மோடி அரசுக்கு எதிராக மகாராஷ்டிர விவசாயிகள் மாபெரும் போராட்டம்!

வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், பச்சைப் பயிறு முதலான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கூட கிடைக்காமல் கடன்பட்டு வருகிறார்கள் விவசாயிகள்.

கில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுதிரண்டு தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரிலிருந்து மும்பை நோக்கி தங்களுடைய பேரணியை தொடங்கினர்.

வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், பச்சைப் பயிறு முதலான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கூட கிடைக்காமல் கடன்பட்டு வருகிறார்கள் விவசாயிகள். தற்போதைய சூழ்நிலையில் வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது பாடுபட்டு விளைவித்த விவசாயிகளின் கண்களில் கண்ணீரை வர வழைத்துள்ளது.

விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட வெங்காய விவசாயிகளும் திரளாகக் கலந்துகொண்டு தங்களுடைய விளைப்பொருட்களுக்கு சரியான விலை வேண்டும் என்று ஒன்றிய – மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டே நடைபயணத்தை மேற்கொண்டனர்.

படிக்க : மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தும் சதி எனக்கூறி எம்.எஸ்.பி(MSP) குழுவை நிராகரித்த எஸ்.கே.எம்!

வெங்காயம் உட்பட அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சார கட்டண நிலுவைத்தொகையை தள்ளுபடி செய்யவதோடு நாள்தோறும் 12 மணி நேரம் தொடர் மின்சார விநியோகம் செய்ய வேண்டும். மழை, புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களினால் சேதமடைந்த விவசாயப் பொருட்களுக்கு உரிய இழப்பீட்டு –காப்பீட்டு- (இன்சூரன்ஸ்) நிறுவனங்களால் உடனே வழங்கப்பட வேண்டும். பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், வழங்கப்படும் மானியத் தொகையை ரூ.1.40 இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவை முதலான 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வீரச்செறிந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் விவசாயிகள்.

இந்தப் பேரணிக்காக கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று நாசிக் நகரத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் திரண்டு மார்ச் 13-அன்று திண்டோரி சவுக் என்ற இடத்தின் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் போன்றவற்றை கடும்வேதனையுடன் சாலையில் கொட்டி தங்களின் அவலநிலையை பதிவுசெய்துள்ளனர்.

பேரணியின் நிறைவில், மகாராஷ்டிர விவசாயிகள் சிவசேனா-பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். மார்ச் 18 அன்று பேரணி-போராட்டத்தின் வீரியம் காரணமாக விவசாயிகளின் 17 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

படிக்க : பட்ஜெட் 2022 : வேளாண் துறைக்கான நிதியை குறைத்த மோடி அரசு !

2020-2021-ல் நடைபெற்ற டெல்லி விவசாயிகள் போராட்டமானது ஒன்றிய மோடி அரசை மூன்று வேளாண்சட்டங்களை அமல்படுத்தாமல் தற்காலிகமாக பின்வாங்க வைத்தது. அப்போது, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் இயற்றுவதாக மோடி அரசு உறுதியளித்ததன் காரணமாக விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்றுவரை குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய எந்த முயற்சியும் எடுக்காத ஒன்றிய மோடி அரசு கொல்லைப்புறமாக மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த முனைந்துவருகிறது.

இது மகாராஷ்டிர விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய விவசாய வர்க்கத்தின் பிரச்சினை. எனவே, போராடிவரும் மகாராஷ்டிர விவசாயிகளுடன் நாட்டின் அனைத்து விவசாயிகளும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க