ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?

மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?

த்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் நகரம் ஜோஷிமத். மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஊர் ரிசிகேஷ் – பத்ரிநாத் ஹைவேயில் உள்ளது. இது சுற்றுலாப் பகுதியாகவும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,150 அடி உயரத்திலும் அமைந்துள்ள இந்த நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றன.

இமயமலை அடிவாரத்தில் இந்த ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பதால் இங்கு வேளாண் தொழில் பெரிய அளவுக்கு நடப்பதில்லை. மாறாக இந்நகரின் வருவாய் சுற்றுலா பயணிகளிடமிருந்துதான் கிடைக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக நிலச்சரிவு மற்றும் நில வெடிப்பு காரணமாக பல சாலைகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் வந்து பார்வையிடவே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆனது.

ஜனவரி 08, 2023 அன்று வந்த அதிகாரிகள் அதனை நிலப் புதைவு என்றும் அப்பகுதியை புதைவு பாதித்த மண்டலமாகவும் அறிவித்தனர். வழக்கம்போல் மோடியும் அடுத்த நாள் உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்தார். மேலும், இது வரையில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவ்விடத்தைவிட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

படிக்க : உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

இந்த சம்பவம் ஏதோ நேற்றோ அல்லது நேற்று முன்தினமோ திடீரென நடந்தது கிடையாது. 1970 ஆம் ஆண்டில் மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின. 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர். 1998 ஆம் ஆண்டு மால்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 255 பேர் உயிரிழந்தனர். 1999 ஆம் ஆண்டு சமோலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு கேதர்நாத் வெள்ளம், நிலச்சரிவுகளில் 5,700 பேர் உயிரிழந்தனர்.

ஜோஷிமத்திலுள்ள பாறைகள் வெறும் மணல் மற்றும் கல் படிவுகளால் ஆனது, அது முக்கிய பாறை அல்ல. இது பழங்கால நிலச்சரிவில் உண்டானவை. அதாவது இது காம்பிரியன் காலத்திற்கு முந்தயவை, இந்த இடம் நில அதிர்வு பகுதி 4-ஐ சேர்ந்தது எனவும் பல்வேறு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

1976 மிஸ்ரா கமிட்டி அறிக்கையின்படி, புதிய கட்டுமானங்கள் மற்றும் 3, 4 மாடிகள் கட்டக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது. குறிப்பாக இந்த பகுதி குறித்து புவியியல் பேராசிரியர் ஒய்.பி.சுந்தரியால் கூறுகையில், “2013 கோதர்நாத் வெள்ளம், 2021 ரிஷி கங்கை திடீர் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து இந்த அரசாங்கம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வெளிப்படையாக தெரிந்துள்ளது” என்கிறார்.

2022 ஆம் ஆண்டில் வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், “ஜோஷிமத் நகரத்தில் இருக்கும் மண் குறைந்த தாங்கும் திறன் கொண்டது. குறிப்பாக அதிகப்படியான கட்டுமானத்திற்குப் பிறகு அதன் உறுதித் தன்மை மிகவும் குறையும்” என்றும் அறிவித்திருந்தது.

இவையெல்லாம் அறிந்தும் கூட ஜோஷிமத் நகரையொட்டி தேசிய அனல் மின் கழகம் (NTPC) அதாவது தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் தனது கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணியின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் பணியும் நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போதுதான் இங்குள்ள வீடுகளில் லேசான விரிசல் விழுந்திருக்கிறது. சுரங்கம் தோண்டுவதற்காக வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த அதிர்வுகள் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து உள்ளூர் மக்கள் இந்த கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எலும்பை உறைய வைக்கும் கடுமையான குளிர் சூழலிலும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் நீர்மின் நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO)-இன் ஹோ ஹரே ஹெலாங் பைபாஸ் சாலை கட்டுமான பணியும் ஆசியாவின் மிக நீளமான ரோப்வேயான ஆலி ரோப்வேயின் இயக்கமும் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிசல் இங்கு மட்டுமில்லாமல் உத்தரகாண்ட்-ல் உள்ள பவுரி, காந்தி நகர், சிங்தார், மனோகர் பாக், சுனில், கர்னபிராயக் பகுதிகளில் இரயில்வே பணியின் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுவாக உலகெங்கிலும் 80%-க்கும் அதிகமான நிலச்சரிவு, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால்தான் ஏற்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான பணியின்போது டிசம்பர் 2009-இல், ஒரு துளை போடும் இயந்திரம் ஏற்படுத்திய பாதிப்பை சரி செய்யும் வரை தினமும் 7 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வெளியேறியது.

மேலும் தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கையின் விளைவான நகரமயமாக்கல் காரணமாக சாலைகள் விரிவுபடுத்துவது, வரம்புக்கு மீறி கட்டிடங்கள் கட்டுவது, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது, கனிம வளங்களை சுரண்டுவது போன்ற நாசகார வேலைகளை தனது கொள்ளை லாபத்திற்காக தெரிந்தே செய்து கொண்டிருந்தது இந்த ஆளும் அரசு.

படிக்க : உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!

மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?

உலகெங்கிலும் முதலாளித்துவம் மறுகாலனியாக்க கொள்கைகள் மூலம் இயற்கையை வரைமுறையின்றி சுரண்டி வருகிறது. இந்த சுரண்டலின் விளைவாக காலநிலை மாற்றம் இன்ற மனிதகுலத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கனமழை, வெப்ப அலை, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி, எரிமலை வெடிப்பு ஆகியவை புதிய இயல்புநிலையாக மாறிவருகிறது. இதன் வெளிப்பாடுதான் பூகோள சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட ஜோஷிமத் இன்று புதையும் நகரம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது.

மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தும் இந்த பாசிஸ்டுகளுக்கு எதிராக நாமும் போராடத் தவறினால் இந்த உலகமே அவர்கள் ஏற்கனவே வெட்டி வைத்துள்ள சவக்குழியில் வீழ்வது நிச்சயம்.

ஆசாத்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க