கழன்றது முகமூடி:
பாசிசக் கும்பலின் தோல்வி முகமும்
பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்கப் போராட்டமும்!
(பகுதி 2)
புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் என்று கருதப்படுகின்ற பெரும்பாலான அமைப்புகள், பா.ஜ.க.விற்கு எதிரான ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரித்து பாசிசத்திற்கு எதிராக மூச்சுவிடும் அவகாசத்தைப் பெற வேண்டும்; அதனால், தமிழ்நாட்டில் தி.மு.க.வையும் அகில இந்திய அளவில் காங்கிரசையும் ஆதரிப்பதுதான் இந்த தருணத்தின் புரட்சிகர நடவடிக்கை என்று கூறுகின்றன. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியைக் கூட சில புரட்சிகர இயக்கங்கள் ஆதரிக்கின்றன.
ஒரு சில அமைப்புகள் இந்த ஆளும்வர்க்க சரணாகதி பாதையையே நேரடியாக முன்வைக்காமல் மறைமுகமாக முன்வைக்கின்றனர். பாசிசத்திற்கு எதிரான ஒரு மாற்றுத்திட்டத்தை முன்வைக்காமல், “பா.ஜ.க.வை தோற்கடிப்போம்”, “அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காப்போம்”, “ஜனநாயகத்தைக் காப்போம்” என்று முழங்குகின்றனர்.
இப்போக்குகள் அனைத்தும், புரட்சிகரமான திசைவழியில் மக்களைத் திரட்டுவதன் மீதும் பாசிசத்தை முறியடிப்பதன் மீதும் நம்பிக்கை இழந்ததன் விளைவாகும். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவரது நிலைப்பாடுகளுக்கேற்ப மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களை இழுத்து வளைத்தும், சுருக்கி வெட்டியும் எடுத்துக்காட்டி தங்களது நிலைப்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
நிலவுவது நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்புதான், இந்தக் கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை என்று ஒப்புக்கொண்டாலும் தேர்தலில் ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரிப்பதும், பாசிசத்திற்கு எதிராக அனைத்து அரங்கங்களிலும் ஊக்கமாகப் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு ஆனால் தேர்தல் நேரத்தில் ஒதுங்கி இருப்பதும் இரண்டுமே சந்தர்ப்பவாதமான அணுகுமுறைகளே.
இன்னும் முக்கியமாக, புரட்சிகர அமைப்பு என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகள் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்பது ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒரு பிரிவினருடன் இணைந்து செயல்படுவதைக் குறிப்பதாகவும், ஆகையால், சில நிபந்தனைகளுடன் ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரித்து தேர்தலில் நிற்க வேண்டும் என்றும் கூறுகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், “எழு கர்நாடகா” என்ற இயக்கமானது, பல்வேறு அமைப்புகள், என்.ஜி.ஓ.க்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் செய்தது மட்டுமின்றி, காங்கிரஸ், சில இடங்களில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை மக்கள் முன்னிலையில் முன்னிறுத்தி, மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அவர்களது வாயால் உறுதிமொழி அளிக்க வைத்து ஆதரவளித்தன.
படிக்க: கழன்றது முகமூடி | பகுதி 1
இன்றைய சூழலில், பா.ஜ.க.விற்கு எதிரான எந்த ஒரு ஆளும் வர்க்கக் கட்சியும் புரட்சிகர இயக்கங்களுடன் ஐக்கிய முன்னணி, கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று கருதுவதும், புரட்சிகர இயக்கத்தின் பாசிச எதிர்ப்பு திட்டத்தை ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் விவாதம் நடத்தி அத்திட்டத்தின் அடிப்படையில் ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் ஒன்றுபடுவதாகக் கூறுவதும் அப்பட்டமான ஆளும்வர்க்கச் சரணாகதிப் போக்காகும்.
இவ்வாறெல்லாம் விமர்சனங்களைச் செய்யும்போது, “தேர்தலில் மக்களுக்கு என்ன வழிகாட்டப் போகிறீர்கள்” என்று புரட்சிகர அமைப்புகளைப் பார்த்து கேட்கின்றனர். பா.ஜ.க. பாசிசக் கட்சி என்றால், பா.ஜ.க.வை எதிர்க்கின்ற கட்சிகளை ஆதரிப்பதுதான் சரியான நிலைப்பாடாகும். அதற்காக தேர்தலில் பங்கேற்பதுதான் தற்போதைய சூழலில் புரட்சிகர அமைப்பின் கடமையாகும் என்று கூறுகின்றனர். எந்தவகையிலோ, பாசிசத்தை வீழ்த்துவதாக சொல்வது தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடுவது என்ற கேள்வியுடன் தொடர்புபடுத்திக் கேட்கப்படுகிறது.
இவ்வாறான அணுகுமுறைகள் எல்லாம், பாசிசத்தை வீழ்த்துவது குறித்த அடிப்படையான கடமையையே கைவிட்டு ஆளும் வர்க்கங்களுக்குப் பின்னே ஓடி ஒளிந்து கொள்வதாகும். அதாவது, நடப்பது நாடாளுமன்ற போலி ஜனநாயகம், இதன் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது என்ற நிலைப்பாட்டையும், பாசிசத்திற்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் தலைமையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கைவிட்டுவிட்டதாகும்.
தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை கடமை என்பதைப் போன்ற பல்வகையான பிரச்சாரங்களெல்லாம் ஆளும் வர்க்கங்களின் அப்பட்டமான ஏமாற்று வித்தைகளாகும். பாசிசம் வந்துவிட்டது, அதனால், தேர்தலில் பங்கேற்று பாசிச பா.ஜ.க.விற்கு எதிராக களத்தில் நிற்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளை ஆதரித்தே தீரவேண்டும் என்பதும் இதனைப் போன்ற ஒரு அணுகுமுறையாகும்.
ஒருவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்பது என்பது புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பிரச்சார வடிவம் என்று கருதும் புரட்சிகர அமைப்புகள், தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால், அவை பெறுவது சொற்பமான வாக்குகளே எனினும், அது பாசிச சக்திகளுக்கு எதிரானதாக அமைவதைவிட, பா.ஜ.க.விற்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதன் மூலம், பா.ஜ.க.விற்கு பி டீம் வேலைசெய்வதாக அமைந்துவிடும். அல்லது தனித்து நிற்காமல் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கலாம் என்று கருதினால், இவ்வமைப்புகளின் புரட்சிகர கருத்துகளை மக்களிடம் பிரச்சாரம் செய்ய முடியாது.
எவ்வாறாயினும், புரட்சிகர அமைப்புகள் பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில், தேர்தலில் பங்கேற்று பாசிசத்திற்கு எதிராக செயல்படுவது என்பது பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கி முன்னேறுவதைவிட பின்னடைவதற்கே வழிவகுக்கும்.
பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியின் அவசியம்
ஆகையால், புரட்சிகர அமைப்புகள் பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில், பாசிசத்தை வீழ்த்த மேற்கொள்ளவேண்டிய முதன்மையான நடவடிக்கை, புரட்சிகர அமைப்புகளின் மக்கள் அடித்தளத்தை விரிவுப்படுத்துவதுதான். இதன் மூலமாகத்தான், பாசிசத்திற்கு எதிரான உறுதியான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும்.
பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுடன் கூட்டமைப்போ, மக்கள் முன்னணியோ அல்லது ஆளும் வர்க்கத்தின் ஒருபிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியோ எதுவாக இருந்தாலும் அவை புரட்சிகர அமைப்புகளின் பலத்தின் அளவைப் பொறுத்தே அமைந்துள்ளன. மக்கள் அடித்தளம் என்ற பலத்தைக் கொண்டுதான், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு நிர்பந்தம் கொடுத்து தமது புரட்சிகர நிலைப்பாட்டை ஏற்கவைக்க முடியும்.
தமது உரிமைகளை முதலாளிகளிடம் பேரம் பேசி பணியவைக்க தொழிலாளர்கள் ஒற்றுமையாகவும் தொழிற்சங்கம் பலமாகவும் இருப்பது அடிப்படையான தேவை என்று சாதாரண தொழிலாளர்களுக்குத் தெரிந்த எளிய உண்மை, நாட்டின் நூற்றுக்கணக்கான ‘புரட்சிகர’ அமைப்புகளுக்குத் தெரியாமல் போனதுதான் இன்றைய எதார்த்தமாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், புரட்சிகர அமைப்புகள் எதுவாக இருந்தாலும், மக்கள் அடித்தளத்தை அதிகரிக்க அதிகரிக்க, புரட்சிகர சக்திகளின் பலவீனமான நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு பலமான நிலைமையை நோக்கி முன்னேறும். அதுதான், புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்வதில் வீச்சை ஏற்படுத்தும்.
