கழன்றது முகமூடி | பகுதி 1

‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை.

கழன்றது முகமூடி:
பாசிசக் கும்பலின் தோல்வி முகமும்
பாசிச எதிர்ப்பு சக்திகளின் செயலூக்கமிக்க போராட்டமும்!

(பகுதி 1)

பா.ஜ.க.வை தோற்கடிப்பதே எங்கள் ஒரே இலக்கு” என்று ஒருமித்த குரலில், கூட்டாக அறிவித்துள்ளார்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள். காங்கிரஸோடு இணைந்து ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பங்கேற்ற இக்கூட்டம் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் “இதுவெறும் போட்டோ ஷூட் கூட்டம்தான், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை” என்று கிண்டலடித்துள்ளார் அமித்ஷா. “மோடியை காங்கிரஸ் தனித்து நின்று வீழ்த்த முடியாது என்பதற்கான நிரூபணம்தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக் கூட்டம்”, “பா.ஜ.க.வின் வெற்றியைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று பா.ஜ.க. தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது.

பாட்னாவின் கூட்டம் வெற்றிகரமாக முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் கூறினாலும், அதில் பங்கேற்ற 16 எதிர்க்கட்சிகளிடையேயும் ஒரு முடிவான கூட்டணி ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று நாம் சொல்லிவிட முடியாது. பா.ஜ.க.வை தோற்கடிப்பதுதான் தங்கள் ஒரே இலக்கு என்று கூறிக் கொண்டாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு “நிபந்தனை” உள்ளது. இந்த நிபந்தனையை ஒருவருக்கொருவர் பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் பாட்னா கூட்டம் அமையவில்லை. ஆகவே ஜுலை 12, 13 வாக்கில் சிம்லாவில் மல்லிகார்ஜூன் கார்க்கே தலைமையில் மற்றொரு கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசின் சட்டத்தை, மாநிலங்களவையில் தோற்கடிப்பதற்கு ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை. இக்கூட்டத்துக்கு முன்பே அவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோரியிருந்தர். குறிப்பாக, ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’வைப் படைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க.வுடன் ஒத்துப்போகும் கெஜ்ரிவாலே, இதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ராகுல் ஆகியோரையும் சந்தித்து ஆதரவு கோரப் போவதாக தெரிவித்திருந்தார்.

பாட்னா கூட்டத்தில் டெல்லி விவகாரத்தை நிகழ்ச்சிநிரலாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்த கெஜ்ரிவால், கூட்டத்திற்குள்ளும் இதை விவாதத்திற்கு கொண்டுவந்தார். அப்போது ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை பகிரங்கமாக நிராகரித்துள்ளார். “காஷ்மீரின் சிறப்புச் சட்டம் 370” ரத்துசெய்யப்பட்டபோது, கெஜ்ரிவால் அதற்கு ஆதரவான நிலை எடுத்ததை அவர் சுட்டிக்காட்டினார். டெல்லி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி உத்தவ் தாக்கரே காங்கிரசிடம் பரிந்துபேசியும், காங்கிரஸ் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் இதுகுறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை என்றால், சிம்லாவில் நடைபெறும் அடுத்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா, கூட்டத்தில் பேசும்போது மேற்கு வங்கக் காங்கிரஸின் போக்கு பற்றி குற்றஞ்சாட்டினார். “எல்லோரும் ‘பெரிய மனது’டன் நடந்துகொள்ள வேண்டும். நமக்குள்ளேயே நாம் சண்டையிட்டுக் கொண்டால், அது பா.ஜ.க.விற்குத்தான் சாதகம்” என்று பேசினார். கேலிக்கூத்தாக, இந்த கூட்டத்தில் மம்தா ‘பெரிய மனது’ பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதுதான், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, திரிணமுல் அரசை “திருடர்கள்” என்று அழைத்துள்ளார்.


படிக்க: தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!


ஏற்கெனவே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸை ஆதரிக்க வேண்டுமென்றால், காங்கிரஸும் மேற்கு வங்கம் உள்ளிட்டு மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களை ‘பெரிய மனது’டன் விட்டுத்தர வேண்டும் என்று மம்தா கேட்டிருந்தார். மம்தா தெரிவித்த நிபந்தனை மீதும் காங்கிரஸ் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதுபோக, கேரளாவில் காங்கிரஸ், சி.பி.எம் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது.

எனினும், இந்த முரண்பாடுகள் எல்லாம் இருப்பினும்கூட எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் ஒரு தற்காலிகமான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதும், தேர்தலில் பா.ஜ.க.விற்கு நெருக்கடி கொடுக்க முயற்சிப்பதும் சாத்தியமே.

ஏனெனில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை தீர்மானிக்கும் முதன்மைக் காரணியாக இருப்பது, இக்கட்சிகளின் முன்முயற்சி அல்ல பா.ஜ.க.வின் பாசிச ஒடுக்குமுறைகள்!

000

சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவி எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை இன்று பா.ஜ.க. கும்பலால் தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. அமலாக்கத்துறை விசாரணை நடத்தாத கட்சி என்று எதிர்க்கட்சிகளில் எவையும் இல்லை. செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்திருக்கும் நிகழ்வு என்பது பாசிசக் கும்பலால் தி.மு.க.விற்கு விடப்பட்டிருக்கும் மிரட்டலே!

