ஒருவிரல் புரட்சியா, மக்கள் எழுச்சியா: பாசிசத்தை எதிர்கொள்ள, “சாத்தியமான மாற்று” எது?

ஆகப் பெரும்பான்மை மக்கள் நிராகரித்த ஒரு கட்சிக்கு 'பெரும்பான்மை' கிடைக்கச் செய்திருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பு முறைதானே ஒழிய, தேர்தல் மோசடிகள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், தேர்தல் மோசடிகளை அரங்கேற்றுவதற்கே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறைதான் அடிப்படையாக இருக்கிறது. "மோசடி" என்று சாட வேண்டுமென்றால், இந்த போலி ஜனநாயக அமைப்புமுறையைத்தான் சாட வேண்டும்.

லகின் அனைத்து நாடுகளிலுமுள்ள ஆட்சிமுறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றின் தன்மையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவருகிறது ஸ்வீடனின் கோதன்பக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த “வி-டெம்” (V-DEM – Varieties of Democracy) என்ற நிறுவனம். இந்த ஆண்டு மார்ச் மாதம் வி-டெம் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. “எதேச்சதிகாரமயமாக்கத்தை எதிர்கொள்ளல்” (Defiance in the Face of Autocratization) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் உலகின் 42 நாடுகளின் அரசுகள், தங்களது ஜனநாயகக் கூறுகளை கைவிட்டு ஏதேச்சதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான முடிவை வெளியிட்டுள்ளது.

அவ்வாறு ஏதேச்சதிகாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாடுகளில், இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுகிறது என்பதுதான் நமது பரிசீலனைக்கு உரிய விசயம். இந்தியாவில் நிலவும் ஆட்சிமுறையை அந்த அறிக்கை “தேர்தல் எதேச்சதிகாரம்” (Electoral Autocracy) என்று வகைப்படுத்தியுள்ளது.

தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், அவை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்படாமல் இருப்பது; கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை, அமைப்பாய் திரளும் உரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் வெட்டிக் குறுக்கப்பட்டிருப்பது ஆகிய நிலைமைகளை “தேர்தல் எதேச்சதிகாரம்” என்று வகைப்படுத்துகிறது வி-டெம் அறிக்கை.

2021-ஆம் ஆண்டிலேயே வி-டெம் நிறுவனம் இந்தியாவை “தேர்தல் எதேச்சதிகாரம்” கொண்ட நாடு என்று வகைப்படுத்திவிட்டது. வி-டெம் மட்டுமின்றி, அதே ஆண்டில் சுதந்திர வீடு (Freedom House) என்ற அமைப்பு இந்தியாவை “அரைகுறை சுதந்திரம்” (partly free) என்றும், ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான நிறுவனம் (Democracy and Electoral Assistance) என்ற அமைப்பு ” ஜனநாயக பின்னடைவு” (backsliding democracy) என்றும், உலகளாவிய ஜனநாயக நிலை (Global State of Democracy) என்ற அறிக்கை “மிகப்பெரும் வீழ்ச்சியடைந்த ஜனநாயகம்” (major decliner) என்றும் இந்தியாவை வகைப்படுத்தி இருந்தன.


படிக்க: கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது


விவாத சுதந்திரம் நசுக்கப்படுதல், கலாச்சார உரிமைகள் பறிக்கப்படுதல், மக்கள் மீதான அடக்குமுறைகள், சுயேட்சையான நிறுவனங்கள் அரசியல் சார்போடு செயல்படுதல் – என பல்வேறு வகைகளில், ‘உலகின் மாபெரும் ஜனநாயகம்’ ஐ.சி.யூ. வார்டில் இருப்பதாக மேற்கண்ட முதலாளித்துவ நிறுவனங்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பெயர்களில் இதை விளக்கினாலும், “தேர்தல் எதேச்சதிகாரம்” என்ற சொல் மற்றவற்றைக் காட்டிலும் மிகப் பொருத்தமான சொல்லாகவே நமக்குப் படுகிறது. ஏனெனில், சட்டப்பூர்வ முறைகளிலேயே ஒரு பாசிச ஆட்சி நடைபெற்றுவருவதை, “தேர்தல் எதேச்சதிகாரம்” என்ற சொல்தான் ஓரளவேனும் நெருக்கமாகப் பிரதிபலிக்கிறது.