பாசிசத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி உருவாகாத சூழலில், தேர்தலில் பங்கேற்பது என்பது ஒரு பிரச்சார வடிவம் – தொழிலாளர் வர்க்கத்தை புரட்சிக்குத் தயார்ப்படுத்தும் வடிவம் என்று கருதுகின்ற கட்சிகள்கூட, பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட கட்சியாக இருக்கும் போதுதான், தேர்தலில் பங்கேற்று செயலூக்கமான வகையில் முன்னேற முடியும்.
பாசிசத்தை முறியடிப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசின் தேவையும்
1947 ஆகஸ்டு 15-இல் இந்தியாவில் நடந்த அதிகார மாற்றத்திற்கு முன்பே, இன்றைய அரசியல் அமைப்புக்கான அடித்தளத்தை வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் ஏற்படுத்தினார்கள். அவர்கள் இந்தியாவை அடக்கி ஒடுக்குவதற்கு உருவாக்கிய அரசியல் அமைப்புமுறை (இரட்டையாட்சி முறை), அதிகார வர்க்க அமைப்புகளான இராணுவம், போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அரசுக் கட்டமைப்பின் அனைத்து அங்கங்களும் 1947-க்குப் பின்னர் சிற்சில மாற்றங்களைச் செய்து பயன்படுத்தப்பட்டன. வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளால் இயற்றப்பட்ட பல சட்டங்களை இன்றளவும் அப்படியே பயன்படுத்தி வருவதையும் நாம் காண முடியும்.
இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பு என்பது அதன் இயல்பிலேயே மக்கள் விரோதத் தன்மையுடன் தான் கட்டியமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், அனைவருக்கும் வாக்களிக்கும் முறை என்பதைத் தாண்டி இந்த அரசியல் அமைப்பு முறையில் மக்களுக்கு எந்த ஜனநாயகமும் இல்லை.
இது அதன் இயல்பிலேயே போலித்தனமானது என்பதற்கு சில முதன்மையான அம்சங்களைக் கூறலாம். முதலாவதாக, தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு தவறுகள் செய்தாலும் மக்கள் விரோதமாக செயல்பட்டாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினாலும் அக்கட்சிகளை, மக்கள் பிரதிநிதிகளைத் திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இரண்டாவதாக, சட்டமியற்றும் மன்றங்களாக மக்கள் பிரதிநிதிகளின் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லை. அதிகார வர்க்க அமைப்புகளான சிவில் நிர்வாக அமைப்புகள், போலீசு, இராணுவம், நீதித்துறைகள்தான் அச்சட்டங்களையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் கொண்டவையாக இருக்கின்றன. இதுதான், மக்கள் பிரதிநிதித்துவ மன்றங்களை (நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளூராட்சி மன்றங்களை) நாடக மேடையாக ஆக்குகின்றன.
படிக்க: பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்
மூன்றாவதாக, தற்போது நிலவுகின்ற இந்த அதிகார வர்க்க அமைப்பு மக்கள் விரோத முறையில் பயிற்றுவித்து வளர்க்கப்படுகிறது. பணபலம், சாதி, மத உறவுகள், அதிகார வர்க்கத்திடம் நெருக்கம், தனித்திறன் போன்றவற்றை மட்டுமே கொண்ட வகையில் இது கட்டியமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மக்களால் கண்காணிக்கவும் தேர்ந்தெடுக்கவும் படுவதில்லை என்பதுதான் இவர்களது அதிகாரத் திமிருக்குக் காரணமாக உள்ளது. இந்த தனிவகைப்பட்ட அதிகார வர்க்க அமைப்புதான் மக்களை வரிகளின் மூலமாகக் கொள்ளையடிக்கும் இரண்டாவது சுரண்டல் அமைப்பாக இருக்கிறது.
