மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள்!

29.01.2023

மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள்
மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023
“ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!”

பத்திரிகை செய்தி

ன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, உழைக்கும் மக்களே!
29.01.2023 ம் தேதி விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 2022 ம் ஆண்டு வேலையறிக்கை பரிசீலனையை மேற்கொண்டு 2023ம் ஆண்டுக்கான வேலைத்திட்டத்தையும் மாநிலப்பொதுக்குழு வகுத்தது. கடந்த ஆண்டு மக்கள் அதிகாரத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைகலையும் அங்கீகரித்ததுடன் புதிய வேலைகளை மேற்கொள்ளவும் வழிகாட்டியது. மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை ஏற்றார். கடந்த ஆண்டில் இறந்த மக்கள் அதிகாரத்தின் இராஜபாளையம் பகுதி செயலாளர் தோழர் சம்மனஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மக்கள் அதிகாரம் பொதுக்குழு 17 தீர்மானங்களை தோழர் அமிர்தா வாசித்து பொதுக்குழு கரவொலி எழுப்பி நிறைவேற்றியது.
உணர்வுப்பூர்வமாகவும், உற்சாகமாகவும், மக்கள் அதிகாரம் கொள்கையை உயர்த்திப்பிடிக்க இப்பொதுக்குழு உறுதி பூண்டது. இறுதியில் கோவை மண்டல செயலாளர் நன்றியுரை தெரிவித்தார்.

தீர்மானங்கள்

 1. 2015-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நமது பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய அமைப்பான மக்கள் அதிகாரம் மூலமாக கட்டமைப்பு நெருக்கடி அரசியலை முன்வைத்தோம். “ஆளத் தகுதியிழந்தது அரசு கட்டமைப்பு, இதோ, ஆள வருகிறது மக்கள் அதிகாரம்” என்ற முழக்கங்களை தொடக்கத்தில் முன்வைத்தாலும், நடைமுறையில் இந்தக் கட்டமைப்பிற்குள்ளே தீர்வுகளை முன்வைத்து செயல்பட்டோம். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நமது அமைப்பு விரிவடைந்திருந்தாலும். முறையான அமைப்பு முறைகளை வகுக்காமலும், கிளைகளைக் கட்டி செயல்படும் கண்ணோட்டம் இல்லாமலும். இயங்கினோம். இதனால், அமைப்பிற்குள் அரசியலற்ற, மக்களிடமிருந்து தனிமைப்பட்ட குட்டி முதலாளியக் கண்ணோட்டம் மேலோங்கியது. அதன் தொடர்ச்சியாக, அமைப்பு விரோத சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராஜு-காளியப்பன் கும்பலை 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமைப்பில் இருந்து வெளியேற்றினோம்.
  இச்சூழலில், அமைப்பின் அரசியல்-அமைப்பில் உள்ள குறைபாடுகள், தவறுகளைத் திருத்திக் கொண்டு செயல்படும் வகையில், அமைப்புக்கான முறையான கொள்கை அறிக்கை – அமைப்பு விதிகளை வகுத்து அமைப்பை முறைப்படுத்த முடிவெடுத்தோம். அதன் பொருட்டு, 2022 – ஜனவரி 28-ஆம் தேதி மக்கள் அதிகாரம் அமைப்பு மாநாட்டில் கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகளை வகுத்து நிறைவேற்றினோம்.நாட்டின் முன்பு, மக்களின் முன்பு இருக்கும் முதன்மையான கடமையான காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதுதான் என்றும், மக்கள் அதிகாரம் கம்யூனிசக் கொள்கையைக் கொண்ட அமைப்பு என்றும் இந்த மாநாடு உற்சாகத்துடன் முழங்கியது.
  நாம் சரியான திசையில் பயணிக்க தொடங்கி விட்டோம் என்ற புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் இந்த பொதுக்குழு விதைத்தது.