“தேர்தல் ஜனநாயகம் நிலவும் நாட்டில் உள்ள சர்வாதிகாரப் போக்குகள்” என்று சொல்லவில்லை; “தேர்தல் முறையிலேயே மோசடிகள் நடைபெறும் எதேச்சதிகார ஆட்சிமுறை நிலவும் நாடு” என்ற பொருளிலேயே இந்த சொல்லை வி-டெம் நிறுவனம் கையாளுகிறது.

இந்தியாவில் நிலவும் போலி ஜனநாயக அரசமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பாசிச ஆட்சிக்கு அடித்தளமாக இருக்கிறது என்று நாம் தொடர்ந்து பேசிவருகிறோம். மேலும் அந்த போலி ஜனநாயக அரசமைப்பையே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தமது இந்துராஷ்டிர லட்சியத்திற்கு ஏற்றவகையில் மறு ஒழுங்கு (Remodify) செய்துகொண்டிருப்பதையும் பல்வேறு நிகழ்வுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அந்தவகையில், இன்று தேர்தல் அமைப்பில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் மறு ஒழுங்கு நடவடிக்கைகள் என்பது முக்கியமானதாக இருக்கிறது.

‘உலகின் மிகச் சக்திவாய்ந்த ஜனநாயக’த்தின், ‘மிகச் சுதந்திரமான’ அமைப்பான தேர்தல் ஆணையத்தை பாசிஸ்டுகள் தங்களது நோக்கங்களுக்கு ஏற்ப எப்படியெல்லாம் வளைத்துள்ளார்கள் என்பது தொடர்பான விவரங்களை, அண்மையில் வெளிவந்த பொருளாதார உதவிப் பேராசிரியர் சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கை வெளியான பதினைந்து நாட்களில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) மசோதா 2023”-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

இப்படிப்பட்டச் சூழலில், பாசிச எதிர்ப்புக்கு தேர்தலை ஒரு களமாக பயன்படுத்துவது இருக்கட்டும், பா.ஜ.க. என்ற கட்சியை வீழ்த்துவதற்காகவாவது இந்த தேர்தலை பயன்படுத்த முடியுமா? என்ற கேள்வியை நம் முன் எழுப்புகிறது, பேராசிரியர் சப்யசாச்சியின் அறிக்கையும், மோடி அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டமும்.

அம்பலமானது தேர்தல் அதிகாரிகள் + பாசிஸ்டுகளின் கள்ளக்கூட்டு!

கடந்த ஜூலை 25-ஆம் தேதியன்று, அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதார உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவந்த சப்யசாச்சி தாஸ் என்பவர், “உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” (Democratic Backsliding in the World’s Largest Democracy) என்ற தலைப்பில், 50 பக்க ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் உதவியுடன் பல்வேறு இடங்களில் மோசடிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் அந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த ஆய்வறிக்கை சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டவுடன், பா.ஜ.க. தரப்பிலிருந்து பேராசிரியருக்கு பகிரங்கமான மிரட்டல்கள் வந்தன. மற்றொருபுறம், அசோகா பல்கலைக்கழக நிர்வாகம் அந்த ஆய்வறிக்கைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்று விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு, பேராசிரியர் சப்யசாச்சி தாஸை மிரட்டி ராஜினாமாவும் செய்யவைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் அடியாளைப் போல செயல்பட்டுவரும் அசோகா பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பேராசிரியர் சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கும் விசயங்கள் இன்று ஜனநாயக சக்திகள் மத்தியில் மிகப்பெரிய விவாத அலையை எழுப்பியுள்ளது.

000

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டி நிலவிய தொகுதிகள் பெரும்பாலானவற்றில், தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதன் மூலமே பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கிறது என்பதுதான் பேரா.சப்யசாச்சி ஆய்வறிக்கையின் சாரம். இந்த தேர்தல் மோசடிகள் எந்தெந்த வகைகளில் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதை அவர் பல்வேறு அதிகாரப்பூர்வ தரவுகளிலிருந்தே ஒரு சித்திரமாக வரைந்துகாட்டுகிறார். ஆகையினால்தான், தனது யோக்கியதையை கேள்விக்குள்ளாக்கும் இந்த அறிக்கையைப் பற்றி, இதுவரை எவ்வித பதிலறிக்கையும் தராமல் கள்ள மௌனம் சாதித்துவருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.

பா.ஜ.க.வுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையாக போட்டி நிலவிய – அதாவது இருதரப்பும் வெல்வதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பு இருந்த 59 தொகுதிகளில், 41 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. இப்படியான வெற்றிவாய்ப்புகளுக்கு கடந்த தேர்தல்களில் முன்னுதாரணங்கள் இல்லை என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர் சப்யசாச்சி தாஸ், வெற்றிப்பெற பா.ஜ.க. இத்தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் மோசடி நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கருதுகோளுக்கு வந்தடைகிறார்.

வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தின் (Centre for Developing Societies) தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, கடுமையான போட்டி நிலவிய அத்தொகுதிகளில், பா.ஜ.க.வை விட எதிர்க்கட்சிகளே தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற முடிவைக் காண்கிறார். ஆகவே, எஞ்சியிருப்பது தேர்தல் மோசடிதான். தேர்தலில் மோசடிகளில் ஈடுபட்டால் அவை எந்தெந்த வடிவங்களில் நடைபெற்றிருக்கக் கூடும் என்று மூன்று சாத்தியக் கூறுகளை முன்வைத்து தனது கருதுகோள்களுக்கான ஆதாரங்களைத் தேடுகிறார்.

ஒன்று, வாக்காளர் பட்டியலில் இருந்து பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போடாதவர்களின் பெயர்களை நீக்குதல்; இரண்டாவது வழி, பா.ஜ.க.-வை ஆதரிக்காத வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குச் செல்லவிடாமல் தடுத்தல்; மூன்றாவது, வாக்கு எண்ணிக்கையில் மோசடி – இந்த மூன்று சாத்தியங்களுமே நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளது என்பதை அவர் ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறார்.

ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடும்போது, கடுமையான போட்டி நிலவி, பா.ஜ.க. வெற்றிபெற்ற தொகுதிகளில் வாக்காளர் வளர்ச்சிவிகிதம் வெகுவாக குறைந்திருப்பதை ஆய்வாளர் காண்கிறார். அதாவது, ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு பிறகு புதிய வாக்காளர்களைக் கொண்ட பட்டியல் வெளியிடப்படும்; அவ்வாறான பட்டியலில் மேற்கண்ட தொகுதிகளில் குறைவான வாக்காளர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முஸ்லிம்கள் கணிசமாக உள்ள தொகுதிகளில், இந்த முரண்பாடு பளிச்செனத் தெரிவதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார். அதாவது முஸ்லிம் வாக்களார்களில் கணிசமானோர் வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விடப்பட்டுள்ளனர் என்பதே இதன் பொருள்.

தன்னுடைய கருதுகோளுக்கு கூடுதல் வலுசேர்க்கும்விதமாக, குயின்ட் தளத்தின் புலனாய்வு செய்திப் பிரிவின் ஆசிரியர் பூனம் அகர்வால், 2019-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரையை ஆதாரமாக எடுத்துக் கொள்கிறார், சப்யசாச்சி தாஸ்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய தேர்தல் ஆணையமானது பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகள் என்று இரண்டு தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது. இத்தரவுத் தொகுப்பில் பதிவான விவரங்களின்படியே, சுமார் 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வேறுபாடு இருந்தது. இந்த மோசடியைச் சுட்டிக்காட்டி பூனம் அகர்வால் தனது கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் அம்பலமானதற்குப் பிறகு தேர்தல் ஆணையம் தான் வெளியிட்ட தரவுத் தொகுப்புகளை அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து நீக்கிவிட்டது. அவை வெறுமனே நிர்வாகக் கோளாறால் நிகழ்ந்த ‘எழுத்துப் பிழைகள்’ என்று சொத்தைக் காரணத்தைச் சொல்லியது. பூனம் அகர்வாலின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுசெய்த பேரா.சப்யசாச்சி தாஸ், அந்த ‘எழுத்துப் பிழைகள்’ பெரும்பாலும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள தொகுதிகளிலேயே குறிவைத்து நிகழ்ந்திருப்பதை அடையாளம் காணுகிறார்.

பா.ஜ.க. மோசடி செய்து வெற்றிபெற்றதாக ஆய்வாளர் குறிப்பிடும் தொகுதிகளுள் பெரும்பாலானவை (22), அக்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் உள்ளவை என்பதோடு, இந்த விவரம் ஒத்திசைந்து போகிறது. இதன்மூலம் மோசடிக்கான முகாந்திரத்தை ஆய்வாளர் உறுதிசெய்கிறார்.

