அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!

குஜராத் மாடலானது குஜராத்தி-மார்வாடி-படேல்-பனியா போன்ற வடநாட்டு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொர்க்கம், உழைக்கும் மக்களுக்கோ சவக்குழி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததன் மூலம் 53 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. இந்த தொங்கு பாலத்தின் யோக்கியதையையும் இதில் நடந்துள்ள முறைகேடுகளையும் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அம்பலப்படுத்தியிருப்பதைப் பலரும் அறிவோம்.

ஆனால், இதனை வழமையான பெரிய விபத்து என்ற வகையிலோ, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் அலட்சியமான செயல்பாட்டின் வெளிப்பாடாகவோ பார்க்க முடியாது. நாட்டிற்கே முன்மாதிரியாக பாசிசக் கும்பலால் முன்னிறுத்தப்பட்ட குஜராத் மாடலின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது மோர்பி பாலம். மோர்பி பாலம் அறுந்து விழுந்த நிகழ்வானது அப்பட்டமான பயங்கரவாதச் செயலாகும். திட்டமிட்டு நிகழ்த்தப்படவில்லை என்றாலும் இது ஒரு படுகொலை குற்றமாகும்; எவ்வித வரைமுறையுமின்றி மொத்த குஜராத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விட்டிருப்பதன் விளைவாகும்!

0-0-0

1879-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மச்சு நதியின் குறுக்கே திறக்கப்பட்ட தொங்கு பாலமானது மிகவும் பழமையானது. தற்போது மக்களின் போக்குவரத்திற்கு என்பதைத் தாண்டி, சுற்றுலாத் தளமாகவே ஆக்கப்பட்டுள்ளது. 2001 பூகம்பத்திற்குப் பின்னர் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத இந்த பாலமானது வலுவிழந்து இருந்ததால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீபாவளி மற்றும் சாத் பூஜையை ஒட்டி இந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டபோது, பாலத்தைக் கடக்கும் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்ததால் பாலமானது அறுந்து விழுந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

படிக்க: குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !

ஆனால், பாலம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை; பல கம்பிகள் பழையவை; துருப்பிடித்தக் கம்பிகள் சரி செய்யப்படவில்லை; அவற்றிற்கு கிரீஸ் கூட பூசப்படவில்லை; தொங்குபாலத்தைத் தாங்கும் பிடிமானங்கள் இரண்டு பழுதடைந்திருந்தன; இரண்டு முக்கியமான ஆணிகள் (போல்டுகள்) கழன்று இருந்தன; இந்தப் பாலத்தில் இருந்த மரப்பலகைகள் நீக்கப்பட்டு அதனிடத்தில் அலுமினியத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பாலத்தின் எடை அதிகரித்துள்ளது. வழக்கமாக கட்டணம் வசூலித்து மக்கள் அனுப்பப்படும் இந்தப் பாலத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை; அதிக இலாபத்தைக் கணக்கில் கொண்டு நான்கு மடங்கு அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; பழுது பார்த்த பின்னர் அதன் உறுதித்தன்மையை சோதிக்காமல், அரசின் அனுமதியில்லாமல் திறந்துள்ளனர் – என்று தடயவியல் நிபுணர்களும், இப்பணி குறித்து விசாரிக்கும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

பாலத்தைப் பராமரிப்பது மற்றும் சீரமைப்பது ஆகிய இரண்டு பணிகளை குஜராத்தைச் சேர்ந்த ஒரேவா (Oreva Group) என்ற கார்ப்பரேட் குழுமத்திற்கு வழங்கியிருந்தது குஜராத் அரசு. இக்குழுமம் உலகின் மிகப்பெரிய கடிகார உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். 2007-ஆம் ஆண்டு முதல் இக்குழுமமே பாலத்தைப் பராமரித்து வருகிறது; தற்போது மேலும் 15 ஆண்டுகளுக்கு இப்பாலத்தைப் பராமரிக்கும் பணியும் அண்மையில் ஒரேவா குழுமத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நிறுவனமான ஒரேவா-வோ, பாலத்தைச் சீரமைக்கும் பணியை வேறு இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்துள்ளது. அந்த ஒப்பந்ததாரர்கள் யாரும் பாலம் குறித்த அறிவு பெற்ற பொறியாளர்கள் அல்ல; இந்த ஒப்பந்ததாரர்கள் பாலத்தில் வெல்டிங் மற்றும் மின் இணைப்பு வேலைகளை மட்டுமே செய்துள்ளனர். மேலும் ஒரேவா-உம் கட்டுமானப்பணிகளில் முன்அனுபவம் இல்லாத நிறுவனமாகும். அதுமட்டுமல்ல, பாலத்தை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை, நகராட்சி அதிகாரிகள் ஏல அறிவிப்புக் கூட கொடுக்காமல் இந்த நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கியுள்ளனர் என்பதும், அந்த ஒப்பந்தப் படிவம் இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது என்பதும் பலருக்கும் அதிர்ச்சியளிக்கின்றன.

மக்கள் உயிருடன் தொடர்புடைய முக்கியமான ஒப்பந்தம் என்ற கருத்துகூட இல்லாமல், இலஞ்ச-ஊழல்-முறைகேடுகளை பார்ப்பன பாசிஸ்டுகள் இயல்பாகக் கொண்டிருப்பதைத்தான் இந்த குஜராத் மாடல் நமக்கு உணர்த்துகின்றன.

முக்கியமாக, பாலத்தில் செல்வதற்கான கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்தியது; சீரமைப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் நிதியில், வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்தது; மறுசீரமைப்புப் பணிகள் முடிக்காத நிலையில், பண்டிகையை ஒட்டி அவசர அவசரமாக பாலத்தைத் திறந்தது; 125 பேர் மட்டுமே தாங்கும் பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோரை அனுமதித்து கொள்ளையடித்தது போன்றவை இந்த ஒரேவா நிறுவனம் ஈவிரக்கமில்லாமல் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனம் என்பதையே காட்டுகின்றன.