1992-களுக்குப் பின்னர் நமது நாட்டில் கொண்டுவரப்பட்ட, ஏகாதிபத்தியங்கள் ஏழை நாடுகளைக் கொள்ளையடிப்பதற்கும் தங்களுக்குள் உலகை பங்கீடு செய்து கொள்வதற்கும் உருவாக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் அவற்றின் இயல்பிலேயே மக்கள் விரோதத் தன்மை கொண்டவைகளாகவும் பாசிசத் தன்மை கொண்டவைகளாகவும் இருக்கின்றன.
இவை இந்திய அரசியல் அமைப்புக்கு இருக்கும் போலி ஜனநாயக முகமூடிகளான பெயரளவிலான ஜனநாயகக் கூறுகளை எல்லாம் அழித்து, அப்பட்டமான கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியை திணிப்பதாக அமைந்துள்ளன.
இந்தப் போலி ஜனநாயக அரசியல் அமைப்பும், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கப் பாசிசக் கொள்கையும்தான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. போன்ற பாசிசக் கட்சிகள் வளர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பதற்கும், பாசிசத்தை அரங்கேற்றுவதற்கும் காரணமாகும்.
இந்தப் போலி ஜனநாயக அரசியல் அமைப்பில் இருக்கும் பெயரளவிலான ஜனநாயக அம்சங்களை நீக்கி காவி மயமாக்குவதைத்தான், காலனியாதிக்க மரபுகளை நீக்குவதாகவும் தேசப் பெருமிதத்தை நிலைநாட்டுவதாகவும், “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்றும் இன்னும் பல்வேறு வகைகளிலும் மோடி-அமித்ஷா கும்பல் குறிப்பிடுகிறது.
குரல் வாக்கெடுப்புகளின் மூலமே நாடாளுமன்றத்தில் சட்டமசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளுதல், ஆளுநர்கள் மூலம் இணையாட்சியை நடத்துதல், ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநிலங்களின் பெயரளவிலான உரிமைகளையும் பறித்தல், சுயேட்சையான நிறுவனங்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுகின்ற ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றிலெல்லாம் தன்னுடைய பாசிசப் படையினரை நுழைத்து அனைத்துக் கட்டுமானங்களையும் கைப்பற்றுதல், அவற்றை தன்னுடைய பாசிச நோக்கங்களுக்கு ஊழியம் செய்யும் அமைப்புகளாக மாற்றி வைத்திருத்தல், ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளில் ஈடுபடுதல் – என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மேற்கொண்டுவரும் பலநூறு வழிகளிலான பாசிச நடவடிக்கைகளுக்கும் ஆதாரம் இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பும், அதன் சீரழிவும்தான்.
ஆகையால், இந்த நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை மீட்பதன் மூலம் பாசிசத்தை முறியடிக்க முடியாது. இந்த நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் வழியாகத்தான் பாசிசம் வளர்ந்து வந்துள்ளது என்பதால், இந்த நாடாளுமன்ற ‘மாண்பு’களை மீட்கப்போவதாகக் கூறுவது காவி பாசிச சக்திகளுக்கே சாதகமாக அமையும்.
ஆகையால், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை நிறுவுவதற்காக பரந்துபட்ட உழைக்கும் மக்களையும், பாசிச எதிர்ப்பு சக்திகளையும் தட்டியெழுப்புவதே, இன்று புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறையாகும்.
000
இந்த பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசானது, முதலாவதாக, தற்போது இருக்கும் இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளுக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கும் அமைப்பாக இருக்கும். இரண்டாவதாக, அதிகார வர்க்கம் ஒழிக்கப்பட்டு, சட்டமியற்றும் கடமையும் அதனை நடைமுறைப்படுத்தும் கடமையும் ஒருங்கே மக்கள் பிரதிநிதிகளுக்கே வழங்கும். மூன்றாவதாக, தனிவகையாக இருக்கும் அதிகார வர்க்க அமைப்பு, போலீசு கலைக்கப்பட்டு, அதிகாரத்தில் மக்கள் பங்கேற்கும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
இந்த அடிப்படை அம்சங்களைக் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசில், சாதிவெறி மதவெறிக் கட்சிகள் தடை செய்யப்படும். மதம் அரசியலில் இருந்து முற்றாகப் பிரிக்கப்படும். காவிமயமாக்கப்பட்ட அனைத்துக் கூறுகளும் மறு ஒழுங்கமைக்கப்படும். அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் உள்ளிட்ட மார்வாடி, குஜராத்தி, சிந்தி, பார்ப்பன, பனியா பின்னணி கொண்ட ஆக கேடுகெட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து கார்ப்பரேட் திட்டங்களும் திரும்பப் பெறப்படும், இவை தொடர்பான அனைத்து சட்டங்களும் இரத்து செய்யப்படும்.
