இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதத்தில் நடந்துமுடிந்துள்ளன. இத்தேர்தலின்போது, “இந்தியா கூட்டணி” கட்சிகள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை அணுகியுள்ளன. இத்தேர்தலில் அக்கட்சிகள் மக்களின் கோரிக்கைகளைப் பற்றி பேசாமல் இந்துத்துவ, கவர்ச்சிவாத வாக்குறுதிகளை அளித்து சந்தர்ப்பவாதமாக இருந்ததையும் பார்க்கிறோம். மேலும், தற்சமயம் பா.ஜ.க-வைத் தோற்கடிக்கக்கூடிய வகையிலும் அக்கூட்டணி இல்லை எனத் தோன்றுகிறது. அதேசமயத்தில், பா.ஜ.க. ஆட்சியில் பாசிசத்தின் கூறுகளும் அதிகரித்து வருகின்றன. ஆக, இந்தியா கூட்டணி தோல்விமுகத்திற்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

முதலில் இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருப்பதாக கூறுவது தவறு. இந்தியா கூட்டணி சந்தர்ப்பவாதமாக நிலை எடுத்திருப்பது என்பது வேறு. ஆனால், இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் உள்ளது என்று ஐந்து மாநில தேர்தல் விஷயத்தில் சொல்ல முடியாது. இந்தியா கூட்டணிக்குள் குழப்பங்கள் இருக்கிறது, கூட்டணி உறுதியடையாததாக உள்ளது. மேலும், சந்தர்ப்பவாதமாக நடந்துகொள்கிறது; முக்கியமாக, இந்தியா கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், மத்தியப்பிரதேசத்தில் பாசிச கட்சிக்கு நிகராக பஜ்ரங் சேனாவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு சென்றுவிட்டது. இப்படிதான் சொல்ல முடியுமே தவிர இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருப்பதாக கூற முடியாது.

மேலும், பா.ஜ.க. தோல்விமுகத்தில் இருக்கும்பொழுது இந்தியா கூட்டணி தோல்விமுகத்தில் இருக்க முடியாது. சமுதாயத்தில் ஒருநேரத்தில் மோதுகின்ற இரண்டு அடிப்படையான சக்திகளில் ஒரு சக்திதான் தோல்விமுகத்தில் இருக்க முடியும். இரண்டு சக்திகளுமே தோல்விமுகத்தில் இருக்க முடியாது. அது தோல்விமுகமே கிடையாது. தோல்விமுகம் என்பதை ஒரு ஒப்பீட்டில்தான் சொல்லமுடியும். இரண்டு சக்திகளுக்கிடையிலான இரண்டு பிரதான கூறுகளுக்கிடையிலான பிரதான போக்கை வைத்துதான் சொல்லமுடியும்.

ஆகவே, பா.ஜ.க. – பாசிச சக்திகள் எதிர் பாசிச எதிர்ப்பு சக்திகள், இதில் பாசிசத்திற்கெதிரான சக்திகள் என்றால் இந்தியா கூட்டணி மட்டுமல்ல, பெரிய அளவிலான உழைக்கும் மக்களின் போராட்டங்களும் அடங்கும். பா.ஜ.க-வின் நடவடிக்கைகள் தொடர்ந்து தவறுதலாக போவதும், பா.ஜ.க-வின் சித்தாந்தத்தில் உள்ள ஓட்டாண்டித்தனமும் அக்கட்சியை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஆக, இந்தியா கூட்டணி எவ்வளவு தவறுகள் செய்தாலும், அது தோல்விமுகத்திற்கு வந்துவிட்டதாக சொல்லமுடியாது. அதற்கான அடிப்படையும் கிடையாது.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க