மகாராஷ்டிராவில் தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே பிரிவை அங்கீகரித்தது, ராகுல் காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கை போன்றவை எதிர்க்கட்சிகள் அனைவருக்குமே ஒருவித அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. “ஒருவேளை 2024 தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப் படாவிட்டால், இனி தேர்தலே நடக்காது” என்பதை பேசாதவர்கள் யாரும் இல்லை. “பா.ஜ.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது” என்று மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவாவது எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்தாக வேண்டிய தேவை இருக்கிறது!

வெளியே வீராப்பு, உள்ளே பயபீதி!

என்னதான் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை ‘ஒன்றுக்கும் உதவாதது’ என்று பா.ஜ.க. பகடி செய்துகொண்டிருந்தாலும், தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதானது பா.ஜ.க.விற்கு கிலியை ஏற்படுத்தாமல் இல்லை. எப்படியாவது, அதைச் சிதைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

பிகாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஆளும் மகாபந்தன் கூட்டணிக்கு அளித்த ஆதரவை தாம் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி. நிதிஷ்குமார் தன்னுடைய கட்சியை அவருடைய கட்சியோடு இணைப்பதற்கு கொடுத்த நிர்பந்தத்தால் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். தற்போது அவர் பா.ஜ.க. கூட்டணியில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்.

“கூட்டணியில் இருந்துகொண்டே பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சிகளை ஜிதன்ராம் மாஞ்சி உளவு பார்க்கிறார். வரும் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஜித்தன் ராம் கசியவிடுவார் என்பதாலேயே அவருடைய கட்சியை ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைக்கச் சொன்னேன்” என்று நிதிஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவதாக வதந்தி பரப்பிய சங்கிக் கூட்டம், மு.க.ஸ்டாலின் பாட்னா கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றபோது தி.மு.க. தலைவர்கள் பேசிய இந்தி எதிர்ப்புப் பேச்சுக்களை, இந்தி துணைத் தலைப்புகளுடன் காணொளியாகத் தாயரித்து வெளியிட்டிருந்தது.


படிக்க: பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!


அதில் “இந்தி படித்தால் வேலை கிடைக்குமா”, “இங்கே பானிப்பூரி விற்பவர்கள் யார்”, “பீகாரிலிருந்து இங்கே வந்துள்ளார்கள்” போன்ற பேச்சுக்களை வெட்டியெடுத்துப் பரப்பியது. மேலும், பீகாரிலிருந்து “ஸ்டாலின் கோ பேக்” (ஸ்டாலினே திரும்பிப் போ) என்ற முழக்கத்தை டிவிட்டரில் தனது இணைய வானரப்படைகளை வைத்து டிரெண்டாக்கியது. இவற்றின் மூலம் “நிதிஷ்குமார் தலைமை வகிக்கின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம், பீகார் மக்களுக்கு எதிரானது” என்ற கருத்தை திட்டமிட்டு உருவாக்கியது.

பாட்னா கூட்டம் வெறும் போட்டோ ஷூட் கூட்டம்தான் என்றால், அதை சீர்குலைப்பதற்கு பா.ஜ.க. ஏன் இந்த புழுக்கை வேலைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்! வெளியே வீராப்பு, உள்ளே பயபீதியா?

2014-இல் இருந்து 2024 நோக்கி: பல்லிளிக்கும் பலவீனங்கள்!

2014ஆம் ஆண்டு மோடி கும்பலுக்கு இருந்த மவுசு, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இருக்கப்போவதில்லை. 2014இல் மோடி அணிந்துவந்த ‘வளர்ச்சி’ என்ற முகமூடி இன்று கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத் தேர்தல் தோல்வி என்பது பாசிசக் கும்பலின் பலவீனங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, “வெல்லப்பட முடியாத தலைவர் மோடி” என்று பா.ஜ.க. கும்பல் கட்டிவைத்திருந்த பிம்பத்தை உடைத்துப் போட்டிருக்கிறது.

அண்மையில் தோனி அரசியலுக்கு வரவேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளி ஆனந்த மகேந்திரா தெரிவித்த கருத்தானது, பா.ஜ.க.வின் கரங்களை வலுப்படுத்துவதற்கு அல்லது மோடிக்கு மாற்றாக இன்னொரு முகமூடியை தயாரிப்பதற்கு பா.ஜ.க.வை ஆதரிக்கும் கார்ப்பரேட் கும்பலின் ஒரு பிரிவினரே விரும்புகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

தமது ஒன்பது ஆண்டுகால ஆட்சி நிறைவை பா.ஜ.க.வினர் நாடு முழுவதும் கொண்டாடிவரும் நிலையில், இந்த ஒன்பது ஆண்டுகளில் பாசிசக் கும்பல் எந்தெந்த வகையில் தனது பலவீனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பட்டியலிட வேண்டியிருக்கிறது.

