உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் மோடியின் முகம்தான் முன்னிருத்தப்பட்டு வருகின்றது. அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுக்கு போடப்படும் ஓட்டுக்கள் நேரடியாக தமக்கே வருகின்றது என்று மோடியே சொல்லிக்கொள்வார். மோடி தான் பாஜகவின் முதன்மை பிரச்சார கருவி என்பதில் எவ்வித இரகசியமுமில்லை.
மோடி பிரதமாராக பதவியேற்றதிலிருந்து கடந்த ஒன்பது ஆண்டுகளில், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் எண்ணற்ற அரசியல் பேரணிகளின் உரையாற்றுகிறார்.
பல்வேறு இடங்களில் திறப்பு விழாக்களில், சாதாரண நிகழ்வுகளின் மோடி கலந்துகொள்வது ஒருவித வாக்கு சேகரிக்கும் உத்தியாக பார்க்கப்படுகிறது. அதற்கான பல்வேறு அலப்பறைகளை பாஜக செய்திருக்கிறது. அதற்கு பெங்களூரு பையப்பனஹள்ளியில் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் திறப்பு விழா ஒரு உதாரணம். மார்ச் 2021-இல் டெர்மினலின் அனைத்து பணிகளும் முடிந்து தயாராக இருப்பதாக அதிகாரிகள் கூறினாலும், அதை திறப்பதை 15 மாதங்கள் தள்ளிப்போட்டு ஜூன் 2022-இல் மிகப்பெரிய விளம்பரம் செய்யப்பட்டு மோடி அதைத் திறந்து வைத்தார். அதன் பிறகுதான் அது பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்பட்டது. இது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
படிக்க : மோடியின் மன் கி பாத்: கேட்க ஆள் இல்லையென்றால் அபராதமா?
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தில் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி சோதனை மதிப்பாய்வு செய்வதற்கான நரேந்திர மோடி நவம்பர் 29 அன்று ஒரு மணி நேரம் ஹைதராபாத் சென்றார். மூன்று நாட்களுக்கு முன்புதான் ஹைதரபாத் போலீசு மோடி வருகையை உறுதிசெய்தது.
2023-ம் ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில், பெங்களுரு மெட்ரோவின் பர்பிள் லைன் ஒயிட்ஃபீல்டில் இருந்து கே.ஆர் புரம் வரையிலான வழித்தட திறப்பு விழா “அவசரமாக” நடந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மோடி வழக்கமான ஆரவாரத்துடன் மெட்ரோ பயணத்தை மேற்கொண்டார். உள்ளூர் பாஜக அரசாங்கம் அதைப் பரவலாக விளம்பரப்படுத்தியது. மோடி இந்த பாதையை திறந்து வைத்து 11 நாட்களுக்குப் பிறகு, தாழ்வாரத்தில் மற்றும் டிக்கெட் கவுண்டர் அருகே தண்ணீர் தேங்கி இருந்தது. கட்டுமானப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பெங்களூரு – மைசூரு விரைவுச் சாலையை மோடி திறந்து வைத்து பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மழையினால் சேதமடைந்த அதிவேக நெடுஞ்சாலையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து சந்தி சிரித்தன.
அதே நாளில், அவர் தார்வாட்டில் ஐஐடி வளாகத்தைத் திறந்து வைத்தார், இது ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வாகும், ஆனால் பஸ்வராஜ் பொம்மை அரசாங்கம் மாநிலம் முழுவதிலும் இருந்து பாஜகவினரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்து சென்றுதால் அது பாஜகவின் கட்சி நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
***
2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து மோடி அதிக நேரம் செலவழித்த மாநிலம் கர்நாடகா.
2023 ஆண்டு ஜனவரி 12 முதல், தேர்தலுக்கு முன்புவரை எட்டு முறை கர்நாடகாவிற்கு பயணம் செய்துள்ளார் மோடி. கர்நாடக தேர்தலுக்கு முன்பான ஒவ்வொரு நாளும் ஏப்ரல் 29 முதல் மே 8 வரை, மோடி மூன்று நான்கு பேரணிகளில் உரையாற்றினார்.
“கடந்த ஆண்டு மழைவெள்ளத்தால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டபோதும், அவர்கள் தங்களது உடமைகளை இழைந்தபோதும் மோடி கர்நாடகத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மாநிலத்திற்கு ஒரு ரூபாய் கூட நிவாரண நிதியை ஒதுக்க அக்கறை காட்டவில்லை. தேர்தலுக்கு நன்றி, பிரதமர் மோடி மாநிலத்தில் சுற்றுலாப் பயணியாக மாறியுள்ளார்” என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பிரிவு விமர்சனம் செய்துள்ளது.