 2. பாசிச எதிர்ப்பு என்ற முழக்கத்தை ஃபேஷனாக முழங்கிக் கொண்டு தி.மு.க.விற்கு வாலாகப் போய் சீரழிந்த, புரட்சிகரமான வழியில் மக்களைத் திரட்டுவதில் நம்பிக்கையிழந்த ராஜு -காளியப்பன் கும்பல், நாம் அமைப்பு மாநாடு நடத்தியதைக் கண்டு எரிச்சலடைந்தது. எதையும் சொந்த முயற்சியில் செய்வதற்கு வக்கற்ற இந்த கும்பல், “போலச் செய்தல்” என்ற நோயினால் பீடிக்கப்பட்டு தானும் அமைப்பு மாநாடு நடத்துவதாக ஜம்பமடிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டதானது, நமது முதலாவது அமைப்பு மாநாட்டின் வெற்றிகளில் ஒன்றாகும்.இதுமட்டுமல்ல, நாங்கள் தான் ‘ஒரிஜினல்’ மக்கள் அதிகாரம் என்று ராஜு -காளியப்பன் கும்பல் வெளியிட்ட அறிக்கையில் “நாங்கள் கம்யூனிச அமைப்பு அல்ல” என்று தங்களை தாங்களே அம்பலப்படுத்தி கொண்டதானது, மக்கள் அதிகாரம் அமைப்பில் இருந்து அக்கும்பலை வெளியேற்றிய நிகழ்வு சரியானது என்பதற்கு நிரூபணமாகும். மேலும், அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அமைப்பு முறை, தேர்தல் நடத்துவது – என அனைத்திலும் முறைகேடுகளைச் செய்து, தாங்கள் தான் ‘பெரும்பான்மை’ என்று இக்கும்பல் போங்காட்டம் செய்ததானது கேலிக்கூத்தாகும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு அம்பலப்படுத்துகிறது.
 3. இதேவேளையில், 2022 ஜூன் மாதத்தில், எந்த அமைப்பு முறைக்கும் கட்டுப்படாத, அராஜகத்தையே வாழ்வுரிமையாகக் கொண்ட, அமைப்பு விரோத செயல்களையும் கட்டப் பஞ்சாயத்தையுமே நடைமுறையாகக் கொண்ட, கொள்கை-கோட்பாடுகளைப் பற்றிய வாசனைகூட அறியாத தருமபுரி முத்து-கோபி கும்பல், சதிவேலைகளில் ஈடுபட்டு அமைப்பை விட்டு ஓடிப்போனதைத் தொடர்ந்து அக்கும்பலை வெளியேற்றியதை மக்கள் அதிகாரம் பொதுக்குழு வரவேற்கிறது.காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடித்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைக்கும் நோக்கத்தை மக்கள் அதிகாரத்தின் முதலாவது மாநாட்டில் ஏற்றுக்கொண்ட இந்த கும்பல், ராஜு -காளியப்பன் கும்பல் வழியில், அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அமைப்பு முறை, தேர்தல் என அனைத்திலும் முறைகேடுகளைச் செய்து தாங்கள் தான் ‘பெரும்பான்மை’ என்று போங்காட்டம் செய்தது.
