ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

மாநாட்டிற்கான தீர்மானங்கள்

2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற, “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற மாநாட்டின் தீர்மானங்களை இந்த மாநாடு வழிமொழிகிறது.

தீர்மானம் 01:

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசக் கும்பலை தேர்தல் அரசியலால் மட்டுமே வீழ்த்திவிட முடியாது; மொத்த அரசுக் கட்டமைப்பையும் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிற இப்பாசிசக் கும்பலை அனைத்து அரங்குகளிலும் முறியடிக்க வேண்டுமானால், தேர்தல் அரசியலுக்கு வெளியே பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியை உருவாக்குவதே ஒரே வழி என்று செப்டம்பர் 2022 சென்னை மாநாட்டில் முழங்கினோம்.

அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு – என அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி நாட்டையே சுற்றிவளைத்துவரும் இந்துராஷ்டிரப் படையை வீழ்த்துவதற்காக, தமிழ்நாட்டில் முன்னுதாரணமானதொரு மக்கள் எழுச்சியை உருவாக்கும் நோக்கத்தில், வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்று வைக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டு முழக்கம் சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மாநாடு உற்சாகத்துடன் வரவேற்கிறது.

தீர்மானம் 02:

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைப்பதன் மூலம் முறியடித்துவிட முடியாது. நீதித்துறை, புலனாய்வு அமைப்புகள், அதிகார வர்க்கம், இராணுவம் – என அரசுக் கட்டுமானத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி, அதில் இருக்கும் பெயரளவிலான ஜனநாயகக் கூறுகளை அழித்து, அவற்றை தனது இந்துராஷ்டிர பாசிச அரசுக் கட்டமைப்பின் நிறுவனங்களாக மாற்றியமைத்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல்.

“நாம் ஒரு கட்சியை அல்ல, கட்டமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொல்லியிருப்பது முற்றிலும் உண்மையாகும். ராகுல் காந்தியின் பதவி நீக்கம் என்பது காவி பாசிஸ்டுகளின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கைகளின் அடுத்தகட்டப் பாய்ச்சல் என்று இம்மாநாடு அடையாளப்படுத்துகிறது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, குஜராத் படுகொலைகள் தொடர்பான பிபிசி ஆவணப்படம் ஆகியவற்றால் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுள்ள பாசிசக் கும்பல் இதுபோன்ற தாக்குதல்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். இவற்றை நாடாளுமன்ற, நீதிமன்ற சட்டப் போராட்டங்களால் முறியடித்துவிட முடியாது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற வரம்புகளையும் கடந்து மக்கள் மன்றத்தில் பாசிசக் கும்பலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய தேவையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

மோடி – அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் சட்டபூர்வமாக ஆட்சியில் இருந்தாலும், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பார்ப்பன பாசிச சித்தாந்தத்தைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல் இரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் அரசுக் கட்டுமானங்களில் தனது வலைப்பின்னலை ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி நடத்திவருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கும் மேலான அரசாங்கமாக, அடியாழத்திலுள்ள அரசாங்கமாக (Deep State) அமைந்து, தமது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்தி வருகிறது. அரசாங்கத்துக்குள்ளேயே அரசாங்கத்தை நடத்தும் இச்சிறு கும்பலின் ஆட்சியானது, அரசுக் கட்டமைப்பின் அனைத்துத் துறைகளிலும் ஆழமாக ஊடுருவி வேர்விட்டுள்ளது என்ற பேரபாயத்தை இம்மாநாடு எச்சரிக்கை செய்கிறது.

அன்றைய ஜெர்மனியிலும் இத்தாலியிலும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாசிஸ்டுகள் அதிரடியாக ரத்து செய்ததைப் போல் அல்லாமல், நிலவுகின்ற போலி ஜனநாயகத்தையே பாசிசத் தன்மை கொண்டதாக பா.ஜ.க. மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவை அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படுவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது. மோடி அரசை அரசியல் ரீதியில் விமர்சிப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு சொற்களை நாடாளுமன்ற விவாதங்களில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் போலி ஜனநாயக அரசமைப்பை, இந்துராஷ்டிர பாசிசக் கட்டமைப்பாக ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல் மாற்றிவரும் வேளையில், பாசிஸ்டுகளால் உட்செறிக்கப்பட்டுள்ள போலி ஜனநாயகக் கட்டமைப்பைப் பாசிஸ்டுகளிடமிருந்து மீட்டுவிடலாம் எனக் கருதுவது வரலாற்றின் எதிர்திசையில் பயணிக்க முயற்சிப்பதாகும். ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பலை எதிர்க்கும் அதேசமயம், “இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாப்போம்!, ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!, இந்தியாவைப் பாதுகாப்போம்!” – முதலான முழக்கங்களை முன்வைத்து இயங்கிவரும் பாசிச எதிர்ப்பு இயக்கங்கள், இந்திய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் மீதுள்ள மாயைகளைக் களைந்துகொண்டு மக்கள் எழுச்சியை கட்டியமைக்க முன்வர வேண்டும்.

பாசிஸ்டுகளுக்கும் ஜனநாயகத்தை வழங்கி, தன்னையே மாய்த்துக்கொண்ட போலி ஜனநாயக் கட்டமைப்பை மீட்பதல்ல நமது நோக்கம்; வளர்ந்துவரும் இந்துராஷ்டிரக் கட்டமைப்பைத் தகர்ப்பதையே நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

பாசிச சக்திகள் சட்டபூர்வமான வழிகளில் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கும் வகையில், இந்துமதவெறி அமைப்புகள், ஆதிக்கச் சாதி அமைப்புகள், மதவெறிக் கட்சிகள் இயங்குவதற்குத் தடை விதிப்பது, தேர்தலில் பங்கேற்கும் உரிமையைப் பறிப்பது, மதத்துக்கும் அரசுக்கும் உள்ள உறவை முற்றிலும் துண்டிக்கின்ற உண்மையான மதச் சார்பற்ற அரசமைப்பைக் கட்டியமைப்பது, தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தவறிழைத்தால் திருப்பி அழைக்க மக்களுக்கு உரிமை – போன்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயக அம்சங்களைக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றுதான் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளை முறியடிப்பதற்கான சரியான மாற்றுத் தீர்வாகும்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஒருக்காலும் நிறுவிட இயலாது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைத்து, பாசிச எதிர்ப்பு மக்கள்திரள் பேரெழுச்சியின் மூலமாக மட்டுமே அதை நிறுவ முடியும். இந்த மாற்றுத் திட்டத்தைக் கருத்தூன்றி பரிசீலித்து விவாதிக்க முன்வருமாறு அனைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளையும் இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

தீர்மானம் 03:

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல், “குஜராத் மாடல்”, “உத்தரப் பிரதேச மாடல்”, “திரிபுரா மாடல்” போன்ற பெயர்களில் அதிகாரத்தில் ஊடுருவியும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியும் வருகிறது. எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவது, இசுலாமியர்களையும் கிறித்துவர்களையும் படுகொலை செய்வது, பழங்குடியினர் மத்தியில் ஊடுருவுவது, கம்யூனிஸ்டுகளைப் படுகொலை செய்வது, தாக்குவது போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி இந்துராஷ்டிர பாசிச ஆட்சியை நிறுவி வருகிறது.

இதற்கெதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படும் “திராவிட மாடல்”, “நவ கேரளா”, “தெலுங்கானா மாடல்” போன்றவை பாசிச சக்திகளுக்கும் ஜனநாயகத்தை வழங்கி, கார்ப்பரேட் திட்டங்களை நடைமுறைப்படுத்துபவையாக உள்ளன.

ஆனால், அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் நடந்துவரும் போராட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது. “இந்தி தெரியாது போடா”, “மோடியே திரும்பிப் போ”, “தமிழ்நாடு வாழ்க”, “ஆர்.என். ரவியே வெளியேறு” போன்றவை ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல்களுக்கு எதிராக தமிழ்நாடு உருவாக்கிய போர்க்குணமிக்க முழக்கங்களாகும்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அர்ஜுன் சம்பத்தை விரட்டியடித்தது; ஆ.ராசா, திருமா மீதான சங்கப் பரிவார கும்பலின் அவதூறுகளை முறியடித்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு தமிழ்நாடு காட்டிய எதிர்ப்பு போன்றவையும்; பாலியப்பட்டு சிப்காட், பரந்தூர் விமான நிலையம், காட்டுப்பள்ளி துறைமுகம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களும் பாசிசத்திற்கு எதிராகத் “தமிழ்நாடு மாடல்” உருப்பெற்று வருவதை நமக்கு உணர்த்துகின்றன.

திருவள்ளுவர், சித்தர்கள், வள்ளலார், வைகுந்தர், பெரியார் போன்ற பார்ப்பன எதிர்ப்பு மரபும்; கீழடி, ஆதிச்சநல்லூர் உணர்த்தும் சாதி – மதங்களற்ற தமிழின் தொன்மை மரபும்; பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, சுந்தரலிங்கம், திப்பு சுல்தான், வ.உ.சி., சிங்காரவேலர் போன்றவர்களின் விடுதலை போராட்ட மரபும் கலந்து முன்னெழுந்து வருவதுதான் இந்தப் பாசிச எதிர்ப்பு “தமிழ்நாடு மாடல்”.

20-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிச சித்தாந்தமும், தமிழ்நாட்டில் பார்ப்பனியத்திற்கு எதிராக பகுத்தறிவு-திராவிட சித்தாந்தமும் முன்வரிசையில் நின்றதைப் போல, 21-ஆம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்திற்கு எதிராக ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபு, பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை ஒன்றாகத் திரட்டி முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அந்த திசையில், “வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு” என்ற முழக்கம் ஒரு அடி முன்னே வைப்பதாகும். இந்த முழக்கத்தை வீடுகள் தோறும் பரப்புமாறும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாசிச எதிர்ப்புக் கட்சிகளும் தங்களது சொந்த முழக்கமாக வரித்துக் கொள்ளுமாறும், பாசிசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்கு இந்த முழக்கத்தின் கீழ் போராடுமாறும் இந்த மாநாடு அறைகூவுகிறது.

தீர்மானம் 04:

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல் மார்வாடி, குஜராத்தி, பார்ப்பன, பனியா, பார்சி பின்னணி கொண்ட கார்ப்பரேட் கும்பலையும், ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பலின் ஆகப் பிற்போக்கான கார்ப்பரேட் கும்பலையும் பிரிதிநிதித்துவப் படுத்துகிறது. சிறு தொழில்களையும் சிறுவீத உற்பத்தியையும் அழித்து பெருந்தொழில்மயமாக்கும் – கார்ப்பரேட் மயமாக்கும் அரசின் கொள்கையானது, இந்தப் பிற்போக்கு – வலதுசாரி கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்கிறது. பல லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடிகளில் ஈடுபட்டு மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் இந்தக் கார்ப்பரேட்டுகளுக்கு “தொழில் வளர்ச்சி” என்ற பெயரில் வரிச் சலுகைகளும் மானியங்களும் கடன் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படுகின்றன. பொதுத்துறை பங்குகளின் சொத்துகள் அடிமாட்டு விலையில் தனியாருக்கு விற்கப்படுகின்றன.

தனியார்மய – தாராளமய – உலகமயமாக்கலைத் தீவிரப்படுத்தி, ஏகாதிபத்தியங்களின் கட்டற்ற கொள்ளைக்கான ஆதிக்கக் கருவியாக உள்ள உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்திய நாடு வெளியேறுவதன் மூலமே உள்நாட்டுத் தொழிலையும் வர்த்தகத்தையும் பாதுகாக்க முடியும்; ஏகாதிபத்திய கார்ப்பரேட் மயமாக்கத்தை முறியடிக்க முடியும் என இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

தீர்மானம் 05:

தமிழ்நாட்டின் கல்வித் துறையில் கொண்டுவரப்படுகின்ற “நம்ம ஸ்கூல்” திட்டம், போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படும் கார்ப்பரேட்மயமாக்கம், பரந்தூர் விமான நிலையம், பாலியப்பட்டு – உத்தனப்பள்ளி சிப்காட் திட்டங்கள், 12 மணி நேர வேலை முறை போன்றவை உழைக்கும் மக்களைக் கார்ப்பரேட் கும்பல்களுக்குக் கொத்தடிமைகளாக்குவது மட்டுமின்றி, மேற்படி அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலின், ஏகாதிபத்திய கார்ப்பரேட் கும்பலின் பகற்கொள்ளைக்கான பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கிறது. “திராவிட மாடல்” என்று சொல்லிக்கொண்டு தி.மு.க. அரசாங்கம் மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இம்மாநாடு கண்டிக்கிறது. மேலும், அதானி, அம்பானி, வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு போட்டுக்கொண்டுள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க