  1. பா.ஜ.க.வின் கதாநயகனான மோடியே கர்நாடகத் தேர்தலில் பிரச்சாரம் செய்தும், பா.ஜ.க. படுதோல்வியடைந்திருப்பது மோடி பிராண்டின் வரம்பை தெள்ளத்தெளிவாகக் காட்டிவிட்டது. மாநில கட்சித் தலைவர்களை துச்சமாகக் கருதுவிட்டு, எல்லா மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் மோடி பிராண்டை முன்னிறுத்தியே வெற்றிபெற்று விடமுடியும் என்ற பா.ஜ.க.வின் கருத்து நகைக்கத்தக்கது என்று முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே காரிஉமிழ்கிறார்கள். “இரட்டை என்ஜின் ஆட்சி” என்ற முழக்கம் எடுபடக்கூடிய முழக்கமல்ல என்பதற்கான நிரூபணமே கர்நாடகத் தேர்தல் தோல்வி.
  2. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், அதிகரித்துவரும் வேலையின்மை, சிறுதொழில் நசிவு, கிராமப்புற வறுமை அதிகரிப்பு என மக்களுடைய எந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்க்க வக்கற்றுப் போன நிலையில், ‘தேச வளர்ச்சி’ பற்றி வாய்ச்சவடாலடிப்பது சிரமமாகியுள்ளது. மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அதானியின் உலக மகா பங்குச் சந்தை மோசடி அம்பலமான பிறகு, மோடி கும்பல் முன்வைக்கும் ‘வளர்ச்சி’ யாருக்கானது என்பது பரந்துபட்ட மக்களிடையே அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
  3. எதிர்க்கட்சிகளை விமர்சிக்குமளவுக்கு பா.ஜ.க. யோக்கியமான கட்சியல்ல, அது பல விசயங்களில் இரட்டை நிலைப்பாடுகள் கொண்ட கட்சி என்பது மக்கள் முன்பு அம்பலப்பட்டுவருகிறது. “ஊழல் ஒழிப்பு”, “இலவச ஒழிப்பு” போன்ற விசயங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதும், ஆனால் தனது கட்சியே ஊழல் கட்சியாகவும், தேர்தல் நேரங்களில் இலவச அறிவிப்புகளை வாரிவழங்கும் கட்சியாகவும் உள்ளதை மக்கள் பார்த்துவருகிறார்கள்.
  4. “வளர்ச்சி” என்ற முகமூடி கிழிந்துதொங்கும் நிலையில், இந்துமதவெறி – தேசவெறியை தீவிரமாக கொண்டுசெல்வதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டிருக்கிறது. இது 2014க்கும் 2024க்கும் இடையிலான தலைகீழ் மாற்றமாகும். இந்துமதவெறியை நேரடியாகப் பேசாமல் தன்னை வளர்ச்சியின் நாயகனாக மட்டுமே காட்டிவந்த மோடி, “கர்நாடாவில் ஜெய் பஜ்ரங்பலி” என்று முழங்கியது தோல்வி முகத்தின் சாட்சியமாகும்.தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் இந்துத்துவ முகம் மட்டுமே உதவாது என்றபோதும், அதைவிட்டால் “வேறு வழியில்லை” என்ற நிலைக்கு பாசிசக் கும்பல் தள்ளப்பட்டிருக்கிறது.
  1. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் குதிரைபேர ஆட்சிக்கவிழ்ப்புச் சதிகள் மூலம் பா.ஜ.க. தனது ஆட்சியை நிறுவியுள்ளது. ஆனால், இந்த குதிரைபேரம் பா.ஜ.க.விற்கு சாதகமான விளைவுகளை மட்டுமே கொண்டுவந்துவிடவில்லை. ஏற்கெனவே கட்சியமைப்பில் இருக்கும் பெருந்தலைகளுக்கு அதிகாரப்போட்டியில் உரிய ‘பங்கு’ வழங்கப்படாததால் கட்சிக்குள்ளேயே கோஷ்டி சண்டைகளை உக்கிரமாக்கியுள்ளது. இது தேர்தலிலும் தாக்கம் புரிகிறது.
  2. பல்வேறு மாநிலங்களிலும் தான் கூட்டணி வைக்கும் கட்சிகளையே மெல்லமெல்ல கரைத்துக்குடித்துவிடும் பா.ஜக.வின் தந்திரம், அக்கட்சிகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. தன்னுடைய கட்சியை காப்பற்றிக் கொள்வதற்காகவே அவர்கள் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐ.ஜ.த. கட்சியின் நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு இது முக்கியக் காரணமாகும். சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும் இந்த அபாயத்தை நன்கு உணர்ந்திருந்தார்.அ.தி.மு.க. போன்ற அடிமைக்கட்சிகள் இந்த அபாயத்தை உணர்ந்தாலும் ரெய்டு பயம் காரணமாக வேறுவழியில்லாமல் அடங்கிக் கிடக்கின்றன. வன்னிய இளைஞர்கள் பா.ஜ.க.விற்கு போகாமல் தடுக்க வேண்டுமென்று பா.ம.க.வின் ராமதாஸ் தனது கட்சி பொதுக்கூட்டத்திலேயே பேசினார்; இப்போதுவரை பா.ம.க. பா.ஜ.க.வுடன் ஒரு கறாரான இடைவெளியையே பாரமரிக்கிறது.

மேற்கண்ட ஆறு அம்சங்களுமே இந்துத்துவ பாசிசக் கும்பல் இந்த தேர்தல் வரம்புக்குள் எதிர்க்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் பலவீனங்களுமாகும்!

வலுக்கும் நாய்ச்சண்டை!

அடுத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்ற மாநிலங்களில் மத்தியப் பிரதேசமும் ஒன்று. இம்மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், பா.ஜ.க. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் நடத்திய குதிரை பேரத்தில், 2020ஆம் ஆண்டு 22 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.விற்கு தாவின; அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியமைத்தது. இன்று அதுவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு வினையாக வந்திருக்கிறது.

