06/10/2023
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான
சோதனைகளைக் கண்டிப்போம்!
– ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) வெளியிட்டுள்ள அறிக்கை
ஜனநாயக உரிமைகள், கலாச்சார செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதற்காக உழைப்பவர்கள் ஆகியோர் மீது தேசியப் புலனாய்வு முகமை நடத்தியுள்ள சோதனையைக் கண்டிப்போம்! டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது போலீசார் நடத்திய சோதனைக்குக் கண்டனம் தெரிவிப்போம்!
அக்டோபர் 2-ஆம் தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான அவரது போராட்டத்தையும் நினைவுகூரும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, மக்கள் விரோத தேசிய புலனாய்வு முகமையானது (NIA) ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. 2023 செப்டம்பர் மாதம் உத்தரபிரதேசத்திலும், மே 2023-இல் ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாட்டிலும் நடந்த சோதனையைத் தொடர்ந்து இப்போது இதேபோன்ற சோதனை நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஒரு மாவோயிஸ்ட் ஆதரவாளர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் சித்தரிக்கப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 65 முன்னணி ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர்கள் மீது ஆந்திர போலீசு 2020 நவம்பரில் பொய் வழக்குப் பதிவு செய்தது. அதிலிருந்து ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிறர் மீதான அரசால் நடத்தப்படும் சோதனைகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.
படிக்க : பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது
எவ்வாறாயினும், அதன் பின்னர் தேசிய புலனாய்வு முகமையின் தலைமையிலான விசாரணைகளானது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எவருக்கும் எதிராக எந்தவிதமான குற்றவியல் ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய ஊபா UAPA சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றமானது, குற்றச்சாட்டுகளின் தன்மை மற்றும்சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
இந்தத் தோல்விகளைப் பொருட்படுத்தாமல், விஜயவாடா, குண்டூர், திருப்பதி, நெல்லூர், ராஜமுந்திரி, அனந்தப்பூர், விசாகப்பட்டினம், கடப்பா, சிறீகாகுளம், பிரகாசம், தாடேபள்ளிகுடம், பல்நாடு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் உள்ள நரசராவ்பேட்டை, தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் உள்ளிட்ட தெலுங்கு மொழி பேசும் இரு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் ஒரே நேரத்தில் தேசியப் புலனாய்வு முகமையானது சோதனை நடத்தியது.
வீட்டுச் சோதனைகளில், பொன்னுருவில் உள்ள முன்னணி மருத்துவரும், குண்டூர் மாவட்ட சிவில் உரிமைக் கமிட்டியின் தலைவருமான ராஜா ராவ், திருப்பதியில் பிரபல வழக்கறிஞரும் ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் (CDRO) ஒருங்கிணைப்பாளருமான கிராந்தி சைதன்யா, ஹைதராபாத்தில் உள்ள வழக்கறிஞர் சுரேஷ், மக்களின் மரியாதைக்குரிய இதர அறிவுஜீவிகள் மற்றும் பிற செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் மக்களால் நன்கறியப்பட்டவர்கள்; சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலனுக்காக போராடுபவர்கள்; வாதிடுபவர்கள். மேலும் இவர்கள் வெளிப்படையான, சட்ட வெளிகளில் பணியாற்றுபவர்கள். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் இவர்களை இணைக்க முயற்சிப்பதென்பது உண்மையின் கேலிக்கூத்தாகும். இது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவும் தவறிய அரசாங்கத்தின் தோல்வியை மூடிமறைக்கும் முயற்சியே தவிர வேறில்லை.
அக்டோபர் 3-ஆம் தேதியன்று, நியூஸ்க்ளிக் (Newsclick) மற்றும் பிற ஊடக ஊழியர்களுடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியான சோதனைகள் டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டன. “ஊபா” சட்டத்தின் மிகக் கொடிய பயங்கரவாதப் பிரிவுகளான 13,16,17,18 மற்றும் 22C ஆகியவற்றின் கீழும், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 153-A (வெறுக்கத்தக்க பேச்சு) மற்றும் 120-B (சதி) ஆகியவற்றின் கீழும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் டெல்லி போலீசார் நடத்திய சோதனைகளில் நியூஸ்க்ளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா, என்டிடிவியின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் அவுனிந்த்யோ சக்ரவர்த்தி, மூத்த பத்திரிகையாளர்கள் பரஞ்சோய் குஹா தாகுர்தா, ஊர்மிலேஷ், அபிசார் சர்மா, பாஷா சிங், சுபோத் வர்மா, அனுராதா ராமன், அதிதி நிகம், பிரஞ்சல், சுமேதா பால் மற்றும் முகுந்த் ஜா ஆகியோர் அடங்குவர். மேலும், நையாண்டி மற்றும் நகைச்சுவை நடிகரான சஞ்சய் ரஜௌரா, வரலாற்றாசிரியர் சோஹைல் ஹஷ்மி, எழுத்தாளர் கீதா ஹரிஹரன், டெல்லி அறிவியல் மன்றத்தைச் சேர்ந்த ரகுநந்தன் மற்றும் இலவச மென்பொருள் இயக்கத்தைச் சேர்ந்த கிரண் சந்திரா ஆகியோரின் சாதனங்களை போலீசார் சோதனை செய்து கைப்பற்றியுள்ளனர்.