முஸ்லிம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது; வாக்கு எண்ணிக்கை பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்கும்வகையில் மோசடி செய்திருப்பது போன்றவை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் துணையில்லாமல் நடைபெற முடியாது. ஆகவே, சர்ச்சைக்குரிய அத்தொகுதிகளில் தேர்தல் பொறுப்பாளர்களாக வேலைபார்த்த அதிகாரிகளின் பின்னணியையும் ஆராய்ந்திருக்கிறார் பேரா.சப்யசாச்சி தாஸ். சொல்லிவைத்தாற்போல, அவர்களெல்லாம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட்ட மாநில குடிமைப் பணி அதிகாரிகள்.

ஆகவே, தேர்தல் அதிகாரிகளின் துணையோடு, பாசிச பா.ஜ.க.வினர் மிகப்பெரிய தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை பேரா.சப்யசாச்சி தாஸின் ஆய்வறிக்கை மெய்ப்பித்துள்ளது.

போலி ஜனநாயகத்திற்கே உரிய “தேர்தல் எதேச்சதிகாரம்”

அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை ஆகியவற்றைப் போல, தேர்தல் ஆணையமும் பாசிச பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்படும் அமைப்புதான் என்பது இதற்கு முன்பே பலமுறை அம்பலமாகியிருக்கிறது. பேராசிரியர் சப்யசாச்சியின் அறிக்கை அதற்கு “வலுவான புதியதொரு ஆதாரம்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் செயல்பட்டதை நாடறியும். தேர்தல் தேதி அறிவிப்பது வரை அனைத்தும் பா.ஜ.க. அலுவலகத்தில்தான் முடிவுசெய்யப்பட்டன.

அரிதினும் அரிதாக, 2019-ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையர்களுள் ஒருவராக இருந்த அசோக் லவாசா என்ற அதிகாரி, நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களுக்கு அடிப்படை இருப்பதாக கருத்துத் தெரிவித்தார். அவரது கருத்து தேர்தல் ஆணையக் குழுவில் இருந்த மற்ற இரண்டு அதிகாரிகளால் பெரும்பான்மை அடிப்படையில் நிராகரிக்கப்பட்டபோதும், தனது கருத்தை சிறுபான்மை என்று பதிவுசெய்து வெளியிடக் கோரி போராடினார். அவரது கருத்து ஏற்கப்படவில்லை. அதற்கடுத்து, அவரது சகோதரரின் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை ரெய்டு ஏவப்பட்டது. காவிக் கும்பலால் அச்சுறுத்தப்பட்ட அவர், கடைசியில் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து முஸ்லிம்கள், தலித்துகள் குறிவைத்து நீக்கப்படுவதும், முஸ்லிம்கள் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவிடப் படாமல் காவி குண்டர்களாலும் போலீசாலும் விரட்டியடிக்கப்படுவதும் ஒவ்வொரு சட்டமன்ற, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போதும் உத்தரப் பிரதேசத்தில் பொதுப்போக்காகவே இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்படுவது குறித்து பல புகார்கள் வெளிவந்துள்ளன. பகிரங்கமாகவே அம்பலமான இந்நிகழ்வுகளை ஒட்டி தேர்தல் ஆணையம் இதுவரை எந்தத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரப்படி, இந்தியாவில் சுமார் 12 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து ‘காணாமல் போயுள்ளனர்’ என்று கூறுகிறார்கள், “காணமல்போன வாக்காளர்கள்” (missing voters) என்ற செல்போன் செயலியை நடத்திவரும் தன்னார்வலர்கள். இவர்களுள் ஆகப் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளிலேயே கீழ்நிலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய செய்தி.

000

தேர்தல் ஆணையத்தைக் கைக்குள் போட்டுக்கொண்டு, அராஜகங்களிலும் மோசடிகளிலும் ஈடுபடுவது பிரச்சினையின் ஒருபகுதிதான். அவற்றைத்தான் மேலே சுருக்கமாக விளக்கியுள்ளோம். இதுவே முழுமையல்ல.

இதையே முழுமை என்று புரிந்துகொண்டால், பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிகள் அனைத்தும் மோசடிகளால் பெறப்பட்டவை, மற்றபடி அதன் இந்துவெறி அரசியலுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற தவறான முடிவுகளுக்கு நாம் வந்துசேருவோம்.

