‘டபுள் இஞ்சின் சர்க்கார்’ ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ளது வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம் (Veer Narmad South Gujarat University – VNSGU). அம்மாநிலத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகளும் கேலிக்கூத்துகளும் அரங்கேறி வருகின்றன.

வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மற்றும் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்ட ஜோதிடம் மூலம் ஆலோசனை செய்யப்பட்ட சம்பவம் ஆகியன இதற்கான எடுத்துக்காட்டுகள். வாஸ்து சாஸ்திரத்தின்படி வகுப்பறைகளை மாற்றினால் வினாத்தாள் கசிவு தடுக்கப்பட்டு, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என ஜோதிடர் கூற அதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் துவங்கியுள்ளது.

மேலும், ஜோதிடர் கூறிய வகையில் புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வுசெய்த பின்னர் கட்டுமானப் பணிகளுக்கு முதல் தவணையாக ₹30 கோடியை ஒதுக்கியுள்ளது குஜராத் அரசு.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு பயோடெக்னாலஜி துறையின் கீழ் வி.என்.எஸ்.ஜி.யு பல்கலைக்கழகத்தில் “காம தேனு இருக்கை” (Kamdhenu Chair) என்ற பெயரில் ஆராய்ச்சிப் படிப்பு துவங்க குஜராத் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. “காம தேனு இருக்கை” படிப்பு மூலம் பசு சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு என்பது கல்வி வணிகமயமாக்கப்படுவது மற்றும் அரசு நிர்வாகத்தோடு தொடர்புடைய ஒன்று. தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதானது மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரத்தைப் பொறுத்த விஷயம். புதிய கட்டிடம் கட்ட இடம் கண்டுபிடிக்க பொறியாளர் மூலம் ஆய்வு மேற்கொள்வதென்பது வழக்கமான நடைமுறை ஆகும்.

ஆனால், இங்கு வினாத்தாள் கசிவைத் தடுக்க, தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, புதிய கட்டிடம் கட்ட இடம் கண்டுபிடிக்க ஜோதிடர் களமிறக்கப்பட்டுள்ளார். கல்வித்துறையில் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் திணிக்கும் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அதேபோல், கால்நடை மருத்துவப் பிரிவில் ஏற்கெனவே மாடு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளன. அப்படி இருக்கும்போது பசு ஆராய்ச்சிக்கென புதிய படிப்பை அறிமுகப்படுத்துவது தேவையற்றது. இது முழுக்க முழுக்க இந்துத்துவா அரசியலைப் பரப்புவதற்கான நடவடிக்கைதான் என்பதில் சந்தேகமில்லை.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க