஎன்ஜி (Compressed Natural Gas) மீதான வாட் வரியை 10 சதவிகிதம் குறைப்பதாக குஜராத் அமைச்சர் ஜிது வாகஹ்னி அறிவித்தார். அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம் எனவும் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து குஜராத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 15,670 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நவம்பர் ஒன்றாம் தேதி பழங்குடி மக்களுக்கான 860 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

குறிப்பாக பழங்குடி மக்கள் மத்தியில், பழங்குடியினர் பகுதிகளில் பத்தாயிரம் புதிய பள்ளிகள், ஏகலைவா பள்ளிகள், ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பேசினார். பழங்குடியினருக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது பா.ஜ.க.தான்; ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த மூங்கில் வளர்ப்பு மற்றும் விற்பனையை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்ததும் பா.ஜ.க.தான்; பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடியின கவுரவ தினமாக அறிவித்ததும் பா.ஜ.க.தான் என பிரச்சாரம் செய்தார்.

இப்படி பா.ஜ.க கும்பல் தங்கள் கவர்ச்சிவாத திட்டங்களை செயல்படுத்திய பிறகே, தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேரணியாக சென்று பிரதமர் மோடி வாக்குச்சாவடியில் வாக்களித்ததை, மக்கள் தானாக சேர்ந்து விட்டதாக கூறி, மோடிக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கியது.

பாசிசக் கும்பலானது ஒருபுறம் தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் விதிகளை தளர்த்தியது என்றால், மறுபுறம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற தன்னுடைய அதிகார வர்க்க அடியாட்படைகளைக் கொண்டு ஆம் ஆத்மி கட்சியை மிரட்டியது எல்லாம் நாம் அனைவரும் அறிந்தததுதான்.

ஒவைசி கட்சி பா.ஜ.க.வின் பீ டீமா?

குஜராத்தில் மொத்த மக்கள் தொகையான 6.4 கோடியில் 10 சதவிகிதம் இஸ்லாமியர்கள் ஆவர். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் கிட்டதட்ட 42 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளனர்.

இதற்கு முன்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மட்டும் இருந்ததால் அவர்களுக்கு மட்டுமே முஸ்லிம் வாக்குகள் சென்றன. ஆனால் தற்போது ஆம் ஆத்மி மற்றும் ஒவைசி நிற்பதால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிய வாய்ப்புகள் உள்ளன. ஒவைசி கட்சியானது 13 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

மஜ்லீஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் விருப்பமில்லை. அவர்களே ஒவைசியை பா.ஜ.க.வின் பீ டீம் என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.  அக்கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஷம்ஷாத் கான்,  “இப்போது குஜராத்தில் எங்கும் மஜ்லீஸ் கட்சியால் வெல்ல முடியாது. இது நன்கு தெரிந்தே ஓவைசி வேட்பாளர்களை இறக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமாகவும், பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் அமையும். இதில் இருந்தே அவர் பா.ஜ.க.வின் பீ டீமாக செயல்பட முயல்வது தெளிவாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

ஒவைசி பா.ஜ.க.வின் பீ டீமா செயல்படுகிறார் என்று நாம் கூறினால், அவரை பா.ஜ.க. மறைமுகமாக இயக்குவதாகவே பொருள்படுகிறது. அவர் பா.ஜ.க.வால்தான் இயக்கப்படுகிறாரா? இல்லையா? என்ற விவாதித்திற்குள் நாம் செல்லவில்லை. ஆனால் அவரின், குஜராத் தேர்தலில் போட்டியிடுவது போன்ற முடிவுகள், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே அமைகின்றன.

பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!

மேற்கூறியவற்றை நாம் தொகுத்துப் பார்க்கும் போது, குஜராத்தில் மீண்டும் பாசிசக் கும்பலே ஆட்சிக்கு வரும் என்பதை நம்மால் எளிமையாக புரிந்துக்கொள்ள முடியும். அதற்கு முக்கிய காரணம், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகள், பா.ஜ.க.வின் இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலை எதிர்த்து, வர்க்க அரசியலை முன்வைத்து மக்களை அணிதிரட்டாமல் அதற்கு அடிபணிந்ததே ஆகும்.

பா.ஜ.க. ஆட்சியில் குஜராத் மக்களின் வாழ்க்கைதரமானது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு தினமும், ஒவ்வொரு மணி நேரமும் வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம் என மக்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதற்கெதிராக மக்களின் போராட்டங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

குஜராத்தில் 3.64 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளது; சமீபத்தில் 3,400 கிராம பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு நடந்த தேர்விற்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தது ஆகிய இரு நிகழ்வுகளின் மூலமே நாம் வேலைவாய்ப்பின்மையின் கொடூரத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக, குஜராத் வைர தொழிலாளர்கள் சங்கம் (Diamond Workers Union Gujarat) இத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடக்கூடாது என தன் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. சங்கத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். வைர தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் மற்றும் தொழில்முறை வரியைக் குறைக்க வேண்டும் என இச்சங்கத்தின் கோரிக்கையானது 12 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசால் நிறைவேற்றப்படாததே அதற்கு காரணமாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்காதது; நெடுஞ்சாலை திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஆகியவற்றுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோல பழங்குடி மக்களும் பர்-தாபி- நர்மதா நதி இணைப்பு திட்டம் மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் உருக்கு ஆலையை அமைப்பதற்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.

படிக்க : அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!

இப்போராட்டங்களை எல்லாம் அடுத்த கட்டத்திற்கு வளர்த்து மக்களின் தேவைகள் மற்றும் உரிமைகளை பூர்த்தி செய்து மக்கள் நல அரசை அமைக்க வேண்டும் என்ற சிந்தனை எதிர்க்கட்சிகளுக்கு கனவில் கூட இல்லை. அதற்கு மாறாக, மிதவாத இந்துத்துவா மற்றும் கவர்ச்சிவாத அரசியலையே முன்வைத்து மக்களின் வாக்குகளைக் கவர முயற்சி செய்கின்றன. எனவேதான் இவர்களால் பா.ஜ.க.வுக்கு மாற்றாக அமைய முடியவில்லை.

இதன் விளைவாகவே, காங்கிரஸ் கட்சியானது மக்கள் மத்தியில் இருந்து படிப்படியாக துடைத்தொழிக்கப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியானது மக்களுக்கு புதிய கட்சியாகவும், கார்ப்பரேட் பாணியில் கவர்ச்சிவாத அரசியலை மூர்க்கத்தனமாக செயல்படுத்துவதாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கை பெற்றுள்ளது.

எனவே குஜராத்தில் ஆம் ஆத்மியானது, காங்கிரஸ் கட்சியின் இடத்தை அதாவது எதிர்க்கட்சியின் இடத்தைக் கைப்பற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தேர்தலானது பாசிஸ்டுகளுக்கு எதிராக, இத்தேர்தல் கட்டமைப்புக்குள் சாத்தியமான மாற்று இல்லை என்பதை மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

பிரவீன்