‘பெரும்பான்மை’ மக்களை தமது இந்துமதவெறி – தேசவெறி அரசியலுக்கு வென்றெடுத்திருப்பதுதான், பா.ஜ.க.வின் வெற்றிகளுக்கு முதன்மைக் காரணம். 303 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக, அசுர பலத்தோடு அமர்ந்திருப்பதற்கு தேர்தல் மோசடிகள் கூடுதல் காரணங்களாகும்.

ஆனால், இந்த ‘பெரும்பான்மை’ எப்படி உருவாக்கப்படுகிறது என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது!

303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியில் அமர்ந்தாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வாக்கு சதவிகிதம் – அதாவது ஒட்டுமொத்த வாக்காளர்களில் பா.ஜ.க.வை தேர்வு செய்தவர்களின் சதவிகிதம் 37.36 சதவிகிதம் மட்டுமே. அத்தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 67 சதவிகிதமாகும். அந்தவகையில் பா.ஜ.க பெற்ற ஆதரவானது மொத்த வாக்காளர்களில் சுமார் 25 சதவிகிதம் மட்டுமே.

இதற்கு முந்தைய 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வின் வாக்கு சதவிகிதம் 31 மட்டுமே. அத்தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 66.4 சதவிகதமாகும். அந்தவகையில் பா.ஜ.க பெற்ற ஆதரவானது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவிதம் மட்டுமே.

இப்படி ஆகப் பெரும்பான்மை மக்கள் நிராகரித்த ஒரு கட்சிக்கு ‘பெரும்பான்மை’ கிடைக்கச் செய்திருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பு முறைதானே ஒழிய, தேர்தல் மோசடிகள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், தேர்தல் மோசடிகளை அரங்கேற்றுவதற்கே இந்த போலி ஜனநாயக அமைப்பு முறைதான் அடிப்படையாக இருக்கிறது. “மோசடி” என்று சாட வேண்டுமென்றால், இந்த போலி ஜனநாயக அமைப்புமுறையைத்தான் சாட வேண்டும்.

ஒரு தொகுதியில் அதிகப்படியான வாக்குகளை பெறும் வேட்பாளர் மக்கள் பிரதிநிதியாகவும் பெரும்பான்மை பிரதிநிதிகளை கொண்ட கட்சி அல்லது கூட்டணி ஆளும் தகுதி பெறுகின்ற இந்த போலி ஜனநாயக தேர்தல் மோசடிதான் இந்து மதவெறி, சாதிவெறி, தேசவெறியை தூண்டிவிட்டு வாக்குகளை பெறுவதற்கு வழிவகை செய்து கொடுக்கிறது; பணபலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி எதிர்கட்சிகளை விலைக்குவாங்கவும் மிரட்டவும் தமக்கு வாக்களிக்காத மக்களை ஓட்டுப்போட விடாமல் தடுக்கவும் வாய்ப்பளிக்கிறது. இன்னும் சொல்லப் போனால், 50 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்றால் கூட அத்தேர்தலை அங்கீகரித்து அதில் அதிக வாக்கு பெற்றவர்களை மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கும் மோசடி காலங்காலமாக நடந்து வருகிறது.

1952-க்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் இராணுவத்தின் நேரடி தலையீட்டினால் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பல பகுதிகளில் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் 10 சதவிகித மக்கள் கூட வாக்களிக்காத நிலையில் அத்தேர்தல்கள் அங்கீகரிக்கப்பட்டன.

போலி ஜனநாயகத்திற்கே உரிய இந்த எதேச்சதிகார அம்சம், அதை தேர்தலில் அறுவடை செய்துகொள்ளும் வாய்ப்பை தற்போது பாசிஸ்டுகளுக்கு வழங்குகிறது. குறிப்பாக, இந்துமதவெறி பார்ப்பனிய சித்தாந்தம் கொண்ட, அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி ஆதிக்கம் செலுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் போன்ற சட்டவிரோத பாசிச அமைப்பு எளிதாக இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை பயன்படுத்தி பெரும்பான்மையை உருவாக்கிக் கொள்கிறது.

