2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1

குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 அன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அங்கு பிரதானமான கட்சிகளாக இருக்கின்றன.

வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உள்ள விவரங்களை ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பகுப்பாய்வு செய்து நவம்பர் 24 மற்றும் நவம்பர் 28 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது 238-ஆக இருந்தது; அது தற்போது 330 ஆக அதிகரித்துள்ளது.


படிக்க: இந்தியா தேர்தல் எதேச்சதிகார நாடாக மாறிவிட்டது : ஸ்வீடன் ஆய்வு நிறுவனம்


ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 181 பேரில் 61 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 179 வேட்பாளர்களில் 60 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்; ஆளும் பாஜக கட்சியின் 182 வேட்பாளர்களில் 32 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.

ஆத்மி கட்சியை சேர்ந்த 40 வேட்பாளர்களின் மீது தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸில் 28 பேர் மீதும், பாஜகவில் 25 பேர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கொலை, ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊழல் வழக்குகள் ஆகியவை தீவிர குற்ற வழக்குகளில் அடங்கும்.

பாஞ்ச்மஹல் மாவட்டத்தின் ஷெஹ்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ஜெத்தா பர்வாத் பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2012 ஆம் ஆண்டில் குஜராத் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சட்டசபைக்குள் அமர்ந்து தனது கைபேசியில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தவர் தான் அவர்.

அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்க்ராய் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் கிரண் படேல் மீது கொலை வழக்கும், பதான் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிரித் படேல் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-இல் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்தால் அதற்கான காரணத்தை வெளியிட வேண்டும் என்றும், குற்றப் பின்னணி இல்லாதவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும் அரசியல் கட்சிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இந்த உச்சநீதிமன்ற உத்தரவால் எந்த பயனும் ஏற்படவில்லை. 20.36 சதவிகித வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.


படிக்க: அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !


1621 வேட்பாளர்களில் 456 பேர், அதாவது 28 சதவிகிதத்தினர் கோடீஸ்வரர்கள். 2017 தேர்தலின் போது இவர்களின் எண்ணிக்கை 397 ஆக இருந்தது.

2022 தேர்தலில், பாஜக வேட்பாளர்கள் 154 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சியில் 142 பேரும், ஆம் ஆத்மி கட்சியில் 62 பேரும் கோடிஸ்வரர்கள்.

தேர்தல் களம் என்பது இயல்பாகவே கிரிமினல்களுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் சாதகமான ஒன்றாகவே இருந்து வருகிறது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்ற ஓர் பாசிச நடவடிக்கையை மேற்கொண்டு போலி ஜனநாயகத்தின் இறுதி எல்லையை காட்டிய குஜராத் மாடலில் தற்போது குற்றப்பின்னணி கொண்டவர்கள் தான் வேட்பாளர்கள். வாக்களித்தாலும் பிரச்சினை வாக்களிக்காவிட்டாலும் பிரச்சினை; இதுதான் குஜராத் மக்களின் தற்போதைய நிலை!

பொம்மி

1 மறுமொழி

  1. BJP எதிரான, அதிருப்தி ஓட்டுக்களை வாரியெடுக்க ஆம்ஆத்மி களத்தில் இறக்கிவிட்டார்கள்.

    மும்முனை போட்டியில் ஓட்டை பிரிக்கும் வேலை ஆம் ஆத்மிக்கு!

    ஏறக்குறைய BJPயின் வெற்றி உறுதி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க