இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) முதலாவது மாநாட்டின் 53-வது ஆண்டு நிறைவு!

53 ஆண்டுகளில் நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி அழிந்துவிட்டன. ஆனால் நக்சல்பாரி இயக்கம் இன்னும் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
முதலாவது மாநாட்டின் 53-வது ஆண்டு நிறைவு!

எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் முறியடித்து
போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்ட உறுதியேற்போம்!

1970-ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் கொல்கத்தா – கார்டன் ரீச் பகுதியின் ரயில்வே காலனியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)–யின் முதலாவது மாநாடு நடத்தப்பட்டது. இன்றுடன் மாநாடு நடந்து 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யின் முதலாவது மாநாடு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாடும் ஆகும்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஏழாவது மாநாடு, மார்க்சிஸ்ட் (CPM) கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர் நக்சல்பாரி எழுச்சி மார்க்சிஸ்ட் கட்சியின் நவீன திரிபுவாதத்தை திரைகிழித்ததை தொடர்ந்து உண்மையான புரட்சிகர கட்சியாக உருவாகிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னுடைய முதலாவது மாநாட்டை நடத்தியது. அந்த அடிப்படையில் கம்யூனிச இயக்க வரலாற்றில், அது வரலாற்று சிறப்புமிக்க மாநாடு ஆகும்.

அந்த மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து 52 கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருந்த நிலையில், போலீசு அடக்குமுறை காரணமாக 35 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 21 தோழர்களை கொண்ட கட்சியின் மத்தியக் கமிட்டி அமைக்கப்பட்டது. மத்தியக் கமிட்டியில் இருந்து ஒன்பது தோழர்களைக் கொண்ட அரசியல் தலைமைக் குழு அமைக்க முடிவாகியது.

இந்த மாநாட்டில் தான் தோழர் சாரூ மசும்தார் பொதுச் செயலராக தெரிவு செய்யப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த தோழர் அப்பு, மத்தியக் கமிட்டி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.


படிக்க: நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !


1967 நக்சல்பாரி எழுச்சிக்குப் பின், இந்திய அரசானது நக்சல்பாரி இயக்கத் தலைவர்களை குறிவைத்து வேட்டையாடியது. நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டு அனைவரும் போலீசாரால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்; சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சூழலில் தான் முதலாவது மாநாடும் நடந்தது. மாநாட்டிற்குப் பின் அரசின் மிருகத்தனமான அடக்குமுறையால் கட்சி நசுக்கப்பட்டது.

கட்சி நசுக்கப்பட்டாலும் அதன் அரசியலும் சித்தாந்தமும் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. கிராமப்புறங்களில் நிலப்பிரபுகளுக்கு எதிரான விவசாயிகளின் ஆயுதந்தாங்கிய போராட்டங்களும் தொழிற்சாலைகளில் நக்சல்பாரி தொழிற்சங்கங்களின் “கெரோ” போராட்டங்களும் நாடெங்கும் பரவின. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கி சென்றனர்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விரைவில் இடது சந்தர்ப்பவாத பாதையில் சறுக்கி விழுந்தது. பெரும் இழப்புகளை சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பல குழுக்களாக பிளவுபட்டது.

53 ஆண்டுகளில் நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி அழிந்துவிட்டன. ஆனால் நக்சல்பாரி இயக்கம் இன்னும் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நக்சல்பாரிகளுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்துமதவெறி பாசிஸ்டுகளான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், நக்சல்பாரிகளை ஈவிரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்களாக அறிவித்துள்ளது. நக்சல்பாரி என்ற சொல் நாளேடுகளில், தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் அன்றாடம் அடிபடுகிறது.


படிக்க: இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !


இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்றுவதை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது பாசிசக் கும்பல். அதற்காக நிலவுகின்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிந்து பாசிச ஆட்சியை நிறுவ பாசிசக் கும்பல் முயலவில்லை. மாறாக, போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை ஒத்திசைவாக்கல் மூலம் தன்னுடைய இந்துராஷ்டிர ஆட்சிக்கான அரசுக் கட்டமைப்பாக மாற்றிக்கொண்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

நாடாளுமன்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மூலமே, பாசிசக் கும்பலை வீழ்த்திவிட முடியும் என ஓட்டுக் கட்சிகளும், பல அமைப்புகளும் இயக்கங்களும் கூறி வருகின்றன. அதை நோக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், நாடாளுமன்ற போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்புக்கு வெளியே மக்கள் அணிதிரள்வதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கம்தான் உள்ளது. மேலும், இந்துமதவெறி பாசிஸ்டுகளை முறியடிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையும், பாசிஸ்டுகளின் சித்தாந்த எதிரிகளான நக்சல்பாரி வாரிசுகளிடமே உள்ளது.

இன்று, நக்சல்பாரி இயக்கங்களில் வலது, இடது சந்தர்ப்பவாதம், வலது சந்தர்ப்பவாத – நவீன அராஜகவாதம் போன்ற பல வண்ணத் திரிபுவாத போக்குகள் நிலவுகின்றன. பல வண்ணத் திரிபுவாதங்களையும் எதிர்த்து விடாப்பிடியான சித்தாந்தப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதன் மூலமே நாடு முழுவதும் உள்ள மா-லெ குழுக்களை ஒன்றிணைத்து, ஒன்றுபட்ட புரட்சிகர மா-லெ கட்சியாக வளர்த்தெடுக்க முடியும். இதுவே நக்சல்பாரி புரட்சியாளர்களின் அவசர, அவசியமான கடமையாக உள்ளது.

இம்மகத்தான கடமையை நிறைவேற்ற, எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல உறுதியேற்போம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க