ஒவ்வொரு தொகுதியிலும், எந்தெந்த சாதியினருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எந்த சாதியினருக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் வெற்றிபெறலாம் என்பதையும்; இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ள தொகுதிகளில், இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களை பரப்புவதன் மூலம் இந்து வாக்குகளை வேட்டையாடுவதையும் திட்டமாக வகுத்துக் கொண்டு பா.ஜ.க. வேலைசெய்கிறது. இப்படித்தான் தனது இந்துவெறி பாசிச அரசியலையும், வாக்குவங்கி அரசியலையும் ஒன்றிணைக்கிறது. இதுதான் புகழ்பெற்ற அமித்ஷா ஃபார்முலா!

இதுநாள்வரை பிழைப்புவாத, காரியவாத கட்சிகள் பயன்படுத்திய மேற்கண்ட கேடுகெட்ட இழிந்த வழிமுறைகளை ஒரு பாசிச சித்தாந்த அமைப்பு பயன்படுத்தி இக்காரியவாத, பிழைப்புவாத கட்சிக்களுக்கான அடித்தளத்தையே ஒழித்துக்கட்டுகிறது.

இஸ்லாமியர்கள், கிறித்தவர்களின் இடஒதுக்கீடுகளை இந்துக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சித்தரிப்பது, இந்துப் பண்டிகைகளை ஒட்டி அரசு சலுகைகளை அறிவிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது போன்ற பா.ஜ.க.வின் அண்மை நடவடிக்கைகளெல்லாம் இந்த ஃபார்முலாவின் நீட்சியே.

தனது இந்துத்துவ வாக்குவங்கிக்கு ‘பெரும்பான்மை’ கிடைப்பதை உறுதிசெய்யவும், அதனை சிதறடிக்கும் வாக்காளர்களின் (முஸ்லிம்கள், கிறித்தவப் பழங்குடிகள், தலித்துகள்) வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கைகளையும்தான் தேர்தல் ஆணையத்தை வைத்து கூடுதலாக செய்துவருகிறது பா.ஜ.க. கும்பல்.

தேர்தல் முறையில் மேற்கொள்ளப்படும் மறுஒழுங்கமைப்பு நடவடிக்கைகள்!

இவ்வளவும் கஷ்டப்பட்டு செய்வதை சுலபாக முடித்துத் தருவதற்குத்தான், “தொகுதி மறுவரையறை” வர இருக்கிறது. இதன் மூலம் இஸ்லாமியர்கள் மற்றும் தமக்கு சமூக அடித்தளமாக இல்லாத சாதிகள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை உடைப்பது, தமது இந்து மதவெறி அரசியலுக்கு சமூக அடித்தளமாக உள்ள சாதிகள், மக்கள் பிரிவுகள் பெரும்பான்மையாக அமையும்படி தொகுதிகளையே மாற்றியமைப்பது ஆகியவைதான் தொகுதி மறுவரையறையின் நோக்கம்.

காஷ்மீர், அசாம் ஆகிய மாநிலங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை  முயற்சிகள், நாளை நாடு முழுக்கவும் அமலுக்கு வரும் என்பதை புதிய நாடாளுமன்றத்தின் கூடுதல் இருக்கைகள் நமக்குப் பளிச்செனக் காட்டுகின்றன.

தொகுதிகளை மாற்றியமைப்பது மட்டுமில்லை. தேவைப்பட்டால், மாநிலங்களையும் தமக்கு தோதான வகையில் உடைத்து, தனி மாநிலங்களாக, யூனியன் பிரதேசங்களாக அமைப்பதும் பாசிச பா.ஜ.க.வின் சதித் திட்டத்தில் உள்ளவைதான். காஷ்மீரை லடாக், ஜம்மு காஷ்மீர் என்று உடைத்தது அதற்கு ஒரு சான்று. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை உடைத்து “கொங்கு நாடு” அமைக்க வேண்டும், தென் மாவட்டங்களை தனி மாநிலமாக அமைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் பேசிவருவது, பரிகசிக்கத்தக்கது அல்ல; அது அவர்களின் நீண்டகால நோக்கம். தம்மால் வீழ்த்தப்பட முடியாத இரும்புக் கோட்டையான தமிழ்நாட்டை துண்டாடுவதற்குதான், சாதிச் சங்கங்களை கொம்பு சீவி வளர்த்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