கடந்த மாதம் ஆறாம் தேதி இந்துத்துவ அமைப்புகளுள் ஒன்றான “பஜ்ரங் சேனா” அமைப்பின் தேசியத் தலைவர் ரன்வீர் படேரியா, ஒருங்கிணைப்பாளர் ரகுந்தன் சர்மா உள்ளிடோர் தங்களது பரிவாரங்களுடன் கூடிவந்து ம.பி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன்னிலையில் தங்களை காங்கிரஸில் இணைத்துக் கொண்டனர். மேலும் பஜ்ரங் சேனா அமைப்பையே காங்கிரஸுடன் இணைத்துவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

உடனே பதறியடித்துக் கொண்டு, “ஒரு நான்குபேர்தான் தவறான வழிகாட்டுதலாலும் தூண்டுதலாலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்கள் என்றும், ஒட்டுமொத்த பஜ்ரங் சேனாவும் இணைந்துள்ளதாகக் கூறுவது பொய் என்றும் சில நிர்வாகிகளை வைத்து பேட்டிகொடுக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ்.

இச்சம்பவத்திற்கு ஒருமாதத்திற்கு முன்னர்தான் ம.பி. முன்னாள் பா.ஜ.க. முதல்வர் கைலாஷ் ஜோஷியின் மகன் தீபக் ஜோஷி, பா.ஜ.க.வில் தனக்கு ‘முக்கியத்துவம் தரவில்லை’ என்றுகூறி காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த தீபக் ஜோஷி தனக்கிருக்கும் செல்வாக்கின் மூலமாகத்தான் பஜ்ரங் சேனாவின் தலைவர்களைக் கொண்டுவந்து காங்கிரஸில் இணைத்துள்ளார்.

பஜ்ரங் சேனா அமைப்பானது மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பொந்தெல்கண்ட் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற அமைப்பாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆத்யநாத்துக்காகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாகவும் இவ்வமைப்பு பிரச்சாரம் செய்தது.


படிக்க: டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!


தீபக் ஜோஷியும், பஜ்ரங் சேனாவின் முக்கியத் தலைவர்களும் அவ்வமைப்பின் ஒரு கோஷ்டியும் காங்கிரஸுக்கு தாவியுள்ளது, பா.ஜ.க.வுக்கு பீதியை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் ஜெகதீஷ் ஷெட்டர், லஷ்மண் சவடி ஆகியோர் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் பா.ஜ.க. தேர்தலில் பலவீனப்படுத்தப்பட்டது போன்ற நிலை ம.பி.யிலும் உருவாகியிருக்கிறது.

கர்நாடக தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தெலுங்கானாவில் ராஜேந்தர் மற்றும் ராஜகோபால் ரெட்டி உள்ளிட்ட மூத்த பா.ஜ.க. தலைவர்கள் கட்சிக்குள் கலகம் செய்து வருகிறார்கள். அவர்கள் காங்கிரஸில் இணைந்தால், “மிஷன் சவுத்” கனவில் உள்ள பா.ஜ.க.விற்கு இது மேலும் பேரிடியாக அமையும் என்பதால், உயர்மட்ட கட்சித்தலைவர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

ஓடிசா ரயில் விபத்து: இன்னொரு புல்வாமா எப்படி இருக்கும்?

நாட்டு மக்களை பதைபதைக்கவைத்த கோரச் சம்பவம் ஒடிசா ரயில் விபத்து. ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்காக திட்டமிட்டே பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புச் செலவினங்களை குறைத்துவந்த மோடி அரசே, இதற்கு பொறுப்பேற்க வேண்டிய குற்றவாளி. ஆனால், “துயரத்தில் அரசியல் செய்யாதீர்கள்” என தங்கள் மீதான விசாரணையை திசைதிருப்பியது பா.ஜ.க. அதேநேரத்தில், பிணங்களின் மீது தமது பாசிச சதிப் பிரச்சாரத்தை கட்டமைத்ததும் பா.ஜ.க.தான்.

“ஒடிசா ரயில் விபத்து சதிச்செயலாகக் கூட இருக்கலாம்; எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும்” என்று அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு ஒதுக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்த இணைய வானரப்படைகளும், ஒடிசா ரயில் விபத்து ‘இஸ்லாமிய பயங்கரவாதச் சதி’ என்பதாக பொய்ப் பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த வெள்ளைக் கட்டிடத்தை (ஜெயின் கோயில்) மசூதி என்றும்; விபத்து நடந்த பாலாசோர் பகுதி சட்டவிரோதமாகக் குடியேறிய ரோங்கியா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி என்றும் கூறி, நடைபெற்றுள்ள விபத்து “ரயில் ஜிகாத்” என்று ஒரு நயவஞ்சக பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது சங்கிக் கும்பல். இது வடிகட்டிய பொய் – இழிவான வெறுப்புப் பிரச்சாரம் என்பதை “ஆல்ட் நியூஸ்” போன்ற உண்மை கண்டறியும் செய்தி நிறுவனங்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

2016-ஆம் ஆண்டு கான்பூர் ரயில் விபத்தில் 150 பேர் பலியாகினர். அவ்விபத்திற்கு காரணம் ஐ.எஸ்.ஐ.எஸ் சதி என்று பிரச்சாரம் செய்தார்கள் சங்கிகள். 2017ஆம் உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி கான்பூர் ரயில் விபத்தை “எல்லை தாண்டிய பயங்கரவாத சதி” என்று வருணித்தார்; “தேசத்தைக் காப்பதற்கு யோகிக்கு வாக்களியுங்கள்” என்றார். இது தொடர்பான வழக்கை பா.ஜ.க.வின் ஏவல் அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்தபோதும், ‘சதி’ என்று போலியாக ஜோடிப்பதற்குக்கூட எந்த துப்பும் கிடைக்கவில்லை.