  தருமபுரி முத்து-கோபி கும்பல் ஒருபக்கம், மக்கள் அதிகாரத்தின் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக்கொண்டே, காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான ‘வீச்சான’ இயக்கம் எடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே, அக்கொள்கைகளைக் கைவிட்டு, நமது அமைப்பின் தொடக்க காலத்தில் பின்பற்றப்பட்ட அரசியலற்ற, மக்களிடமிருந்து தனிமைப்பட்ட, குட்டி முதலாளிய, பிரபலம் தேடும் பிரச்சாரத்தை செய்வதன் மூலம் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.இக்கும்பல் தற்போது, மோடி-அமித்ஷா பாசிச கும்பலின் இந்தி மொழித் திணிப்பை வெறும் மொழித்திணிப்பு என்று தமிழினவாத கண்ணோட்டத்தில் சுருக்கி பிரச்சார இயக்கம் எடுத்திருப்பதும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெறும் பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்த்து, இயக்கம் எடுத்ததும் இதற்கு சிறந்த சான்றுகளாகும்; இவை, காவி-கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களின் கொடூரத்தை மறைக்கும் துரோக நடவடிக்கைகளாகும். பல கோஷ்டிகளாகவும் கட்டப் பஞ்சாயத்து வழிமுறைகளையே கொள்கையாகவும் கொண்டுள்ள தருமபுரி முத்து-கோபி கும்பல் ‘அரசியல்’ சக்தி போல வேடமணிந்து திரிவது அதன் இயல்புக்கு மாறானது, அந்த வேடம் விரைவில் கலைவது திண்ணம் என்பதையே மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
 4. மக்கள் அதிகாரத்தின் கொள்கையைக் கைவிட்டு தி.மு.க.விடம் தஞ்சம் புகுந்துள்ள ராஜு –காளியப்பன் கும்பல், மக்கள் அதிகாரம் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 2022 ஜூன் மாதம் நம்முடைய அமைப்பை எந்த கூட்டமைப்புகளிலும் சேர்க்கக்கூடாது என்று பிற அமைப்புகளைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கியது; அது எடுபடாத நிலையில் மூக்குடைபட்டுப் போயுள்ளது. சகோதர அமைப்புகளுடன் இணைந்து செப்டம்பர் 17-இல் நாம் நடத்திய “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” மாநாட்டை சீர்குலைக்கும் விதமாக, சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தது. இதனையும் மீறி நாம் நடத்திய மாநாடு வெற்றியடைந்தது. மக்கள் அதிகாரத்தை சீர்குலைக்கும் இந்த கும்பலின் அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் இக்கும்பல் விரக்தியடைந்து, ஆத்திரத்தில் கையைப் பிசைந்து கொண்டுள்ளது.பிழைப்புவாதமெனினும், அது தற்போது ஏற்றுக்கொண்டுள்ள தி.மு.க. ஆதரவு அரசியல் அடிப்படையில் அரசியல் சக்தியாக செயல்பட்டால் குறைந்தபட்சம் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலிலாவது நீடிக்க முடியும். அதனை விடுத்து, மக்கள் அதிகாரத்தையும் புரட்சிகர அமைப்புகளையும் சீர்குலைக்கும், காட்டிக் கொடுக்கும் வேலைகளைத் தொடர்ந்து இக்கும்பல் செய்துவந்தால், இக்கும்பல் மேலும் நெருக்கடியில் சிக்கி, சிறுத்து, சிதறுண்டு போவதும், இதன் அணிகள் அரசியல் அனாதைகளாக்கப்படுவதும் திண்ணம் என இந்த மக்கள் அதிகாரம் பொதுக்குழு எச்சரிக்கிறது.
 5. டாஸ்மாக் பிரச்சினை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளிலும் இக்கும்பல் ஆளும் திமுக-வின் ஒட்டுவாலாக செயல்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தை சிறுமைப்படுத்தி, அது ஆர்.எஸ்.எஸ்.-ஆல் தூண்டிவிடப்பட்ட கலவரம் என்று கூறி மக்கள் மீதான தி.மு.க. அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்தி, தி.மு.க.வைக் காப்பாற்ற முயன்று தோற்றுப்போனது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட தி.மு.க.விற்கு ஆதரவாகவே செயல்பட்டது. இவ்வாறு அரசியல் ரீதியாக தோல்வியடைந்த ராஜு –காளியப்பன் கும்பலுக்கு “மக்கள் அதிகாரம்” பெயரை பயன்படுத்த எவ்வித உரிமையும் இல்லை என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
 6. காவி-கார்ப்பரேட் பாசிசம் என்பதன் இன்றைய குறிப்பான வடிவம், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசமாகும். இந்தப் பாசிச கும்பல், இந்தியாவில் பாசிசத்தை நிலைநாட்டுவதற்கான இறுதிக் கட்ட வேலையில் இறங்கியுள்ளது. 1947-இல் கொண்டுவரப்பட்ட போலி ஜனநாயக நாடாளுமன்ற அரசமைப்பை முற்றாகத் தூக்கியெறிந்து அதிபர் ஆட்சி முறையை நிலைநாட்டவும், அதன் வழியே இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. இதற்காக, 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது “ஒரு நாடு, ஒரு தேர்தல்” என்ற ‘முடியாட்சி’ முறையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து தயாரிப்புகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.தீர்க்கமுடியாத, மீளமுடியாத நெருக்கடியில் சிக்கியுள்ள ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்காகவும், இலாப வெறியுடன் நிதிமூலதன ஆதிக்கத்திற்காக அலைந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிற்காகவும், மக்களை ஒட்டச் சுரண்டும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்த இந்த கும்பல், தீராத கார்ப்பரேட் வெறியுடன் செயல்படுகிறது. அவை, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மிகப்பெரும் அளவில் பறித்துவிட்டது. நாளும் அதிகரித்து வரும் விலையேற்றம், வேலையின்மை, தீராத வறுமை – இதனை நமக்கு பொட்டில் அறைந்தார்ப் போல உணர்த்துகின்றன. அண்மையில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் (oxfam International) அறிக்கையானது, இந்தியாவில் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் 40.5 சதவிகிதம் குவிந்திருப்பதாக கூறுகிறது. உலகின் இரண்டாவது பணக்காரராக அதானி உயர்ந்ததற்குக் காரணம், கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 46 சதவிகிதம் உயர்ந்ததுதான். நாட்டின் 50 சதவிகித மக்களிடம் 64 சதவிகித வரி விதிக்கப்படுவதும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை, மானியங்கள், தொழில் கடன் மற்றும் கடன் தள்ளுபடி – என மக்கள் வரிப் பணத்தை வாரிக் கொடுப்பதும்தான் இதற்கு அடிப்படையாகும்.உலகம் முழுவதும் உற்பத்தித் தேக்கமும் பணவீக்கமும் இணைந்த தேக்க-வீக்கநிலை (Stag-flation) தாக்கிவருவதாக ஏகாதிபத்தியவாதிகள் அலறுகின்றனர். ஆனால், நமது நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மறைத்து, நாடு முன்னேறி வருவதாக வெற்றுச் சவடால் அடித்து வந்த மோடி-நிர்மலா கும்பலே, தற்போது நமது நாட்டிலும் அத்தகைய சரிவுநிலை வரப் போகிறது என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. இது, இக்கும்பல் நாட்டு மக்கள் மீது மேலும் கடுமையான தாக்குதலை தொடுப்பதற்கும், பாசிசத்தை அறிவிப்பதற்குமான அபாயகரமான சூழல் நெருங்கிவிட்டதை உணர்த்துகிறது. இதனை உணர்ந்து புரட்சிகர, ஜனநாயக, பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைவரும் இக்கும்பலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது, காலத்தின் கட்டாயமாகும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு முடிவு செய்கிறது.