ஊபா போன்ற கருப்புச் சட்டங்கள் இரத்து செய்யப்படும். அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுவார்கள்.
அனைத்து தேசிய இனங்களுக்கும் பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வழங்கப்படும். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையைக் கைவிட்டு தற்சார்புக் கொள்கை பின்பற்றப்படும். நாட்டை இராணுவமயமாக்கும் போக்கைக் கைவிட்டு, அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது முதன்மையாக்கப்படும். இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து அடிப்படை உரிமைகளும் அனைவருக்கும் சமமாக வழங்கப்படும்.
இவ்வாறான ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசிற்கான திட்டத்தை பரந்துவிரிந்த மக்களிடம் கொண்டு சென்று, இதனை உருவாக்குவதற்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதே இன்றுள்ள முதன்மையான பணியாகும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் செயலூக்கமான முறையில் தலையிடுவது
தற்போது நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது அரசியல் அரங்கில் எந்த அளவிற்கு அவசியமானதோ, அந்த அளவிற்கு உழைக்கும் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதும் அவசியமானதாகும்.
பாசிச பா.ஜ.க. தோல்வி முகத்தில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல் மக்கள் மத்தியில் பெருத்த அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இதனால், இந்த கும்பல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் எதிர்க்கட்சிகள் இடையே இருக்கும் ஒற்றுமையின்மை, கார்ப்பரேட் நலன்சார்ந்த மக்கள் விரோதத் திட்டங்களுக்கு மக்களிடம் இருக்கும் எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளின் ஊழல்-முறைகேடுகள் ஆகியவற்றை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். மேலும், மதக்கலவரங்களைத் தூண்டிவிடும். இவ்வாறாக, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பாசிசத்தை நிலைநாட்டவே செய்யும்.
அதேவேளையில், எதிர்க்கட்சிகள் கார்ப்பரேட் வர்க்கக் கட்சிகளாக இருப்பதால், மக்களிடம் இருக்கும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீண்டும் கார்ப்பரேட் ஆட்சியை மக்கள் மீது திணிப்பதற்கான முயற்சிகளைதான் மேற்கொள்வார்கள். பா.ஜ.க.வின் இந்துத்துவ செயல்பாடுகளுடன் சமரசமான போக்கையே மேற்கொள்வார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இப்போக்கிற்கு இடம் கொடுக்காமல், பாசிச எதிர்ப்பு ஜனநாயகத் திட்டங்களை மக்களிடம் வீச்சாகக் கொண்டுசென்று அவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரு மக்கள் எழுச்சிக்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். இதுதான், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிர்பந்தத்தை எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்படுத்தும்.
“ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வைத் தடை செய்ய வேண்டும்!”
“ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வால், இந்த அரசுக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லா பாசிச மறுஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!”
“பாசிசம் மீண்டெழாத வகையிலும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் வகையிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்புக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்!”
இக்கோரிக்கைகளை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விவாதப் பொருளாக்குவதே, பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமான போராட்டமாக இருக்க முடியும்.
புரட்சிகர சக்திகளாக இருப்பவர்கள் இன்று எவ்வளவு பலவீனமாக இருந்தபோதும், தமது சக்திக்கு உட்பட்டு பாசிசத்திற்கு எதிராக அரசியல் அரங்கில் தமது ஊக்கமான பங்களிப்பை வழங்கியே தீரவேண்டும். இதன் மூலமாகத்தான் பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர திசைவழியில் உந்தித் தள்ள முடியும்.
மாறாக, ஆளும்வர்க்கக் கட்சிகளுக்கு பூத் ஏஜண்டாக பணியாற்றுவதுதான் பாசிசத்தை முறியடிக்கும் ‘சாத்தியமான வழி’ என்று கருதினால், அதைக் காட்டிலும் மோசமான தற்கொலைப் பாதை வேறெதுவும் இல்லை!
பால்ராஜ்