த்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில் உள்ள மண்டௌரி விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் முதல் உள்ளூர் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உடே தேஷ் கா ஆம் நாக்ரிக் (உடான்-UDAN) திட்டத்தின் கீழ் தற்போது செயல்படாத அசம்கர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தங்களின் நிலம், வீடுகள் பறிபோகும் அபாயம் உள்ளது என கூறி விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் அசம்கர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

000

UDAN என்பது இந்தியாவில் சேவை குறைந்த விமான வழித்தடங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிராந்திய விமான நிலைய மேம்பாட்டுத் திட்டமாகும்.

2022 ஜூலை மாதம், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்திற்குச் சொந்தமான ஐந்து விமான நிலையங்களை 30 ஆண்டுகளுக்கு மேம்படுத்துதல், விரிவாக்கம் மற்றும் மேலாண்மை ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலைய அதிகாரிகள் (AAI) கையெழுத்திட்டனர். அலிகார், அசம்கர், சித்ரகூட், முயர்பூர் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய ஐந்து விமான நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக மாநில அரசு மற்றும் AAI இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

படிக்க : விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

உடான் திட்டத்தின் கீழ் அசம்கர் விமான ஓடுதளத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவுபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் ஹசன்பூர், கதிபூர் ஹரிகேஷ், ஜமுவா ஹரிராம், ஜமுவா ஜோல்ஹா, கடன்பூர் சிந்தன் பட்டி, மாண்டூரி, ஜிகினா கரம்பூர் மற்றும் ஜெஹ்ரா பிப்ரி உள்ளிட்ட ஒன்பது கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ளது. இதனால் மேற்கண்ட கிராமங்களை சார்ந்த சுமார் பத்தாயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தவிருக்கும் நிலங்களில் வளமான விவசாய நிலங்களும் அடக்கும்.

இந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது 36 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இப்போராட்டத்தில் கிராம மக்கள் பெரும்திரளாக பெங்கேற்றுள்ளனர். அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் தலித்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். நிலத்துடன் பிணைக்கப்பட்ட நாங்கள், எங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்று போராடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமுவா ஹரிராம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்காக நிலங்களை அளவிட அரசு அதிகாரிகள் வந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது என்று போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக உருவாக்கப்பட்ட ‘மகன் பச்சாய் கெத் பச்சாவோ சன்யுக்தா மோர்ச்சா’ என்ற அமைப்பின் தலைவர் ராம்நயன் யாதவ் கூறினார்.

விமான ஓடுதளத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை வாபஸ் பெறக் கோரி போராடும் மக்கள் அசம்கர் மாவட்ட நீதிபதி விஷால் பரத்வாஜை சந்தித்ததாக ராம்நயன் தெரிவித்தார். ஆனால், அது பலன் தரவில்லை.

விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. நில அளவை செய்யப்பட்ட பிறகே இந்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எந்தவொரு நிலம் கணக்கெடுப்பையும் நாங்கள் அனுமதிக்காத நிலையில், நிலம் கணக்கெடுப்பு எவ்வாறு நடந்தது என்று போராடும் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

விவசாயத் தலைவர் ராகேஷ் திகாத், சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர், அருந்ததி துரு ஆகியோர் அசம்கர் மாவட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 9 ஆம் தேதி ஜமுவா கிராமத்திற்கு வந்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகாயிட், “விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்க ஒப்புக் கொள்ளாவிட்டால், அதை யாரும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முடியாது” விவசாயிகளை தங்கள் நிலைப்பாட்டில் நிற்குமாறும், நிர்வாகத்திற்கு அடிபணிய வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

வாரணாசி, குஷிநகர், கோரக்பூர், அயோத்தி மற்றும் இப்போது லக்னோவில் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும்போது இந்த விமான நிலையம் தேவையா என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“நாங்கள் போராடுவோம் அல்லது சாவோம், ஆனால் எங்கள் நிலத்தை கையகப்படுத்த விட மாட்டோம்” என்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள புஷ்பா கூறினார்.

சந்துரு
செய்தி ஆதாரம்: நியூஸ்கிளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க