 7. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலின் இந்த பாசிசப் போக்கைப் புரிந்து கொள்ளாமலும், புரிந்தாலும் தங்களது சந்தர்ப்பவாதக் கொள்கைகள் காரணமாக மறைத்துக் கொண்டும், எதிர்க்கட்சிகள் தேர்தல் கூட்டணிகளை அமைத்து 2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. மற்றொருபுறம், தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை மோடி-அமித்ஷா கும்பல் பாணியிலேயே நடைமுறைப்படுத்தவும் செய்கின்றன; பாசிசம் அரங்கேறுவதற்கான ஊற்றுமூலமாகவும், முக்கிய காரணமாகவும் உள்ள இன்றைய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையைக் கட்டிக்காத்து, அதனை பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப் போவதாகவும் கூறுகின்றன.போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் வழியாகவும் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாகவும்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் வளர்ந்து, இன்று அரியணை ஏறும் நிலையை அடைந்துள்ளது. இச்சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்தை எதிர்க்கும் கட்சிகள், அமைப்புகள் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவும், கார்ப்பரேட் ஆதிக்கத்தை முறியடிக்கவும், உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை” அமைக்கும் நோக்கத்தில் தற்போதே ஒன்றிணைந்து போராடுவது மிக அவசியமாகும். உழைக்கும் மக்களின் பாசிச எதிர்ப்பு எழுச்சியில் உருவாகும் புதியதொரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசானது, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி, அதனைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மக்களுக்கே அளிப்பதன் மூலமாகத்தான் தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிக்கவும் பாசிச கும்பல்கள் வேறு வடிவங்களில் மீண்டும் தலைதூக்காமல் தடுக்கவும் முடியும் என்பதை மக்கள் அதிகாரத்தின் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.
 8. இந்த தெளிவான அரசியல் கண்ணோட்டத்தில், பாசிசம் அரங்கேறும் இச்சூழலில், பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில், நமது அமைப்பில் தலைவிரித்தாடிய பிரபலம் தேடும் பிரச்சார முறையில் இருந்து விடுபட்டு, அரசியல் திசைவழியில் ஊன்றி நின்று உழைக்கும் மக்களிடம் ஐக்கியப்படும் வகையில், இந்த ஓராண்டில் மக்கள் அதிகாரம் செயல்பட்டு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வளரத் தொடங்கியுள்ளது. மக்கள் தலைவர்களை உருவாக்கும் திசையில் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மக்கள் அதிகாரம் முன்வைத்த அரசியல் நிலைப்பாடுகளின் தனித்துவம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாகவும், அதன் புதிய அமைப்பு நடைமுறைகளாலும் இந்த முன்னேற்றத்தை சாதிக்க முடிந்துள்ளது.
 9. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்திற்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் மீதான பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஓராண்டில் மக்கள் அதிகாரம் தனது அமைப்பு பலத்திற்கேற்ப போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், இயக்கங்கள், கண்டன அறிக்கைகள், உரைகள் என பல்வேறு வகைகளில் ஊக்கமாக செயல்பட்டு வந்துள்ளது.முசுலீம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை, தில்லையில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை – ஆகியவற்றை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டம், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியுடன் இணைந்து நடத்திய போராட்டம், ஆ.ராசாவுக்கு எதிராக சங்கிகளின் அவதூறுகளுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம், இந்தி மொழித்திணிப்புக்கு எதிராக ஜனவரி 25 நடத்திவரும் இயக்கம் – போன்றவற்றை இந்த பொதுக்குழு முன்னுதாரணமிக்க இயக்கங்களாக வரவேற்கிறது.கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் எடுத்த நிலைப்பாடும் அதற்காக தொடர்ந்து மேற்கொண்ட போராட்டங்களும் மிகச் சரியானதாகவும் மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரத்தின் மதிப்பு உயர்வதற்கு காரணமாகவும் அமைந்தது.மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) உள்ளிட்ட சகோதர அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட “அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்! இந்தியாவில் தீவிரமாகி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட மே தின ஆர்ப்பாட்டங்கள், “ஆர்.எஸ்.எஸ்.-பாஜக; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் சகோதர அமைப்புகளுடன் இணைந்து நடத்திய செப்டம்பர் மாநாடு, “நவம்பர் 7- ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! டிசம்பர் 21 ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! சிறுதொழில்கள் நசிவு – வேலையின்மை விலையேற்றம் – பாசிச அடக்குமுறைகள்; ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க: அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இயக்கம் போன்றவற்றில் மக்கள் அதிகாரம் ஊக்கமாக செயல்பட்டுள்ளதை இந்த பொதுக்குழு வரவேற்கிறது.கார்ப்பரேட் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை மக்கள் மீது திணிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக இனம், மொழி, மதம் கடந்து உருவான இலங்கை மக்கள் எழுச்சியை வரவேற்று, மக்கள் அதிகாரம் அமைப்பானது பிரச்சார வெளியீடு கொண்டுவந்து ஆதரவு தெரிவித்துள்ளது.சாத்தியமான இடங்களில் பாசிசத்தை எதிர்க்கும் அமைப்புகளை இணைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளதையும் இந்த பொதுக்குழு பெருமையுடன் அங்கீகரிக்கிறது.