மும்பையில் உள்ள “சப்ராங் இந்தியா” என்ற அறக்கட்டளை நிறுவனத்தைச் சேர்ந்த தீஸ்தா செதல்வாத் மற்றும் ஜாவீத் ஆனந்த் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். சிபிஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவருடன் தங்கியிருந்த விருந்தினரின் சாதனத்தைக்கூட பறிமுதல் செய்தனர். சமீபத்திய தகவலின்படி, நியூஸ்க்ளிக் நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படிக்க : ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நாட்டின் கூட்டாட்சி மற்றும் ஜனநாயக விருப்பார்வங்களை நிலைநாட்டுவதிலும் மத்திய அரசின் முழுத் தோல்வியும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வருவதால், அரசாங்கம் எந்த எதிர்ப்புக் குரலையும் அடக்கும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) ஆழ்ந்த அக்கறையுடன் குறிப்பிடுகிறது.
மணிப்பூரில் கலவரத்தைத் தடுக்கவோ, அங்குள்ள கலவரக்காரர்களைக் கைது செய்யவோ மத்திய அரசு தவறியதை ஒரு பக்கம் பார்க்கிறோம். மறுபுறம், அதே அரசாங்கம் தமிழ்நாட்டின் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்ற அமைப்பின் ஊழியர்களுக்குச் சட்டப்பூர்வ உதவிகளை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமையைப் பயன்படுத்துகிறது. அல்லது ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் மாநில அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தொழில் நிறுவனங்களின் நில அபகரிப்பைத் தடுக்க முயற்சிக்கும், பழங்குடியினரை அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றுவதை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமையைப் பயன்படுத்துகிறது. அல்லது மாணவர் செயற்பாட்டாளர்களும் உ.பி. மாநிலத்தின் பியுசில் (PUCL) என்ற மனித உரிமைக்கான அமைப்பின் மையத் தலைவரும் பா.ஜ.க. ஆட்சியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக அவர்களுக்கு எதிராக தேசியப் புலனாய்வு முகமையைப் பயன்படுத்துகிறது. ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் தற்போது நடத்தப்பட்ட சோதனைகளும் டெல்லி மற்றும் பிற இடங்களில் பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்கள் மீதான சோதனைகளும் இத்தகைய ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
பாசிச ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவர்களின் ஆதரவு அரசாங்கமானது, “கோடி மீடியா” (godi media – மோடியையும் பா.ஜ.க. ஆட்சியையும் ஆதரிக்கும் ஊதுகுழலாக உள்ள ஊடகங்கள் கோடி மீடியா என்றழைக்கப்படுகின்றன) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுப் பிரிவுகளைப் பயன்படுத்தி ஒரு மாற்று யதார்த்தத்தை உருவாக்குகிறது; அங்கு இந்த அரசாங்கமானது உலகில் எந்த அதிகாரத்தையும் கைப்பற்றக்கூடிய ஒரு அறிவுபூர்வமான, உறுதிப்பாடுமிக்க அரசாங்கமாக முன்னிறுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை, ஏனெனில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மூலம், அவர்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் மோசமாக தோல்வியடைந்துள்ளதை நன்கறிந்துள்ளார்கள்.
இந்த வரலாற்றுத் தருணத்தில், நியூஸ்க்ளிக் போன்ற சுயேட்சையான ஊடகங்கள் அதன் குறை கூற முடியாத செய்தி அறிக்கைகளால் தனித்து நிற்கின்றன. கடவுளின் அருள் பெற்ற தற்போதைய ஆட்சிக்கு அதனை விழுங்குவதற்கு கடினமாக உள்ளது. நியூஸ்க்ளிக் மற்றும் பிரபீர் புர்கயஸ்தா மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் மையப் புலனாய்வுத்துறையின் வழக்குகள் இருந்தாலும், அதன் ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்கள் பின்வாங்காமல், தங்கள் தொழில்சார் பொறுப்புகளை அச்சமின்றி நிறைவேற்றி வருகின்றனர்.