படிக்க: ஒடிசா ரயில் விபத்து: அரசே முதல் குற்றவாளி!


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் இதுதொடர்பான விவரங்களை நினைவூட்டி பா.ஜ.க. கும்பலின் கேவலத்தை அம்பலப்படுத்தினர்.

000

பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு பிண அரசியல் புதிதல்ல. இதுபோலத்தான் 2019 தேர்தல் பிரச்சாரத்திலும் புல்வாமாவில் படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து ஓட்டுப் பொறுக்கியது. அன்று காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்திய பால் மாலிக், உளவுத்துறை ராணுவ வீரர்களுக்கு ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் 44 வீரர்கள் பலியானதற்கு காரணம் என்பதையும், இதை மோடியிடம் கூறியபோது அவர் இதை வெளியே தெரியாமல் மறைக்கச் சொன்னார் என்ற விவரத்தையும் பொதுவெளியில் போட்டுடைத்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்தனங்கள் அம்பலப்பட்டுபோனதால், ஒடிசா ரயில் விபத்தில் அக்கும்பலால் அரசியல் ஆதாயம் தேடமுடியவில்லை. மாறாக இவை அனைத்துக்கும் மோடி கும்பல்தான் முதன்மையான குற்றவாளி என்பது அம்பலப்பட்டு நாறுகிறது.

2024 தேர்தலை முன்னிட்டு இனி ஒரு புல்வாமா கதையை மோடி கும்பல் தயாரித்தால், அதை நம்புவதற்கு நாடு தயாராக இல்லை!

மணிப்பூர்: தான் பற்றவைத்த தீ, தன்னையே சூழ்ந்தது!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக கட்டுக்கடங்காத வன்முறையால் மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மணிப்பூரை மாற்றும் நோக்கில், மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டு குக்கி பழங்குடிகளுக்கு எதிராக இனக் கலவரத்தை நடத்தியது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல். அக்கும்பல் பற்ற வைத்த நெருப்பு இன்று அவர்களையே சூழ்ந்துகொண்டுள்ளது. பாசிஸ்டுகளின் கலவர அரசியல் எல்லா நேரத்திலும் அவர்களது நோக்கப்படி அமைந்துவிடுவதில்லை, அவர்களுக்கு எதிராகவும் திரும்பும் என்பதற்கு மணிப்பூர் சான்றாக இருக்கிறது.

எந்த மேய்தி இந்து மக்களை தனது அடித்தளமாக மாற்றிக் கொள்வதற்கு பாசிசக் கும்பல் வேலைசெய்ததோ, அந்த மேய்தி மக்களே இன்று மோடி அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டுவருகிறார்கள்.

40 நாட்களுக்கு மேல் ஒரு மாநிலமே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, நாட்டின் பிரதமரான மோடி வாய்திறந்து பேசவில்லை. அகில இந்திய வானொலியில் மோடி உரையாற்றிய மனதின் குரல் நிகழ்ச்சியிலும் (18-06-2023) மணிப்பூர் இனக்கலவரம் குறித்து பேசுவதற்கு தவிர்த்தார் மோடி. இதைக் கண்டித்து மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக ரேடியோ பெட்டிகளைப் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர் மணிப்பூர் மக்கள். பாசிசக் கும்பலுக்கு உரைக்கும்படிச் சொல்ல வேண்டுமென்றால் “மேய்தி இந்துக்கள்”. மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருப்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் விதமாக, மணிப்பூர் பெண்களால் தீ பந்தங்கள் ஏந்தி மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தப்பட்டது.


படிக்க: மணிப்பூர்: பாசிஸ்டுகள் கலவரங்களை விரும்பலாம்! மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்!


போராட்டங்கள் தங்களுக்கு எதிராக திருப்பியதை உணர்ந்த சில நாட்களிலேயே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “வேதனையளிக்கும் இந்த வன்முறையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என உள்ளூர் நிர்வாகம், காவல்துறை, ராணுவம், மத்திய அமைப்புகள் உட்பட அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” தெரிவித்திருந்தது.

மணிப்பூரின் அமைதி குறித்து ஆர்.எஸ்.எஸ்.க்கு ஏற்பட்ட ‘திடீர் கவலை’யோடு ஒப்பிடத்தக்க சம்பவம், இதற்கு முன்பும் நடந்திருக்கிறது!

000

மோடியின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான “டெல்லிச் சலோ விவசாயிகள் போராட்டம்” அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்று முன்னேறியபோது, கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசு அதை அடக்குமுறைகளைகளின் மூலம் ஒடுக்கிவிட முனைந்தது. மற்றொருபக்கம் “காங்கிரஸால் தூண்டிவிடப்பட்ட போராட்டம்” என்றும், “காலிஸ்தான்கள் பின்னணி” என்றும் அவதூறு கிளப்பியது. டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியது போல கருத்தியல் ஆதரவை முடக்குவதற்காக, போராட்ட ஆதரவு டுவீட்களையும் நீக்கியது. ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி போராட்டம் மென்மேலும் வலுத்தது.

போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளையும் தாண்டி, மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்கு எதிராக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் காவிக் கும்பலால் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாகவும் மற்றும் பல பொதுக் கோரிக்கைகளுக்காகவும் குரல்கொடுக்கத் தொடங்கினார்கள். இந்தச் சூழலில்தான், “அரசுக்கு எதிரான நீண்டகாலப் போராட்டம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களிடையே பிளவை அதிகரித்துவிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றது ஆர்.எஸ்.எஸ். (இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக்கட்டுரை 20.11.2021)

தாங்கள் பற்றவைத்த கொல்லி தங்களது தலைக்கே வந்துள்ளதை உணர்ந்து பாசிசக் கும்பல் சுதாரித்துக் கொள்வதன் அறிகுறிதான் இதுபோன்ற ‘கவலை’ தெரிவிக்கும் அறிக்கைகள். இந்த அறிக்கையைத் தொடர்ந்துதான் மணிப்பூரில் அமைதியை கொண்டுவருவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது ஒன்றிய அரசு. “மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது அனைத்துக்கட்சிக் கூட்டம் நடக்கிறது. ஆனால் அக்கூட்டத்தில் நாட்டின் பிரதமர் இல்லை!” என்று இதையும் எதிர்க்கட்சிகள் அம்பலப்படுத்தின.

தீவிரப்படுத்தப்படும் தேசப்பெருமிதப் பிரச்சாரங்கள், இந்துமதவெறி!

‘வளர்ச்சி’ முகமூடி கிழிந்து தொங்கும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இந்துராஷ்டிரம் அமைப்பதை நோக்கி முன்னேற வேண்டுமானால் தேசவெறி, மதவெறி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு வேறுவழியில்லை. தோல்வியின் அறிகுறிகள் கண்களில் புலப்படும் இத்தருணமானது பாசிசக் கும்பலுக்கு வெறியைக் கிளப்பியுள்ளது. எப்பேர்ப்பட்ட சதித்தனங்களை மேற்கொண்டும், பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றே தீர வேண்டும் என நினைக்கிறது!

ஜி20ல் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அதன் தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல், அது மோடியின் அரசின் பராக்கிரமத்துக்கு வழங்கப்பட்ட பரிசு என்பதாகப் பிரச்சாரம் செய்தது. ஜி20 மாநாடு மட்டுமல்ல, மோடியின் அண்மைய அமெரிக்கப் பயணம் மோடியால் இந்தியாவிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரமாக ஊடகங்களால் பிரச்சாரம் செய்ப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் மோடி நடத்திவரும் பாசிசக் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து அமெரிக்காவின் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் நடத்திய போராட்டமானது, மோடி கும்பல் உருவாக்க முனைந்த தேசப்பெருமித பலூனில் குண்டூசியை இறக்கியுள்ளது.


படிக்க: கட்சித் தாவல்களும் மத்திய புலனாய்வு முகமைகளும்!


அடுத்த ஜனவரி 14 அன்று அயோத்தி ராமர் கோயில் திறப்பை வெகுவிமரிசையாக நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க. 2024 தேர்தலில் ராமனை ஒரு பிராண்டாக முன்னிறுத்த முயற்சித்துவருகிறது பாசிசக் கும்பல். இதையொட்டி, ஓம் ராவத் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆதிபுருஷ் என்ற ராமயணப் படம் வெளிவந்தது. ஆதிபுருஷ் ஓடும் அனைத்துத் திரையரங்குகளிலும் அனுமனுக்கு ஒரு சீட்டை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஓம் ராவத். பா.ஜ.க. தலைவர்கள் இத்திரைப்படத்திற்கு சமூக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்தார்கள்.

ஆனால், திரைப்படத்தில் அனுமனும் ராவணனும் தாடிவைத்திருக்கும் தோற்றம் முஸ்லிம்களை ஒத்திருக்கிறது; சீதாவாக வருபவர் முழு கையும் தெரியும்படி (Sleeveless) உடுப்பு உடுத்தியிருக்கிறார் மற்றும் படத்தின் சில வசனங்கள்-காட்சிகள் ஆகியவற்றை முன்வைத்து ஆதிபுருஷ் “இந்துக்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சதி” என்று இந்து அமைப்புகளே போர்கொடி தூக்கியுள்ளன. தன் வினைத் தன்னைச் சுடும் என்பதுபோல, சங்கிக் கும்பல் விதைத்துள்ள இஸ்லாமிய வெறுப்புக் கலாச்சாரம் அவர்களையே தாக்கியுள்ளது.

000

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படும் நிலையில், அவற்றில் வெற்றிபெறுவதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துமதவெறியை கிளறிவருகிறது பாசிசக் கும்பல்.

“லவ் ஜிகாத்”, “நில ஜிகாத்”, “ரயில் கவிழ்ப்பு ஜிகாத்”, “வியாபார ஜிகாத்” என பலப்பல வடிவங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. இதை பரப்புரையாக மேற்கொள்வதன் ஒரு அங்கம்தான் “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம். தென்னிந்தியாவில் அது மண்ணைக் கவ்வினாலும், வடமாநிலங்களில் இது காவிக்கும்பலுக்கு நல்ல பிரச்சாரமாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஷ்ரதா என்ற இளம்பெண் தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த அப்தாப் என்பவனால் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட் நிகழ்வு பாசிசக் கும்பலுக்கு மிகப்பெரிய பிரச்சார ஆயுதமாக மாறியது.

