தொடர்ந்து அம்பலமாகும் தி இந்துவின் காவிக் கொண்டை!

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர கனவு குறித்தோ, ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் நோக்கம் குறித்தோ வாயைத் திறக்காமல், வெறும் ‘தேசிய பெருமை’ குறித்துப் பேசுவதென்பது கருத்தியல் தளத்தில் ஆர்‌.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பதாகும்.

மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி இந்திய நாட்டின் தலைவர் மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம். அவர் இல்லாமல் நாடாளுமன்றம் செயல்படாது. அப்படிப்பட்ட ஜனாதிபதி இல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்துவைக்கும் முடிவை மோடி எடுத்துள்ளார். எனவே, திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்து இருக்கின்றோம்” என்று கூறி பிரதான 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த புறக்கணிப்பை விமர்சித்து, “இழக்கப்பட்ட வாய்ப்பு (Lost Opportunity)” என்ற தலைப்பில் ஆங்கில ‘தி இந்து’வில், தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. “நாடாளுமன்ற திறப்பு என்பது தேச ஒற்றுமைக்கான தருணம், இத்தருணத்தில் துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் இந்நிகழ்வை வைத்து அரசியல் செய்கிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை கீழ்த்தரமாகவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் குரலாகவும் தி இந்து ஒலித்திருக்கிறது. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் வாதத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று ஒருபுறம் கூறிவிட்டு, மற்றொருபுறம் புறக்கணிப்பு என்பது ஒரு அதிதீவிரமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளது.

நாட்டின் முதல் குடிமகனாகக் கருதப்படும், நாட்டின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் தலைவராகவும் கருதப்படும் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்திருப்பது ஒரு குற்றமாகவோ, பொருட்டாகவோ தி இந்து-விற்கு தோன்றவில்லை. அதனால்தான், குடியரசுத் தலைவரைப் புறக்கணித்தது ஒரு விசயமா? அதற்காக எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமா? என்று நிர்மலா சீதாராமன் போலவே பேசுகிறது.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு குறித்து விமர்சிக்கின்ற, ‘ஜனநாயகம் என்பது என்ன, நாடாளுமன்றம் என்பது என்ன’ என்று வகுப்பெடுக்கின்ற தி இந்து, குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காதது குறித்து மோடி அரசைத் தெரிந்தே விமர்சனம் செய்யவில்லை. அதேசமயம் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கூட அவர்களாகத்தான் இணைப்புக் கட்டிடத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்துள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது.


படிக்க: வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்


மேலும், நாடாளுமன்றத்தின் முக்கிய செயல்பாடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவதாக தி இந்து தனது கட்டுரையிலேயே கவலை கொள்கிறது. ஆனால், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம்தான் நாடாளுமன்ற விவாதத்திற்கான, புதிய பொலிவான தளமாக இருக்கும் என்றும், இந்த திறப்பு விழாவானது ஒரு புதிய துவக்கமாக இருக்கும் என்றும் பச்சையாகப் புளுகுகிறது. பழைய நாடாளுமன்றத்தில் பாசிச மோடி அரசு குறித்தோ மோடியின் நண்பர் அதானி குறித்தோ வாயைத் திறக்க எதிர்க்கட்சியினர் அனுமதிக்கப்பட்டனரா என்பது தி இந்து-விற்கு தெரியாதா என்ன?

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு என்பது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க‌ கும்பலின் இந்துராஷ்டிர கனவிற்கான திறவுகோல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முதலாளித்துவ பத்திரிகையாளர்களும் ஜனநாயகவாதிகளும் இந்த கட்டிடத் திறப்பு என்பது இந்துராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதுதான் என்று அம்பலப்படுத்துகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரம்புகள் மோடியின் ஆட்சியில் வெட்டி சுருக்கப்பட்டு, ஒரு பாசிச மன்றமாகத்தான் இருக்கிறது.

நாடாளுமன்றம் மட்டுமன்றி அரசு கட்டுமானம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-மயமாகி இருக்கிறது. பாசிச அபாயம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. இந்தச்சூழலில் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பை ‘தேசிய பெருமை’ என்று கருதுவது இழிச்செயலாகும்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர கனவு குறித்தோ, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் நோக்கம் குறித்தோ வாயைத் திறக்காமல், வெறும் ‘தேசிய பெருமை’ குறித்துப் பேசுவதென்பது கருத்தியல் தளத்தில் ஆர்‌.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பதாகும். “இழக்கப்பட்ட வாய்ப்பு (Lost Opportunity)” கட்டுரை தி இந்துவின் மண்டைமேல் இருக்கும் காவிக் கொண்டையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது.


கயல்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க