வாக்காளர்களிடையே தங்களுக்கு பெரும்பான்மையை உருவாக்க, தொகுதி மறுவரையறை  ஒரு வடிவம் என்றால், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மற்றொரு வடிவம். தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் பகிர்வு போன்று ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உள்ள தனித்த பிரச்சினைகளையும், கல்வி, சுகாதாரம், குடிநீர், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகளையும், வாக்காளர்களின் சிந்தனையிலிருந்தே அப்புறப்படுத்திவிட்டு; சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தான் போர் அபாயம், ஐந்து டிரில்லியன் பொருளாதாரம், சந்திரயான் – ககன்யான் திட்டங்கள் போன்றவற்றைக் காட்டி தேசவெறியூட்டி வாக்காளர்களை மூளைச் சலவைசெய்வது; இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கூடிய “ஒரு வலிமையான தலைவருக்கு” வாக்களிக்க வைப்பது என்ற அணுகுமுறைதான் ஒரே நாடு ஒரே தேர்தல்.

இவை மட்டுமின்றி, ஒவ்வொரு வாக்காளர்களையும் தனித்தனியாகக் கண்காணித்து, அவர்களுக்கு இருக்கும் தேவைகளைக் கண்டறிந்து சலுகைகளை அறிவித்தோ, மிரட்டியோ தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைப்பதற்கும் சட்டரீதியாகவே புதுப்புது ஏற்பாடுகளை செய்துவருகிறது பாசிச பா.ஜ.க.

குஜராத்தில் தொழிற்சாலைகளில் வேலை செய்யக் கூடிய தொழிலாளர்கள், தேர்தல்களின்போது வாக்குச் செலுத்தினார்களா, இல்லையா என்பதைக் கண்காணித்து, வாக்களிக்காதவர்களின் பெயர்களை தொழிற்சலைகளின் அறிவிப்பு பலகைகளில் ஒட்டுவது என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறது குஜராத் தேர்தல் ஆணையம். ஜனநாயக நாட்டில் வாக்களித்தல் என்ற முக்கியமான கடைமையில் அனைவரையும் பங்கேற்க வைப்பது என்ற பெயரில் இந்த பாசிச உளவு வேலைக்கு நியாயம் கற்பிக்கிறது குஜராத் தேர்தல் ஆணையம்.

2022 ஜூன் மாதம் முதலாகவே இதற்காக குஜராத் தேர்தல் ஆணையம் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. நாளை இது மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம். இப்படிப்பட்ட முறைகள் இல்லாதபோதே, ஆதாரில் உள்ள முகவரிகளைத்  திருடி, பா.ஜ.க. பூத் அளவில் வாட்சப் குழுக்களை அமைத்த கதையை நாம் அறிந்திருக்கிறோம். இந்த பாசிச உளவு வேலைக்கு தற்போது சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்துள்ளார்கள் காவிகள்.

தொகுதி மறுவரையறை , ஒரே நாடு ஒரே தேர்தல், கட்டாய வாக்களிப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் ஆகியவையெல்லாம் நிலவும் போலி ஜனநாயக முறையையே, இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறு ஒழுங்கமைப்பு செய்யும் பாசிச நிகழ்ச்சிப் போக்காகும். இவையெல்லாம் அரசியல் அமைப்புச் சட்டதிற்கு விரோதமாக நடைபெறவில்லை. ஏற்கெனவே ஜனநாயக விரோதமாக, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு எதிராக உள்ள இந்த கட்டமைப்பை, பாசிஸ்டுகள் அதன் அடுத்த பரிணாமத்திற்கு கொண்டுசெல்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.


படிக்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | துண்டறிக்கை!


அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டமானது, பாசிசக் கும்பல் தனக்கு விசுவாசமான அடியாட்களை தேர்தல் ஆணையக் குழுவில் நியமனம் செய்வதற்கான ஏற்பாடாகும். தப்பித் தவறிக்கூட அசோக் லவாசா போன்ற தேர்தல் அதிகாரிகள், தேர்தல் ஆணையக் குழுவில் நுழைந்துவிடக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.

ஏற்கெனவே சந்திரசூட், கே.என்.ஜோசப் போன்ற நீதிபதிகள் தப்பித்தவறி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருவதை ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, கொலிஜியம் அமைப்பை ரத்துசெய்து, நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கத் துடிக்கிறது காவி கும்பல். அதையே தற்போது  தேர்தல் ஆணையத்திற்குச் செய்து முடித்திருப்பதுதான் “தேர்தல் ஆணையர்கள் நியமனம் சட்டம் 2023”.

