உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை

20 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக அடைந்து காட்டிய சரித்திர வெற்றியின் கொண்டாட்ட தினம் அது.

தெரிந்தோ தெரியாமலோ
சுரண்டப்பட்டு கொண்டிருக்கும்
தொழிலாளியின் வியர்வை
காய மற்றொரு நாள்
விடுமுறை!

புலனத்தில்
ஒரு ஸ்டேட்டஸ்
தெரிந்தவர்களுக்கு
ஒரு வாழ்த்து
அவ்வளவுதானா
இத்தினத்தின் வீரியம்?

பிறகு,
சிந்திக் காய்ந்த
குருதியையும்
தியாகம் செய்யப்பட்ட
உயிர்களையும்
நினைவுக் கூர்வது
எப்போது?

முட்டி முளைக்கும்
விதை முதல்
எட்டி உதைக்கும்
குழந்தை வரை
இங்கு அனைத்து உயிரும்
தன் தேவைகளை
போராடிதான்
பூர்த்தி செய்கிறது.

அப்படி நடந்த
பல போராட்டங்களின்
ஒரு அடையாளமே
இந்த மே தினம்.

குறைந்தபட்ச கூலிக்கு
உலகெங்கும் அடிமைகளாய்
மாற்றப்பட்ட தொழிலாளர்கள்
சிலிர்த்தெழுந்ததின்
நினைவு தினம் அது.

20 மணி நேர
வேலை நேரத்தை
8 மணி நேரமாக
அடைந்து காட்டிய
சரித்திர வெற்றியின்
கொண்டாட்ட தினம் அது.

தொழிலாளர் வர்க்கத்திற்கான
ஆர்ப்பாட்ட நாளாய்
பாரிஸ் மாநாடு
அள்ளித்தந்த தினம் அது.
ஆம், இது நமக்கான நாள்!

இருந்த வேலை வாய்ப்புகளை
பிடுங்கிக் கொண்டு
கிடைக்கும் வேலைக்கெல்லாம்
நம்மை துரத்தியடிக்கும்
முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்!

தொழில்நுட்ப சுரண்டளுக்கான
எச்சரிக்கை நாள்!
முதலாளித்துவத்திற்கு எதிராய்
தொழிலாளர்கள் சங்கேந்தி
கிளம்ப வேண்டிய
புரட்சி நாள்!

– துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க