டந்த பிப்-1 அன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நாட்டிற்கான 2022-23 பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. அதில் நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் வேளாண் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டை விடமும் குறைவான நிதியை ஒதுக்கி விவசாயிகளை வஞ்சித்துள்ளது மோடி அரசு.
மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள், அதற்கெதிரான பதினாறு மாதங்கள் கடும் குளிரிலும் வெயிலிலும் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம், அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அரசு கூறியது போன்றவை எதுவுமே 2021-22-ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் 2022-23-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து எந்த குறிப்புகளும் இல்லை.
படிக்க :
வேளாண் சட்டங்கள் வாபஸ் : மோடியை பணியவைத்த விவசாயிகள் போராட்டம்!
அம்பலமாகும் அடிமை அதிமுகவின் வேளாண்துறை ஊழல் முறைகேடுகள் !!
பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக் கொல்லிகள் தெளித்தல் மற்றும் உரம் தெளித்தல் ஆகியவற்றுக்கு ட்ரோன்களின் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும் என்று நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்பட்டது. பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும், உரிமை மற்றும் புவியியல் தரவுகள் அடங்கிய வரைபடங்கள் (cadastral maps) மற்றும் தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்குத் தேவையான பிற தகவல்களை வழங்குவதற்கு ஒரே மாதிரியான தேசிய அளவிலான கொள்கை எதுவும் அரசிடம் இல்லை. ஒரு மாநிலத்தில் எட்டு மாவட்டங்களின் நில உரிமை மற்றும் புவியியல் தரவுகள் அடங்கிய வரைபடங்களை (cadastral maps) ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அதனிடம் ரூ.50 லட்சம் தொகையை கேட்கிறது அரசு.
2022-23-ம் ஆண்டில் உணவு மானியத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2,86,219 கோடியில் இருந்து 2,06,480 கோடியாக குறைந்துள்ளது. இது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் தொடர வாய்ப்பில்லை என்பதையே இது காட்டுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு 2021-22 பட்ஜெட் மதிப்பீட்டில் 0.60 சதவீதத்திலிருந்து 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் 0.54% ஆகக் குறைந்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.1,53,558 கோடி. ஆனால் அதற்கு மாறாக அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.1,35,944 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டமான MGNREGA (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் 2005) மீதான செலவு ரூ.73,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருத்தப்பட்ட மதிப்பீடு நடப்பு ஆண்டில் ரூ.98,000 கோடி ஆகும்.
2019-20-ம் ஆண்டின் கோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட, நடப்பு ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் வேலைக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது என்பதை ஆதாரங்களுடன் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
உரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.1,49,663.28 கோடியிலிருந்து ரூ.1,09242.23 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பாசிச மோடி அரசின் 2022-23 பட்ஜெட், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித் துறைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தபோவதில்லை என்பதே உண்மை.
வினவு செய்திப் பிரிவு
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க