“பசவராஜ் பொம்மை அரசாங்கம், வாடகைப் பேருந்துகளில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்கும், பங்கேற்பவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்வதற்கும் அரசாங்க பணத்தை ஏன் செலவழிக்க வேண்டும்” என்று எதிர்கட்சி மற்றும் சிவில் சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐஐடி-தர்வாட்டின் புதிய வளாகத்தை திறந்து வைப்பதற்கு மார்ச் 12 அன்று மோடி வந்திருந்தார். அந்த திறப்பு விழாவிற்கு ஆட்களை ஏற்றிச் செல்வது, மதிய உணவுகள், மேடை அமைத்தல், பிராண்டிங், விளம்பரங்கள் மற்றும் பிற தளவாடங்கள் ஆகியவற்றிற்காக பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஒட்டுமொத்தமாக ரூ.9.49 கோடி செலவிட்டதாக ஆர்டிஐ தகவல் தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தின் சொந்த ஒப்புதலின்படி, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளுக்கு மக்களை அழைத்துச் செல்ல ரூ.2.83 கோடி செலவழித்துள்ளது, அதே நேரத்தில் மதிய உணவு வழங்க ரூ.86 லட்சம் செலவிடப்பட்டது. ஒலி, எல்இடி விளக்குகள் மற்றும் சிசிடிவி பொருத்துதல்கள் ரூ.40 லட்சம் மற்றும் சுமார் ரூ.4.68 கோடி செலவில் ஜெர்மன் கூடாரம், மேடை, ‘கிரீன் ரூம்’ மற்றும் தடுப்புகள் அமைத்தது. இந்த நிகழ்வின் பிராண்டிங்கிற்காக கூடுதலாக ரூ.61 லட்சம் செலவிடப்பட்டது.
இதுபோன்று தேர்தல் பரப்புரைக்காக மோடி பயணம் செய்யும் செலவுகளோ பலகோடி. அதில், சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
- மோடியின் நகரப் பயணத்திற்காக பெங்களூரு சிவில் அமைப்பு ரூ.24 கோடி செலவிட்டுள்ளது.
- மோடியின் யோகா தின வருகைக்காக கர்நாடகா குடிமை அமைப்புகள் ரூ.56 கோடி செலவிட்டுள்ளது.
- கர்நாடகாவில் மோடியின் கலபுர்கி பயணத்தின்போது சில மணிநேரங்களுக்கு 11.18 கோடி செலவிடப்பட்டது.
- பெலகாவியில் மோடியின் நிகழ்ச்சிக்காக கிட்டத்தட்ட ரூ.14 கோடி செலவு; ஆட்களை ஏற்றிச் செல்லவே ரூ.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.
- பிப்ரவரி 27 அன்று பிரதமரின் வருகையின் போது கர்நாடக அரசு 36.43 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
- தார்வாட் ஐஐடி திறப்பு விழாவிற்கு ரூ.9.5 கோடி செலவிடப்பட்டது.
இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்….
பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்டமான விழாக்களுக்கும், மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் மறைமுகமாக பொது மக்கள் பணம் செலவிடப்படுவதாக கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
***
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், 2022 டிசம்பரில் தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட அரசியல் பேரணிகளில் பிரதமர் உரையாற்றினார்.
குஜராத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது பாஜக. மோடி பிரச்சாரம் செய்ய அதிக நேரம் ஒதுக்குவதற்காக மட்டுமே இமாச்சலப் பிரதேசத்திற்கான அட்டவணையை அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு குஜராத்துக்கான அட்டவணைக்கான அறிவிப்பை தாமதப்படுத்தியது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகள் ஒரே நாளில் – டிசம்பர் 8, 2022 அன்று எண்ணப்பட்டன.
படிக்க : தற்கொலையை ’நகைச்சுவை’யாக்கும் பாசிஸ்டு மோடி!
நாம் இன்னும் பின்னோக்கிச் சென்றால், 2019 பொதுத் தேர்தலுக்கு முன் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு கடந்த 30 நாட்களில் மோடி 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார் என்று NDTV தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், பாஜகவின் தலைமை பிரச்சாரகராக தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரங்களுக்கான கடந்த கால சாதனையை மோடி முறியடித்துள்ளார். எனினும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
மோடி, வெளிநாடுகளுக்கு செல்வதில் துவங்கி உள்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு சாதாரண திறப்பு விழா நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரை உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் போல் காட்டிக்கொண்டு, தனது சொந்த கட்சியின் காவி அடிதளத்தை விரிவாக்க அரசு பணத்தை பயன்படுத்தி கொண்டுள்ளார் பாசிஸ்டு மோடி என்பதையே இந்த செலவுகளும் நிகழ்ச்சிகளும் நமக்கு உணத்துகிறது.
காளி
செய்தி ஆதாரம்: த வயர்