பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜனவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: ஒருபுறம் நிதிஷ்குமார் “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளார். மற்றொருபுறம் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடப்போவதாக கூறியுள்ளனர். இது “இந்தியா கூட்டணி”க்குப் பின்னடைவை ஏற்படுத்துமா?
நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கேடுகெட்ட பிழைப்புவாதக் கட்சி என்று பீகார் மக்கள் நன்குணர்ந்துள்ளனர். “நிதிஷ்குமாரின் விலகல், இந்தியா கூட்டணிக்கு பெரிய பாதிப்புகளை உருவாக்காது. மாறாக, இந்த எட்டப்பன் வெளியேறியதால், பீகாரில் இந்தியா கூட்டணிக்கு கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்” என்று இந்தியா கூட்டணியினர் சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட பிழைப்புவாதியின் தலைமையில், இந்தியா கூட்டணி அமைந்தது சந்தர்ப்பவாதத்தின் கடைகோடித்தனம்! என்பதைதான் நாம் முக்கியமாக எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது.
மேலும், பா.ஜ.க.வுடன் உறவு-முறிவு-உறவு என்று அந்தர்பல்டி அடிப்பது நிதிஷ்குமார் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அ.தி.மு.க., நா.த.க., பா.ம.க., தே.மு.தி.க., டி.டி.வி. தினகரன், கர்நாடகத்தில் குமாரசாமி, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களும் பா.ஜ.க.வின் கடைந்தெடுத்த அடிமைகளாகவே உள்ளனர்.
அதேபோல், இந்தியா கூட்டணி என்பது பாசிச எதிர்ப்பு கூட்டணி அல்ல, பா.ஜ.க. எதிர்ப்பு கூட்டணிதான். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்டுகளை ஒதுக்குவதிலேயே இக்கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து உருவாகாத போது, இக்கூட்டணியினர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடத்தைப் பெற்றுவிட்டால், ஆட்சி அமைப்பதில் எவ்வளவு இழுபறி ஏற்படும் என்பதை இப்போதே அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜியின் அறிவிப்புகள் நமக்கு காட்டுகின்றன. இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை அது ஒரு பொதுத்திட்டத்திற்கு கூட வரவில்லை. பா.ஜ.க. எதிர்ப்பை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் இந்தக் கூட்டணியினரால், பாசிச பா.ஜ.க.வை தேர்தல் அரங்கில் வீழ்த்துவதும் கடினமே.
மேலும், நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளது குறித்தும் புழுத்து நாறும் இந்திய ஜனநாயகத்தின் அவலநிலை குறித்தும் தலையங்கத்தில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube