பெல் நிறுவன குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் ஒரே நாளில் 6 வீடுகளில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பலரும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்த தொழிலாளர்கள். பள்ளி விடுமுறைக் காலமாதலால் பலரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றிருந்தனர்.
அந்த சமயம் பார்த்து ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து, திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
ஒரு வீட்டில் வைத்திருந்த சுமார் 10 சவரன் நகை திருடு போயுள்ளது.
மற்றொரு வீட்டில் 1 சவரன் நகை கொள்ளை போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து அந்த பதட்டம் தணிவதற்குள் பெல் நிறுவன மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் 6 சவரன் நகை ஸ்பிரே அடித்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் சில வருடங்களாக இப்பகுதியில் அதிகரித்துள்ளன.
சில வருடங்களுக்கு முன்பு சில வீடுகளில் புகுந்து 30 க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பெல் ஊழியர் கூட்டுறவு வங்கியில் 1.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இப்படிப்பட்ட குற்ற சம்பவங்களை தடுக்கக் கோரியும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்தும் அவற்றை தடுக்க எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பெல் நிர்வாகத்தைக் கண்டித்தும் CITU சங்கம் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்; பாதுகாவல் துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; ஊரகப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.
பெல் ஊரகப் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் வெகுநாட்களாகத் தொடர்வதாக சிஐடியு சங்கத்தினரும் பெல் ஊழியர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் அச்சுறுத்தும் விதமாகச் சுற்றித் திரியும் நாய், மாடு, குதிரை உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தவும் நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் ஊழியர்கள்.
மேலும் குடியிருப்பு வீடுகள், பள்ளிக் கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை பராமரிக்கவும் போதிய நிதியை ஒதுக்குவதில்லை என்கின்றனர்.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களாக உழைக்கும் வர்க்கத்திலேயே சலுகை பெற்ற வர்க்கமாக இதுநாள்வரை வலம் வந்த பெல் ஊழியர்களின் இன்றைய நிலை உத்தரவாதமற்றதாக மாறியிருக்கிறது.
பொதுத்துறை தனியார்மயம்; தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிப்பு உள்ளிட்ட தன்னுடைய வர்க்க நலன்களைப் பாதிக்கும் காவி கார்ப்பரேட் பாசிச அரசின் நடவடிக்கைகளைக் கூட அரசியல் ரீதியில் புரிந்துகொள்ள இயலாத மனநிலையில் இருந்தனர் பெல் ஊழியர்கள்.
ஆனால் மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை என்பதைப் போல இந்த சமூகமே வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிற இன்றைய மறுகாலனியாக்க சூழலில், தாம் மட்டும் தப்பிப்ப பிழைத்துவிட முடியும் என்று நம்பி இறுமாந்திருக்க முடியாது என்பதையே நடந்த திருட்டு சம்பவங்கள் காட்டுகின்றன.
பெல் ஊழியர்கள் போன்ற பொதுத்துறை ஊழியர்களாகட்டும் இன்னபிற நடுத்தர வர்க்கத்தினர் ஆகட்டும் அவர்களின் எதிர்காலம் அமைதியானதாக இருக்க வேண்டுமெனில் நல்லதொரு சமூகம் அமைந்தால் தான் சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக மாற்றத்திற்காகச் சிறு துரும்பைக் கிள்ளிப் போடுவதற்காகவாவது மாற்றத்திற்கான அமைப்புகளில் அவர்கள் ஒருங்கிணைய வேண்டும்.
வினவு களச் செய்தியாளர்