  கடந்த ஓராண்டில் மக்கள் அதிகாரத்தின் அரசியல் ரீதியிலான செயல்பாடுகள் காரணமாக, ஜனநாயக சக்திகள் நம்மிடம் ஐக்கியப்பட்டுள்ளனர். குறிப்பாக, எஸ்.கே.எம். போன்ற கூட்டமைப்பில் உள்ள அமைப்புகளுடன் தொடர்ந்து பயணித்துள்ளோம். தமிழ் தேச மக்கள் முன்னணி, தமிழ் புலிகள் கட்சி போன்ற அமைப்புகளுடன் தொடர்ந்து அரசியல் ரீதியில் விவாதித்துள்ளோம்; சில பிரச்சினைகளில் இணைந்து செயல்பட்டுள்ளோம். மக்கள் அதிகாரத்தின் சரியான அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக, இவ்வமைப்புகள் மத்தியில் மரியாதையும், நெருக்கமும் உருவாகியுள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக, நம்முடைய அரசியல் நிலைப்பாடுகளுடன் ஓரளவிற்கு ஒத்த நிலைப்பாடுகளைக் கொண்ட பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைந்து கொள்ளுமாறு அக்கூட்டமைப்பில் இருக்கும் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மக்கள் அதிகாரம் அதில் நிபந்தனைக்குட்பட்டு இணைவதை இந்த பொதுக்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறது.

 10. இவையன்றி, இந்த ஓராண்டில் சர்வதேசிய, தேசிய முக்கியமான நிகழ்வுகளை ஒட்டியும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஒட்டியும் உடனுக்குடன் மாநில தலைமைக் குழு சார்பாக வெளியிடப்பட்ட அனைத்து பத்திரிக்கை செய்திகளையும் இந்த பொதுக்குழு வரவேற்று ஏற்றுக் கொள்கிறது. புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சினையில் உடனடியாக பத்திரிக்கை செய்தி வெளியிடாதது தவறு என்ற மாநில தலைமைக் குழுவின் சுயவிமர்சனத்தை இந்த பொதுக்குழுவும் சுயவிமர்சனமாக உணர்ந்து ஏற்றுக்கொள்கிறது.
 11. தமிழ்நாட்டில் மக்கள் அதிகாரம் செயல்படும் பகுதிகளில் சாத்தியமான மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு முன்முயற்சியுடன் செயல்பட்ட மக்கள் அதிகாரம் கிளைத் தோழர்களுக்கு இந்த பொதுக்குழு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மதுரை கப்பலூர் டோல்கேட் போராட்டம், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்காக தனியாகவும் கூட்டமைப்புகளுடனும் நடத்தப்பட்ட போராட்டங்கள், பகுதி மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகள், கோரிக்கைகளுக்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் நடத்திய போராட்டங்களால் மக்கள் அதிகாரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் ஐக்கியமும் அதிகரித்துள்ளது; மக்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கையடைந்து, மக்கள் அதிகாரத்தின் கொள்கையையும் செயல்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு உழைக்கும் மக்கள் இணைந்து செயல்பட முன்வருகின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த பொதுக்குழு தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.அதேவேளையில், இன்னும் பல மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு, மக்களுக்கு வழிகாட்டவும் முன்னணியாகவும் செயல்படும் வகையில் விரைவில் மக்கள் அதிகாரம் அமைப்பை மாற்று அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்க இந்த பொதுக்குழு உறுதியேற்கிறது.