அதேபோல், ஜனநாயகவாதிகளும் இதர சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்த விரும்பத்தகாத உண்மைகளை பொதுமக்கள் முன்னே எழுப்பி வருகின்றனர். எனவே, ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO), இந்த சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் வெளிப்படையான, ஜனநாயக, மக்கள் சார்பான செயல்பாடுகளை நக்சலைட்டுகள் என்றும், “தீவிரவாதிகள், தேசவிரோதிகள், அரசுக்கு எதிரானவர்கள்” என்றும் முத்திரை குத்துவதாகக் கருதுகிறது. ஊக்கமான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயகப் பாதுகாவலர்களின் குரல்களை நசுக்குவதற்கு மட்டுமின்றி, அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கமும் தேசியப் புலனாய்வு முகமையும் (NIA) இந்த முத்திரைகளை உருவாக்குகின்றன என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) உறுதியாக நம்புகிறது.
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ((SVP NPA) 73வது குழுவில் தேர்ச்சிபெற்றவர்களின் வழியனுப்பு விழா அணிவகுப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆற்றிய உரையில் அரசின் இந்த அணுகுமுறை அப்பட்டமாக வெளிப்பட்டது. அவரது உரையில், சிவில் சமூகத்தை “போரின் புதிய எல்லைகள்” அல்லது “நான்காம் தலைமுறை போர்முறை” என்று அவர் குறிப்பிட்டபோது, அரசாங்கம் என்ன செய்ய விரும்புகிறது என்ற நோக்கத்தை தோவல் தெளிவாக விளக்கினார். எனவே, பாசிச ஆட்சியானது, நமது நாட்டையும் இயற்கை மூலவளங்களையும் மக்களையும் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்ளைக்காகத் திறந்துவிடும் நோக்கத்திற்கு எதிரான, இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு எதிரான எந்த விமர்சனத்தையும், எதிர்ப்பையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதைத் தங்களது பேச்சாலும், செயலாலும் தெளிவாகத் உணர்த்தியுள்ளது.
படிக்க : செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!
ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO) இந்தச் சூனிய வேட்டையையும் விசாரணையையும் தடுத்து நிறுத்தக் கோருகிறது. ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவரும் முன்வருவதும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதும் அவர்களது பொறுப்புமிக்கக் கடமை என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு CDRO கருதுகிறது, இல்லையெனில், சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியானது மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும்.
ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பினது (CDRO) கோரிக்கைகள்:
சமூகச் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தேசியப் புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க வேண்டும். பிரபீர் புர்கயஸ்தா, அமித் சக்ரவர்த்தி ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். போலீசுத் துறையும் தேசியப் புலனாய்வு முகமையும், நீதிமன்றத்திலும் நாட்டின் குடிமக்களின் முன்னும் உண்மையை வெளிக்கொணரும் தங்கள் கடமைகளைச் செய்வதிலிருந்து வழக்கறிஞர்களையும் பத்திரிகையாளர்களையும் தடுக்கக் கூடாது. கூட்டாட்சிக்கு எதிரான, மக்களுக்கு விரோதமான தேசியப் புலனாய்வு முகமை உடனடியாக கலைக்கப்பட வேண்டும். அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையிலான செயற்பாடுகளை கிரிமினல்மயமாக்குவதையும், இவற்றை தேசவிரோதக் குற்றச் செயலாக்குவதையும் உள்துறை அமைச்சகம் நிறுத்த வேண்டும்.
ஆசிஷ் குப்தா,
தபஸ் சக்ரவர்த்தி,
கிராந்தி சைதன்யா.
(ஒருங்கிணைப்பாளர்கள்)
ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு (CDRO)
ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் (CDRO) இணைந்துள்ள உறுப்பு அமைப்புகள்:
ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (AFDR, பஞ்சாப்); ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம் (AFDR, ஹரியானா), ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பிற்கான சங்கம் (APDR, மேற்கு வங்காளம்); அசன்சால் சிவில் உரிமைகள் சங்கம் (மேற்கு வங்காளம்); பந்தி முக்தி கமிட்டி (மேற்கு வங்கம்); சிவில் உரிமைக் கமிட்டி (ஆந்திரப் பிரதேசம்); சிவில் உரிமைக் கமிட்டி (தெலுங்கானா); ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி (CPDR, மகாராஷ்டிரா); ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி (CPDR, தமிழ்நாடு); மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பு (மணிப்பூர்); மனாப் அதிகார் சங்க்ராம் சமிதி (அஸ்ஸாம்); மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம்; மனித உரிமைகளுக்கான மக்கள் கமிட்டி (ஜம்மு-காஷ்மீர்); மக்கள் ஜனநாயக அரங்கம் (கர்நாடகா); ஜனநாயக உரிமைகளுக்கான ஜார்கண்ட் கவுன்சில் (ஜார்கண்ட்); ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (டெல்லி); சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (ஹரியானா), மணிப்பூர் அமைதிக்கும் ஜனநாயகத்துக்குமான இயக்கம் (டெல்லி), ஜனகீய மனுஷ்யவாகஷா பிரஸ்தானம் (மக்களின் மனித உரிமைக்கான இயக்கம், கேரளா).
ஆங்கில மூலம்: countercurrents