ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்! | கவிதை

அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே! ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள் கரம் கொடுப்போம்!

ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்!

தூரத்தில் கேட்டது இடிமுழக்கம்!
எங்கோ வானம் குமுற
நனையாமல் ஒதுங்கி நின்றான்!

இப்போது
அவனருகில் மரண ஓலம்!
வெடித்து எழாமல்
வேறு என்ன செய்வான்?

எத்தனை கணம் தெரியுமா உங்களுக்கு
ஜெகதீஷின் பிரேதம்!
தோளில் சுமந்தவனை கேளுங்கள்..
நிறைவேறா கனவும் சேர்ந்த சுமை அது!

போராட வருகிறேன் எனச் சொன்ன
தந்தையும் தனயன் வழி போகினார்!
இதயம் ஒன்றுதானே இருக்கிறது
இரண்டு வலிகளை எப்படி சுமப்பது?

அனிதா ஓரிடம்!
ஜெகதீஷோ வேறிடம்!
நீட் பலிபீடம் என்னவோ ஒன்றுதான்..

ஹேஷ்டேக்கில் நீதி தேவைவில்லை ஜெகதீஷ்வரன்களுக்கு!
களத்தில் இறங்குகிறார்கள் ஃபயாஸ்தின்கள்!

பணமிருப்பதால் பிரபஞ்சன்கள் மருத்துவர் ஆகிறார்கள்!
இல்லை என்பதால் ஜெகதீஸ்வரன்கள் மண்ணுக்குள் போகிறார்கள்!
இந்த உண்மையை புரிந்துகொண்டதால் ஃபயாஸ்தின்கள்
நீதி கேட்கிறார்கள்!
நாம் என்ன செய்யப் போகிறோம்?

தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்
அது டார்வின் தியரி!
பிழைத்திருக்க ஒரே தகுதி பணம் மட்டுமே
இது கார்ப்பரேட் தியரி!

பணம் மட்டுமே குறிக்கோள்!
அது ஃபயாஸின் பணமாயிருந்தால் என்ன?
ராபர்ட்டின் பணமாயிருந்தால் என்ன?
கார்ப்பரேட் ஏற்றுக் கொள்ளும்!
காவியும் வழிகாட்டும்!

அன்று அனிதாவிற்கு வைத்த கொள்ளி
இன்று ஜெகதீஷை பற்றிக் கொண்டது!
நாளை இது செந்தீயாய் சுழன்றடிக்கும்!
பாசிஸ்டுகளை அது கொளுத்தும்!

நாம் ஒன்றிணைந்தால் ஜெகதீஷ்வரன்கள் இறப்பதை தடுக்க முடியும்!
ஆனால் ஃபயாஸ்தின்கள் உருவாவதை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது!

அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே!
ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள்
கரம் கொடுப்போம்!

– செங்குரல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க