 12. தனியார்மயம், தாராளமயம்-உலகமயக் கொள்கைகளை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் மோடி-அமித்ஷா பாசிசக் கும்பல் அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் அம்பானி-அதானி கார்ப்பரேட்களுக்கு தாரைவார்ப்பதை மக்கள் அதிகாரம் பொதுக்குழு வன்மையாக எதிர்க்கிறது.நாட்டை மீண்டும் காலனியாக்கும் வகையில், ஏகாதிபத்திய நாடுகளின் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் இயங்குவதற்குத் தாராள அனுமதி அளித்துள்ளதையும், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா கட்டியுள்ள புதிய “குவாட்” இராணுவக் கூட்டணியையும் மக்கள் அதிகாரம் கடுமையாக எதிர்க்கிறது.நமது நாட்டின் சிறு தொழில்களை நாசமாக்கி, தடையற்ற அந்நிய இறக்குமதிக்கு தாராள அனுமதியளிக்கும் வகையில், ஜெர்மனி, பிரிட்டன், இஸ்ரேல், கனடா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளுடன் இந்தியா போட்டுக் கொண்டுள்ள இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) மற்றும் தடையற்ற அந்நிய முதலீடுகளையும் மக்கள் அதிகாரம் கடுமையாக எதிர்ப்பதுடன், இத்தகைய மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டிப் போராடவும் உறுதியேற்கிறது.ஆர்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி – அதானி கார்ப்பரேட் பாசிசக் கும்பலே நாட்டின் முதன்மையான எதிரி என்றும், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களும் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டுமென்றால், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுக்க வேண்டும் என்றும், அதற்கு மக்கள் தங்களை பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 13. பீமாகோரேகான் வழக்கில் பொய்யாக கைது செய்யப்பட்ட போராளிகளின் கணினி, செல்போன் ஆகியவற்றில் திட்டமிட்டு வெளியே இருந்து பொய்த்தகவல்கள் புகுத்தப்பட்டது என்பது ஆய்வில் வெளியாகி உள்ளது. பாசிச மோடி – அமித்ஷா கும்பலுக்கு எதிராகச் செயல்படும், பேசிவரும் அறிவுத்துறையினரை ஒழித்துக்கட்டுவதற்காகவே இந்த பீமாகோரேகான் வழக்கு புனையப்பட்டது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் செயல்பாட்டை மக்கள் அதிகாரம் பொதுக்குழு எதிர்ப்பதுடன், கைது செய்யப்பட்ட அறிவுத்துறையினர் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கோருகிறது.
 14. தமிழ்நாடு அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பற்கான பணியை உடனே நிறுத்த வேண்டும், சுற்றுச்சூழலுக்கும் மீனவர்களுக்கும் எதிரான காட்டுப்பள்ளி துறைமுகப் பணிகளை நிறுத்த வேண்டும், அரசுத்துறைகளையும் சமூக நீதி என்ற பெயரில் கல்வித் துறைகளையும் கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றும், அதானியின் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டத்தை கேரள மாநில அரசு நிறுத்த வேண்டும் என்றும் இத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு மக்கள் அதிகாரம் துணை நிற்கும் என்றும் இப்பொதுக்குழு பிரகடனப்படுத்துகிறது.
 15. தமிழ்நாட்டு அரசு, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும், வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப்போராடி போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட தூத்துக்குடி தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய குற்றவாளிகளான போலீசு உயரதிகாரிகள், போலீசுக்காரர்கள், அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் வேதாந்த அதிகாரிகள் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பொதுக்குழு அறிவிக்கிறது.
