மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

ந்த நாட்டுக்கு மலையக தமிழ் மக்கள் கொண்டுவரப்பட்டு இருநூறு வருடங்கள் ஆகின்ற நிலையில் மலையக மக்களின் தேசிய இன உரிமைகளை மறுக்கும் விதமாக அவர்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என்று அழைப்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

யாழ் நண்பர்கள் அமைப்பு இந்திய தூதரகத்துடன் இணைந்து மலையக தேசிய இனத்தை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என்று குறிப்பிட்டிருப்பது ஒரு வரலாற்றுத் மோசடியாகும். இந்திய மேலாதிக்கத்தின் விஸ்தரிப்பிற்காக யாழ் நண்பர்கள் அமைப்பு மலையக தேசிய இனத்தை கொச்சைப்படுத்தி அவர்களின் தேசிய இன அடையாளத்தை மறுத்துச் சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியதாகும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, மலையக மக்கள் 1823 ம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலகட்டங்களில் தென் இந்தியாவிலிருந்து கொலனித்துவ கூலி அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இருநூறு ஆண்டுகள் இவ்வருடத்துடன் நிறைவடைகிறது. தொழிற்சங்கங்கள், முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி சக்திகள், புத்திஜீவிகள் எனப் பலரும் மலையக மக்களின் தீர்க்கப்படாமல் இன்றும் தொடரும் பிரச்சனைகள் பற்றி குரல் கொடுத்து வருகிறார்கள். மலையக மக்களின் தனித்துவத்தை வலியுறுத்தி வருகிறார்கள், இச்சூழலில் இலங்கை வாழ் இந்திய தமிழர் என அடையாளப்படுத்துவது பல்வேறு உள்நோக்கங்களை கொண்டதாகும்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தை நெடுங்காலமாக முன்னெடுத்துவருகிறது. மலையக மக்களை நான்கு தேசிய இனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும் படி அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. 1990கள் தொடக்கம் இந்தக் கோரிக்கைக்காகப் போராடும் நாம் நல்லாட்சி என சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் கட்சி சமர்பித்த யாப்பு சீர்த்திருத்தத்திற்கான முன்மொழிவுகளிலும் இவ்விடயத்தை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியிருந்தோம்.

குடியுரிமை மறுக்கப்பட்டு, காணி, வீடு, கல்விபுலம் உட்பட ஏனைய சிவில் சமூகங்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட தேசிய இனமான மலையக மக்களை இப்போது இந்திய வம்சாவளி தமிழர் என்று விழிப்பது கண்டனத்துக்குரியது.

யாழ் முற்போக்கு அமைப்புகளும், பொதுமக்களும் மலையக மக்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த புதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும். மலையக மக்கள் மீது அக்கறையுள்ள அனைவரும் இதற்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதோடு அனைவரும் இலங்கை மக்களாகிய மலையக தேசிய இனத்தின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

மத்திய குழு சார்பாக,
சி.கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க