மத்திய அரசு மூன்று சட்டங்களை திருத்தி, இந்தியில் பெயர் மாற்றி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம், நீதி மன்றங்களில் வழக்குகளை இ-பைலிங் முறையில் மட்டுமே தக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நடைமுறைபடுத்தி வருவதை கண்டித்தும், இ-பைலிங் முறையுடன் நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை இரண்டு ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) சார்பாக 15-09-2023 அன்று கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்ல அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜாக் அமைப்பின் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களில் இருந்து வழக்கறிஞர்கள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்வதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் முன்பு கூடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசும்போது மத்திய அரசும், ஆளும் பாஜக கட்சியும் தங்கள் மொழி ஆதிக்கத்தை மூன்று சட்ட திருத்தங்கள் மூலமாக அமல்படுத்த நினைக்கின்றனர், தமிழக வழக்கறிஞர்கள் ஒருபோதும் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்,
சட்ட திருத்தம் உடனே நிறுத்தி வைக்கப்படாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கி தமிழக வழக்கறிஞர்கள் நகர்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இ-பைலிங் முறை நடைமுறை சாத்தியமற்றது, இ-பைலிங் முறை சாத்தியமாக கீழமை நீதிமன்றங்களில் போதிய கட்டமைப்பு வசதிகள் இதுவரையிலும் ஏற்படுத்தப்படவில்லை, முறையான இணையதள வசதிகள் இல்லை, இணையதளத்தை கையாளக்கூடிய புலமைபெற்ற ஊழியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை, ஏற்கனவே நீதிமன்றத்தில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த நிலையில் இதை எதையுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இ-பைலிங்முறையை கால அவகாசமின்றி தீவிரமாக நடைமுறைப்படுத்துவது பொதுமக்களை நேரடியாக பாதிப்படையச் செய்யும்.
ஒரு அவசர வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது, இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு உரிய அலுவலக கட்டமைப்பை ஏற்படுத்த இயலாத பொருளாதார வசதியற்ற அடித்தட்டு நிலையிலிருந்து வழக்கறிஞர் தொழிலில் நுழையக்கூடிய வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களும் இந்த தொழிலை விட்டு வெளியேறுவதற்கான நிலையை ஏற்படுத்தி விடும்.
மேலும் வயது முதிர்ந்த மூத்த நடுத்தர வழக்கறிஞர்களுக்கும் இந்த இணையதளத்தை கையாண்டு இ ஃபைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, இவை எதையுமே கண்டுகொள்ளாமல் உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தான்தோன்றித்தனமாக அராஜகமாக ஜனநாயகமற்ற முறையில் வழக்கறிஞர்கள் மீது திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் கார்பரேட் மயத்தை மையப்படுத்தி வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கமும் இதில் அடங்கியுள்ளது,
மேலும் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான செலவும் பொதுமக்களுக்கு அதிகமாகும், எனவே இதை உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும் உச்சநீதிமன்றம் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தியிருப்பது மட்டுமல்ல, மத்திய அரசு மூன்று சட்டங்களையும் இந்தியில் பெயர் மாற்றி பாராளமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதும் தான்தோன்றித்தனமாக நடைபெற்றுள்ளது.
வழக்கறிஞர் சங்கங்கள், துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் யாரிடமும் எந்த கருத்துமே கேட்காமல் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தாங்கள் நினைத்ததை அமல்படுத்தியே தீர வேண்டும் என்ற சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வது ஜனநாயகத்திற்கு ஏற்படுவதில்லை என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக பார் கவுன்சில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவை தங்களுக்குள் ஒரு கள்ள கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டு வழக்கறிஞர்களையும், வழக்கறிஞர் சங்கங்களையும், போராடுகின்ற வழக்கறிஞர்களையும் அச்சுறுத்தி ஒடுக்கும் நோக்கத்தில் சட்டத்துக்கு மாறாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிபதிகளை எதிர்த்துப் பேசினால், கைநீட்டி பேசினால் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உண்டு என்று முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்த போது தமிழக வழக்கறிஞர்கள் ஜாக் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சுமார் மூன்று மாத காலங்கள் தொடர்ந்து போராடி அந்த சட்ட திருத்தத்தை முறியடித்தனர்.
அதன் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழகம் பார் கவுன்சில், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தங்களுடைய கள்ளக் கூட்டணியின் மூலமாக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தமிழக வழக்கறிஞர்கள் பெருந் திரளாக சுமார் 1700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னையில் அச்சமின்றி ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தமிழக பார் கவுன்சிலின் அராஜகமான போக்கை கண்டித்து ஜாக் பொதுக்குழுவிலே தீர்மானம் ஏற்றியதற்காக ஜாக் தலைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பார்க்கவுன்சிலால் அறிவிக்கப்பட்டு அதன் விசாரணை நிலுவையில் இருந்து கொண்டிருக்க கூடிய நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கும், இ-பைலிங் முறைக்கும் எதிராக ஜாக் பொதுக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் அடிப்படையில் தமிழக வழக்கறிஞர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தி இருப்பது தமிழக வழக்கறிஞர் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
வினவு களச்செய்தியாளர்