கொலைசெய்த மிருகம் மதத்தால் ஒரு முஸ்லிம். இதைவைத்துக் கொண்டு நாடுமுழுக்க லவ் ஜிகாத் பிரச்சாரத்தை தீவிரப்படுதியது காவிக் கும்பல். கொலையுண்ட ஷ்ரதா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால், அம்மாநிலத்தில் இன்றுவரை அதைவைத்து இஸ்லாமிய எதிர்ப்பை தூண்டிவருகின்றன இந்துவெறி அமைப்புகள். 2022 நவம்பர் தொடங்கி இந்த ஆண்டு மே மாதம்வரை, மகாராஷ்டிரத்தில் “சகல் ஹிந்து சமாஜ்” என்ற அமைப்பு மொத்தம் 56 ‘லவ்ஜிகாத் எதிர்ப்பு’ப் பேரணிகளை நடத்தியுள்ளது.

மே மாதம் 26ஆம் தேதி உத்தரகாண்டில் சிறுமி ஒருவரை கடத்த முயன்றதாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் முஸ்லிம். இதை சாக்காக்கிக் கொண்ட உத்தரகாண்டின் இந்துமதவெறி அமைப்புகள் இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதோடு, மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் தாங்கள் குறித்த நாளுக்குள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்துள்ளர்கள். முஸ்லிம்களின் வீடுகளிலும், கடைகளிலும் இந்துமதவெறியர்கள் குறிச்சின்னங்களை இட்டுவைத்திருப்பதால் மிகப்பெரிய கலவரங்களை நடத்தக்கூடும் என்ற அச்சமும் சூழ்ந்துள்ளது.

இதேபோன்று இஸ்லாமியர்கள் மாநிலத்தைவிட்டே வெளியேற வேண்டுமென இமாச்சலப்பிரதேசத்திலும் இந்துமதவெறி அமைப்புகள் வெறிப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மேலும் பல மாநிலங்களுக்கும் பரப்புவதே காவிக் கும்பலின் இலக்காக உள்ளது.


படிக்க: மகாராஷ்டிரா: முஸ்லீம் மக்களை படுகொலை செய்யும் பசு குண்டர் படை!


இந்துமதவெறியை தேர்தலில் அறுவடை செய்துகொள்வதற்கேற்ப பிரச்சாரங்களையும் வாக்குறுதிகளையும் தயாரித்துவருகிறது பா.ஜ.க. இஸ்லாமியர்கள், கிறித்தவர்களின் இடஒதுக்கீட்டை இந்துக்களின் இடஒதுக்கீட்டுக்கு எதிரானதாக காட்டிப் பிரச்சாரம் செய்வது, இந்துப் பண்டிகைகளை ஒட்டி ஒன்றிய அரசின் சலுகைகள் அறிவிப்பது, தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது போன்ற திட்டங்களை வைத்துள்ளது பாசிசக் கும்பல்.

பசுவளைய மாநிலங்களைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளை புறக்கணித்து எடுக்கப்படும் இதுபோன்ற இந்துத்துவப் பிரச்சாரங்கள் பிற மாநிலங்களில் எடுபடுவதில்லை என்பதை கர்நாடக தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது என்றாலும், இதற்கு எதிர்வினையாற்றாமல் போனால் பாசிசக் கும்பல் தனது நோக்கத்தை சாதித்துக் கொள்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி முகம் மென்மேலும் உறுதிப்படுத்தப்பட்டால், ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே நடைமுறைப்படுத்துவது குறித்தோ, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைக் கொண்டுவந்து பசுவளைய மாநிலங்களின் தொகுதிகளை அதிகப்படுத்திக் கொள்ளும் சதித்திட்டத்திலோ பாசிசக் கும்பல் இறங்கலாம்.

நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டியுள்ளது!

பாசிசமும் ஆளும்வர்க்கக் கட்சிகளின் தேர்தல் சந்தர்ப்பவாதமும்!

கர்நாடகத்தில் பா.ஜ.க.வின் தோல்வியும் காங்கிரஸின் மிகப்பெரிய வெற்றியும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தேர்தல் வென்றவுடன் தாங்கள் அளித்த முதன்மை வாக்குறுதிகாளான 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 உதவித் தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்கு பத்து கிலோ இலவச அரிசி, படித்து வேலையில்லாத பட்டதாரி – பட்டயதாரிகளுக்கு உவித் தொகை, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதளித்துள்ளது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் மதமாற்றத்தடைச் சட்டம், பசுவதைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறப்போவதாகவும் பள்ளிப் பாடத்திட்டத்தில் புகுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர், சாவர்க்கர் தொடர்பான பாடப்பகுதிகளை நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது காங்கிரஸ். விவசாயிகளுக்கு எதிரான ஏ.பி.எம்.சி சட்டம், நிலச் சீர்த்திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கான திருத்துக்களுக்கான கோரிக்கையையும் மதிப்பாய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளர் முதல்வர் சித்தராமையா. சமூக வலைதளங்களில் பரப்பபடும் வெறுப்புப் பேச்சுக்களை காண்காணித்து ஒடுக்குவதற்காக சைபர் கிரைம் குழுக்களை அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்கு எதிரான இச்சட்டரீதியான நடவடிக்கைகள் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்துள்ளது. இது ஒரு முன்மாதியாக பார்க்கப்படுகிறது. இவை நாம் வரவேறக்கக்கூடிய விசயமே என்றாலும், இதே போன்றதொரு நிலையை அடுத்து தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கிற மத்தியப் பிரதேச காங்கிரஸாரிடம் பார்க்க முடியவில்லை.