இந்த மோர்பி தொங்கு பாலம் மட்டுமல்ல, குஜராத் அரசின் எல்லா துறைகளும் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளன. குஜராத் மாடல் வளர்ச்சி என்றாலே எல்லா துறைகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதுதான்; அதாவது மக்கள் மீதான கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை நீக்கமற நிறுவுவதுதான். அவ்வாறு நிறுவப்பட்டிருப்பதன் விளைவும் வெளிப்பாடும்தான் ஏறத்தாழ 150 பேரை பலிகொண்ட கோர நிகழ்வு. எனவேதான் மோர்பி பாலம் அறுந்து விழுந்த நிகழ்வு ஒரு விபத்தல்ல, படுகொலை என்கிறோம்.

0-0-0

தொங்குபாலம் பராமரிப்பில் காட்டிய அலட்சியம், ஒரேவா-வின் இலாபவெறிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தொங்குபால விபத்து நடந்த பின்னர், பா.ஜ.க. மோடி கும்பலும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு பேசிய மோடி, “ஒரு பக்கம் இதயம் வலியால் கனக்கிறது; இன்னொரு பக்கம் கடமையின் பாதை அழைக்கிறது. நான் ஏக்தா நகரில் இருக்கிறேன். ஆனால் எனது எண்ணம் எல்லாம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே உள்ளது. எனது வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருப்பேன்” என்று மிகவும் தந்திரமாக நடித்தார். அன்று மாலையே, பனஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடையிலேயே முதலைக் கண்ணீர் வடித்தார். ஆனால், விபத்து ஏன் நடந்தது, விபத்துக்கான காரணம் என்ன என்று ஒருவார்த்தைக் கூட பேசவில்லை.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைப் பெறுபவர்களை மருத்துவமனைக்குச் சென்று மோடி சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் விபத்துக்குள்ளானவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனையின் யோக்கியதை வெளி உலகிற்குத் தெரியவந்தது. பிரதமர் மோடி மருத்துவமனைக்கு வருகிறார் என்பதால், பாழடைந்த மருத்துவமனையை அவசர அவசரமாகப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனையில் சுவர்களுக்கு வண்ணம் பூசுதல், உடைந்த தரைக்கற்களை மாற்றுதல், மேற்கூரையைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் போதிய அளவு படுக்கைகள், போர்வைகள் கூட இல்லை. மோடி வருகைக்காக 105 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம்நகர் அரசு மருத்துவமனையில் இருந்து போர்வைகள் கொண்டுவரப்பட்டன. குடிநீர் இணைப்பு இல்லாமலே தண்ணீர் குளிர்விப்பான் அமைக்கப்பட்டிருந்தது. மோடி வருகை காரணமாக, தொங்கு பால விபத்தினால் படுகாயமுற்ற 56 பேர் சிகிச்சை முடிவடையாத நிலையில் இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து குஜராத் மாடலின் கோர முகத்தைக் காட்டின. குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இச்சூழலில், தனது வாக்கு வங்கி சரிவதைத் தடுப்பதற்காக பா.ஜ.க. மோடி கும்பல் பொய் பிரச்சாரங்களைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிட்டது. இத்தனைக்கும் பிறகு, கொஞ்சமும் வெட்கமில்லாமல் “நான் உருவாக்கிய குஜராத்” என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் மோடி.

தொங்கு பால விபத்தில் மக்களைக் காப்பாற்றினார் என்று கூறி, பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியாவை இத்தொகுதியில் நிறுத்தி பா.ஜ.க. வெற்றிபெற முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையமோ ஒருபடி மேலே போய், மோர்பி சம்பவத்துக்கு அடுத்து குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் ஒருவாரத்திற்கு நிறுத்தி வைத்தது. பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலை வடிந்த பின்னர்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது.

ஒருபுறம் பிரதமர் மோடியின் புளுகுகளையும் நாடகத்தையும் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போதே, இளைஞர்கள் பாலத்தை ஆட்டியதால்தான் பாலம் அறுந்து விழுந்தது என்று பொய்ச் செய்திகளைப் பரப்பின.

படிக்க: மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி, “மோர்பி பால விபத்து என்பது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதியாக இருக்கும்” என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்பின. ஆனால், ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல், இன்னும் கைது செய்யப்படாததைப் பற்றி இந்த ஊடகங்கள் மூச்சுக்கூட விடவில்லை.

வடநாட்டு பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள் மட்டுமல்ல, விகடன் குழும நிறுவனங்கள் கூட, விபத்தில் தனியார் நிறுவனம்தான் தவறு செய்துவிட்டது போல சில விவரங்களைச் சொல்லிவிட்டு, நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தீவிர விசாரணைகள் நடப்பதாகவும் ‘புலனாய்வு’ச் செய்திகளை வெளியிட்டன. பா.ஜ.க. மோடி கும்பலின் அப்பட்டமான ஊழல்-முறைகேடுகள் குறித்து ஒருவார்த்தைக் கூட பேசவில்லை. மாறாக, மோடியின் நீலிக்கண்ணீர் நாடகத்தை மக்கள் மீதான அக்கறையைப் போல சித்தரித்தன.

மொத்தத்தில், மோர்பி பாலம் அறுந்து விழுந்ததானது, குஜராத் மாடல் வளர்ச்சியின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. குஜராத் மாடலானது குஜராத்தி-மார்வாடி-படேல்-பனியா போன்ற வடநாட்டு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொர்க்கம், உழைக்கும் மக்களுக்கோ சவக்குழி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க