கடந்தாண்டு, “நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு எப்படி அரசியல் தலையீடு இல்லாத அமைப்பாக கொலிஜியம் அமைப்பு இருக்கிறதோ, அதேபோல தேர்தல் ஆணையமும் அரசியல் தலையீடு இல்லாத வகையில் முறைப்படுத்தப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதம் அவ்வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்திற்கு உட்பட்டு, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் என்று தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை கேலிக்குரியதாக்கும் வகையில், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் குழுவிலிருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கியுள்ளதோடு, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் என்று சட்டத்திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதன் மூலம் தனது அடியாட்களையே தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்வதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது பாசிசக் கும்பல்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு, தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரியான அனுப் சந்திர பாண்டேவின் பதவிக் காலம் முடியும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, இந்த புதிய சட்டப்படிதான் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவுசெய்யப்பட இருக்கிறார்கள்.

உண்மைக்கு முகம்கொடுங்கள்!

இவையெல்லாம் அமலுக்கு வருவதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நம்மில் பலரும் கருதிக் கொண்டிருப்பதைப் போல, இந்த அரசியலமைப்பையோ, தேர்தல் முறையையோ பாசிசக் கும்பல் ரத்துசெய்ய வேண்டிய அவசியமே இருக்காது. தேர்தல்கள் நடைபெறும், ஆனால் அந்த ‘ஜனநாயகப் போரில்’ பாசிஸ்டுகளை ஒருக்காலும் நம்மால் வீழ்த்தமுடியாது!

நெருப்புக் கோழி தனது தலையை மண்ணுக்குள் போட்டுப் புதைத்துக் கொள்வதுபோல, மேற்கண்ட உண்மைகள் எதையும் காண மறுத்து, “தேர்தலில் யாரை ஆதரிக்கிறீர்கள்”; “சாத்தியமானதைப் பேசுங்கள்” என்று நம்மிடம் வம்பளக்கிறார்கள், பாசிச எதிர்ப்பு போர்வையில் ஒளிந்திருக்கக் கூடிய “மிக அபாயகரமான சந்தர்ப்பவாதிகள்”.

பாசிச அபயாத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், ஷாகீன்பாக், டெல்லிச் சலோ என்று ஒவ்வொரு திருப்பத்திலும் முகிழ்த்தெழும் மக்கள்திரள் போராட்டங்களை, பாசிஸ்டுகளுக்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியாக மாற்றமுடியும்; அதன் மூலம் பாசிசத்துக்கு அடிக்கொள்ளியாக இருக்கிற போலி ஜனநாயக அரசமைப்புக்கு மாற்றாக, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ‘சாத்தியமற்றது’ என்ற அவர்களது அவநம்பிக்கையை, அவர்கள் ஒட்டுமொத்த பாசிச எதிர்ப்பு சக்திகள் மீதும் திணிக்கிறார்கள்.

ஆனால், சாத்தியமானது எது, சாத்தியமற்றது எது என்பதை தீர்மானிப்பது, கருதுகோள்கள் அல்ல; “உண்மை”. தயவுசெய்து உங்களது கண்களைத் திறவுங்கள், “உண்மையைக் காணுங்கள்!”


பால்ராஜ்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)1 மறுமொழி

  1. ‘பெரும்பான்மை’ மக்களை தமது இந்துமதவெறி – தேசவெறி அரசியலுக்கு வென்றெடுத்திருப்பதுதான், பா.ஜ.க.வின் வெற்றிகளுக்கு முதன்மைக் காரணம். பா.ஜ.க.வின் கோயாபல்ஸ் பிரச்சாரத்திற்கும் இந்த பிரச்சாரத்தையே கன்னிவெடிகளாக புதைத்து குபீர் கலவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க பா.ஜ.க.வுக்குஉதவுவது அதன் ஆட்சி அதிகாரமே!
    எரியும் கொள்ளியை அவசரமாக பிடிங்கினால்தான் நாடு முழுக்க கலவரம் பொங்கிவழிவது உடனே குறையும். என்கிறார்கள்,“மிக அபாயகரமான சந்தர்ப்பவாதிகள்”.
    ஆக,மொத்தமாக அடுப்பை உடைப்பதா?தற்காலிகமாக கொள்ளியை உருவுவதா? எது?
    இதை விளக்கி இந்தக்கட்டுரையின் தொடர்ச்சி வந்தால் தெளிவு பிறக்கும்.இதை பிரசுரமாக விநியோகிக்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க