000

மத்தியப் பிரதேச தேர்தல் களம் கர்நாடகத் தேர்தல் போல அல்லாமல், 2021 உத்தரப்பிரதேச தேர்தல் களம் போல உள்ளது. மென்மையான இந்துத்துவத்தை மூர்க்கமாக முன்னிறுத்துகிறார்கள் ம.பி காங்கிரஸார். இதற்கு தலைமை வகிப்பவர் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வதேரா. நர்மதா நதிக்கரையில் ஆரத்தி காட்டி பூசை செய்வது, கோயில்கோயிலாகச் சுற்றுவது, அனுமன் சாலிசா மந்திரம் ஓதுவது என தேர்தல் பிரச்சாரம் களைகட்டுகிறது.

காங்கிரஸ்காரரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான சுனில் குமார் மத்தியப் பிரதேச பிரதேசத்துக்கு வகுத்துக்கொடுத்துள்ள திட்டம் “இந்து வாக்குவங்கியைக் கவருவது”! ஏனெனில் மத்தியப் பிரதேசம் இந்துத்துவத்தின் கோட்டையான பசுவளைய மாநிலங்களுள் ஒன்று, அங்கே இந்துத்துவப் பிரச்சாரம்தான் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று கருதுகிறது காங்கிரஸ் கட்சி.

ஒருபக்கம் ராகுல், “நடைபெற்றுக் கொண்டிருப்பது இருவேறு சித்தாந்தங்களுக்கான போர்” என முழங்குகிறார். களநிலவரமோ மத்தியப் பிரதேசம் போலத்தான் இருக்கிறது. ஏனெனில் சித்தாந்தப் போராட்டத்திற்காக தேர்தல் வெற்றியை பலிகொடுப்பதற்கு காங்கிரஸ் தயாரில்லை!

தேர்தல் களமும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் வலுவும்!

கர்நாடகத்திற்கும் மத்தியப்பிரதேசத்திற்குமான இந்த பாரிய வேறுபாட்டை எப்படிப் புரிந்துகொள்வது?

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை காங்கிரஸ் மட்டும் தனியாக எதிர்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்து இதைத் தொடங்க வேண்டும்.

“பஜ்ரங்தளை தடைசெய்வோம்” என்று காங்கிரஸ் தைரியமாக முழங்கமுடிந்தது என்றால், நமக்குப் பின் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களை களத்தில் எதிர்கொள்வதற்கு பாசிச எதிர்ப்பு சக்திகள் இருக்கிறார்கள் என்ற தைரியம் இருந்தது. அந்த தைரியத்தை ஏற்படுத்தியது கர்நாடக பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் தங்களது சொந்த முன்முயற்சியில் நடத்திய “எழு கர்நாடகமே” என்ற இயக்கம்!

இப்பிரச்சார இயக்கம் பா.ஜ.க.வின் தோல்விக்கு மிகப்பெரிய உந்துவிசையாக இருந்தது. கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டு 112 சமூக அமைப்புகள் இணைந்து பணியாற்றிய இந்த இயக்கத்தில், 5 ஆயிரம் தன்னார்வலர்கள் களப்பணியாற்றியுள்ளனர். கருத்தரங்கங்கள், இணையவெளிப் பிரச்சாரங்கள் ஆகியவற்றோடு சுருங்காமல், இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டியும், ஏழை-உழைக்கும் மக்களுக்கு எதிரான பா.ஜ.க.வின் பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் வீடுவீடாகச் சென்று இத்தன்னார்வலர்கள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் இந்த களப்பணி மக்களிடையே உருவாக்கியுள்ள கருத்துக்கு ஒத்திசைவாக நடந்துகொள்ள வேண்டிய நிலையில், காங்கிரஸ் உள்ளது. இதை 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சியமைத்த சூழலோடு ஒப்பிடலாம்!

“எழு கர்நாடகமே இயக்கம்” கிட்டத்தட்ட காங்கிரஸிடம் ஒரு “தார்மீக ரீதியான நிபந்தனை”யை முன்வைத்துள்ளது என்றே சொல்லலாம். தனது வெற்றிக்கு பங்காற்றிய பாசிச எதிர்ப்பு சக்திகளின் உணர்விற்கு எதிராகச் செயல்பட்டால் தானும் பா.ஜ.க.வைப் போல மக்களால் புறக்கணிப்படுவோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.

இப்படியொரு சூழல் மத்தியப்பிரதேசத்தில் இல்லை!

காங்கிரஸின் மென்மையான இந்துத்துவப் போக்கு, தற்போது பஜ்ரங் சேனாவின் ஒரு பிரிவினர் காங்கிரஸில் இணைந்துள்ளது ஆகியவற்றைப் பார்க்கும்போது மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றால்கூட, பா.ஜ.க.வின் பாசிசத் திட்டங்களுக்கு எதிரான கர்நாடக காங்கிரஸ் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ம.பி. காங்கிரஸிடம் எதிர்ப்பார்க்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் நம்மிடம் கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்த அனுபவங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன…

பாசிச எதிர்ப்புக்கு தேர்தலையும் ஒரு களமாகப் பயன்படுத்த முடியுமா?

இதன் பொருள் என்ன?

ஆளும் வர்க்கக் கட்சிகளை நிபந்தனையின்றி ஆதரிக்கும்போக்கு மட்டும்தான் பாசிசத்திற்கு எதிரான மூச்சுவிடும் அவகாசத்தைக் கொடுக்குமா?

(தொடரும்…)


பால்ராஜ்,
புதிய ஜனநாயகம், ஜூலை 2023 மாத இதழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க