ழகான சிவப்பு ரோஜாக்களுடன்
புன்னகை பூக்கும் பாதைகளினூடே
காசா பிள்ளைகளை பெறுகிறது

அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில்
உலாவிக் கொண்டிருக்கிறார்கள்

காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது

ஆனால்
காசாவின் கருவுக்கல்லவா
சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள்

காசாவின் தாய்மார்கள் எல்லாம்
கதி கலங்கிப் போயிருக்கிறார்கள்

ரத்தம் வழிந்த
கைகளின் ஊடாக
குழந்தைகள் மீது
போர்வைகளைப் போர்த்துகிறார்கள்

ஆனால் சிலரோ
ராக்கெட்டுகளை அல்லவா
அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்

இவர்களின் பாசாங்குத்தனத்தால்
தாய்மார்களின் செவிப்பறைகள்
கிழிந்து போயிருக்கின்றன

ஆனாலும் நீதி
ஆடையின்றி அம்மணமாய்
உலாவிக் கொண்டிருக்கிறது

எங்களுக்கு ஏன் என்று புரியவில்லை
உங்களது பெரும் வெறுப்பால்
எமது இமைகள் மேகமாய்
கண்ணீரைப் பொழிந்து கொண்டிருக்கின்றனவே
அது ஏனென்று எங்களுக்குப் புரியவில்லை

எமது ஒவ்வொரு குழந்தையையும்
மரணம் திருடிக் கொண்டு செல்வதேனென
எங்களுக்குப் புரியவில்லை

இந்த கும்மிருட்டிலே நான்
ஒளியின் புள்ளியை எங்கே தேடுவேன்?

எங்களது குடும்பங்கள்
சிலுவையிலிடப்பட்டிருக்கின்றனவே!

இதோ கருணையற்ற மனிதர்கள்
பளபளக்கும் காலணிகளோடு
தேநீரை உறிஞ்சியபடி
அவர்களின் விடுமுறை நாள் இலக்குகளை
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்

இரத்த ஆறு வற்றாமல் இருக்க
ஆயுதங்கள் தேவை என்கிறார்கள்

இரத்த கரைகள்
ஏன்
உலர மறுக்கின்றன
என்பது எங்களுக்குப்
புரியவில்லை

எங்களது படகை மூழ்கடிக்க
உங்கள் கடலில் இன்னும்
எத்தனை அலைகள் இருக்கின்றன

என் துடுப்புகள் கவலைகளால்
வேதனையுற்றுக் கொண்டிருக்கின்றன

மனிதநேய கரையை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
சோர்ந்து விட்டோம்
எங்கள் இதயங்கள்
சிதைந்து போய்விட்டன

தாய்மாரின் கண்ணீர் உப்பினால்
எமது காயங்கள் பற்றி எரிகின்றன

எங்களின் நுரையீரல்கள்
காற்றால் நிரம்பியிருக்கவில்லை

தோட்டாக்களாலும்
வெண் பாஸ்பரசாலும்
கருகும் தசைகளின் வாசனையாலும்
எங்கள் நுரையீரல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது
என்பதை நீர் அறிவீரோ ?

எம் குழந்தைகளின் சுவடுகளைத்தான்
நாங்கள் கட்டியணைத்துக் கொண்டிருக்கிறோம்

இங்கே ஒருபோதும்
பட்டங்கள் பறப்பதில்லை
என்பதை தாங்கள் அறிவீரோ?

குப்பைக் குவியல்களில்
குழந்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்

விளையாட்டுத் திடல்களில் ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
எம் குழந்தைகளின் நினைவுகளை

தினந்தினம்
வெற்றுப்படுக்கையை முத்தமிட்டு கொண்டிருக்கிறோம்

தினந்தவறாமல்
பள்ளிக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறோம்
அதன் வாயில்களில்
காத்துக் கொண்டிருக்கிறோம்

கொஞ்சம் நேரம் கொடுங்கள் எங்களுக்கு

எம் பிள்ளைகள் தவறானவர்கள் அல்லர்
என்பதை நிரூபிப்பதற்கு

நாங்கள்
மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறோம் மன்றாடுகிறோம்
தயவு செய்து
கொஞ்சம் நேரம் கொடுங்கள்

உங்களுக்கு கண்டன அறிக்கை எழுதுவதற்காகவாவது
எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்

காணாமல் போன பிள்ளைகளை
மறந்து போவதற்காகவாவது கொஞ்சம் நேரம் கொடுங்கள்

எப்போதும் நிறைந்து கிடக்கும் அந்தப் பிணவறை
கொஞ்ச நேரமாவது
காலியாக இருக்கட்டும்
அதற்காகவாவது கொஞ்சம் நேரம் கொடுங்கள்

அடுத்த குழந்தையை புதைப்பதற்காகவாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்

என் கொட்டடிச்சிறையை சுத்தம் செய்ய வேண்டும்
அதற்காகவாவது கொஞ்சம் நேரம் கொடுங்கள்

உங்கள் நரகத்தை அகற்றுவதற்காகவாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்

நாங்கள்
அழுவதற்கும்
புலம்புவதற்கும்
கண்ணீர் விடுவதற்குமாவது
கொஞ்சம் நேரம் கொடுங்கள்

இன்னொன்றையும் தெரிந்து கொள்வீராக
நாங்கள்தான் காசாவின் தாய்மார்கள்.

– இக்பால் தமிமீ (Iqbal Tamimi)


தமிழில்: தோழர் மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க