 16. நாகலாந்து மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ஆர்.என் ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக்கப்பட்டிருப்பதே தமிழ்நாட்டை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள் கைப்பற்றுவதற்காகத்தான். பாசிச உளவு வேலைக்கு அமர்த்தப்பட்ட ரவி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு, ஆறு தமிழர் விடுதலை உள்ளிட்ட 22 மசோதாக்களுக்கு பதிலேதும் தெரிவிக்காமல் இருக்கிறார்; ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு பதிலேதும் அளிக்காமல், ஆன் லைன் ரம்மி முதலாளிகளைச் சந்தித்தும் இருக்கிறார். இந்தச் சங்கி ஆளுநரான ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மிரட்டியும் துணைவேந்தர்களை மிரட்டியும் வருகிறார். சனாதனம் தமிழ்நாட்டில்தான் உருவாகியது என்பது போன்ற பொய்கருத்துகளை பரப்பியும் வருகிறார்.நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் பொருத்தமல்ல என்றும் பொங்கல் விழாவில் தமிழ்நாடு அரசின் இலட்சிணையையும் (emblem) தமிழ்நாடு என்ற பெயரையும் நீக்கினார்; சட்ட மன்றத்தில் தமிழ்நாட்டு அமைச்சரவை எழுதிக்கொடுத்த அறிக்கையைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப திருத்தியும், தமிழ்நாடு, பெண்ணுரிமை உள்ளிட்ட ஜனநாயகக் கூறுகளைப் படிக்காமலும் அவமானப்படுத்தினார். இந்த விசயத்தில், தி.மு.க. அரசு உடனுக்குடன் ஆளுநரின் உரையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்ததானது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.தற்போது ஆர்.என்.ரவி தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கி இருந்தாலும், மீண்டும் தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பார். தமிழ்ப் பண்பாட்டின் உயிர் நாடியான ஆரிய–பார்ப்பன–வேத எதிர்ப்பை திரிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் எதிரி. இந்த ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்க வேண்டும். ஆளுநர் பதவி போன்ற மக்கள் விரோத அமைப்புகள் இல்லாத பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசமைப்புதான் தீர்வு என்பதை உணரவேண்டிய தருணமிது என மக்கள் அதிகாரம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 17. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கு தமிழ்நாடு தொடர்ந்து ஒரு எதிர்ப்புக் களமாக அமைந்துள்ளது. இந்த ஓராண்டில் மட்டும், ஆ.ராசாவிற்கு எதிரான சங்கிகளின் போராட்டத்திற்கு பதிலடி கொடுத்தது; 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தி கலவரங்களைத் தூண்டுவதற்கான முயற்சிகளைத் தடுத்தது; ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பெயர் தொடர்பான விசயத்தில் பின்வாங்கவைத்தது; அற்ப விசயங்களுக்கெல்லாம் மதச் சாயங்களைப் பூசி மதவெறியூட்டி வந்த பா.ஜ.க.வையும் அண்ணாமலையையும் பின்வாங்க வைத்தது; கோவை கார் சிலிண்டர் வெடிப்பைப் பயன்படுத்தி பா.ஜ.க.வின் முசுலீம் தீவிரவாத பீதியூட்ட நினைத்ததை முறியடித்தது; அம்பேத்கருக்கு காவி துண்டு அணிவித்தது மட்டுமின்றி, அவருக்கு மாலை அணிவிக்க அர்ஜுன் சம்பத்துக்குக் காட்டப்பட்ட எதிர்ப்பு – என பல அரசியல் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலைத் தமிழ்நாடு பின்வாங்க வைத்துள்ளது.ஆரிய-பார்ப்பன-வேத எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழகம் தலைநிமிர்ந்து நின்றாலும், ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி வருகிறது. தமிழ்நாட்டை ‘விழுங்க’ வேண்டும் என அனைத்து சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், பாசித்தை எதிர்க்கும் மக்கள் சக்திளான விவசாயிகள்,தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள், பெண்கள் ஆகிய உழைக்கும் மக்களின் அடித்தளத்தில் ஊன்றி நின்று காவி- கார்ப்பரேட் பாசிஸ்டுகளை களத்தில் முறியடிக்கும் வகையிலான பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியில் இணைந்து போராட முன்வருமாறு மக்கள் அதிகாரம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

தோழமையுடன்
மாநில பொதுக்குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க