2024 நாடாளுமன்ற தேர்தல்:
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்
தெருமுனைக் கூட்டம்

பத்திரிகை செய்தி

காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் 21.12. 2023 மாலை 5 மணி அளவில். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகள் இணைந்து, பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் 146- வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது. சுமார் 30 பேர் வரை கலந்து கொண்டனர்.

”தொழிலாளர்கள் கொத்தடிமையாவதை விவசாயிகள் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை முறியடிப்போம்! ”
”2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்!” என்ற  முழக்கத்தை முன்வைத்து  நிகழ்ச்சி  நடைபெற்றது.

கூட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் அதிகாரம் தோழர். திலகவதி அவர்கள் தனது உரையில் ”தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அனைத்து ஆலையிலும் காண்ட்ராக்ட் முறை தீவிரமடைந்துள்ளது. மேல்மா சிப்காட் விவகாரத்தில் விவசாய நிலங்களை அழித்து, அதில் பன்னாட்டு நிறுவனங்களிடம் தொழிலாளர்களை கொத்தடிமையாக்குகிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்துவதன் மூலம் அங்குள்ள ஏரிகள் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட போகின்றன. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உருவாகும்” என்பதை விளக்கிப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பாலாறு பாதுகாப்பு இயக்கத்தின்  தோழர். காஞ்சி அமுதன் அவர்கள், தனது உரையில் மொழி ஆதிக்கம் குறித்து பேசினார். இந்தியை ஆதித்த மொழியாக்க ஒன்றிய அரசு விரும்புவதையும், தற்போது இந்துஸ்தானில் இருப்பவர்கள் இந்தி பேச வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் குறிப்பிட்டதை கண்டித்ததுடன் இந்தியாவின் தேசிய மொழி என ஒன்று இல்லை எனவும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தமிழகத்தின் பங்கு குறித்தும், தனது உரையை நிகழ்த்தினார்.

சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர். அமிர்தா அவர்கள், தனது உரையில் ”கடந்த 10 ஆண்டுகால பி.ஜே.பி ஆட்சியில் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன; விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-யால் சிறு-குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது; வங்கிகளில் ஏழை எளிய மக்களின் பணம் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கொள்ளை அடிக்கப்படுகிறது; கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன. நேரடி வரிகளை விட மறைமுக வரிகள் மூலம் அரசு மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச் சலுகை அளிக்கிறது. இதற்கெல்லாம் மாற்று திட்டம் என்று எதுவும் இந்தியா கூட்டணியில் இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் பா.ஜ.க கொண்டு வந்த சட்ட திட்டங்கள் அடிப்படையில் தான் ஆட்சி செய்ய முடியும். எனவே இதற்கு மாற்று தேர்தல் பாதையில் இல்லை; ஓட்டு போடுவதால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. பாசிஸ்டுகளுக்கு எதிரான களத்தில் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு தான் தேவை. அதனால்தான் நாங்கள் வேண்டாம் பி.ஜே.பி! தேவை ஜனநாயகம்!  என்று கூறுகிறோம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆக்சில்ஸ் இந்தியா  கிளையின் செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் நன்றி உரையாற்றினார்.


தகவல்
வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க