மிக்ஜாம் புயல், அதை தொடர்ந்து பெய்த தொடர் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக, சென்னை வேளச்சேரி பகுதி மக்கள் உணவு, பால், தயிர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். தண்ணீர் வாங்ககூட கடைகள் இல்லாத காரணத்தினால் இப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.50-க்கும் இருபத்து ஐந்து லிட்டர் தண்ணீர் ரூ.300-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போதுவரை போலிசு சிலரைத் தவிர மாநகராட்சி அதிகாரிகளோ தி.மு.க. அரசின் எம்.எல்.ஏ., அமைச்சர்களோ இப்பகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தன்னார்வலர்களும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
புயல் அடித்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் இப்பகுதிகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் உணவு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி பகுதிக்குள் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், பகுதிக்குள் உள்ள மக்களை மீட்க மாநகராட்சி சார்பாக மீட்புக்குழுவோ படகுகளோ அனுப்பிவைக்கப்படவில்லை. இதன் காரணமாக, மக்கள் வேறுவழியின்றி தனியார் படகுகள் மூலம் வெளியேறி வருகின்றனர். இதனை பயன்படுத்தி கொண்டு பலர் தனியார் படகுகளுக்கு ஒரு ஆளுக்கு ரூ.1,500 முதல் 2,000 வரை வசூலித்து வருகின்றனர்.
சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது என்று தனது ஐ.டி. விங்-கள் மூலம் பிரச்சாரம் செய்துவரும் திமுக அரசுக்கு இப்பகுதிகள் கண்ணுக்கு தெரியவில்லையா? பல பகுதிகளில் அத்தியாவசிய வசதிகள் செய்துதரக்கோரி போராடும் மக்கள் சொல்லும் முக்கியமான விசயம் தங்களை எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. அமைச்சர்களும் நேரில் சந்திக்கவில்லை என்பதே.
எனவே,
தி.மு.க. அரசின் எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் மக்களை சந்திக்க வேண்டும்!
அடிப்படை வசதிகள் அனைத்தும் அரசின் சார்பாக செய்து தரப்பட வேண்டும்!
மாநகராட்சி சார்பாக உடனடியாக மீட்புக்குழு அனுப்பிவைக்கப்பட வேண்டும்!
மக்களை மீட்க, மாநகராட்சி சார்பாக படகுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்!
இப்பகுதி மக்களை உடனடியாக மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்க வேண்டும்!
வினவு களச்செய்தியளார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube