ஹிண்டன்பர்க் அறிக்கையும் உச்ச நீதிமன்ற  தீர்ப்பும்

இத்தீர்ப்பு வந்த உடனேயே ”ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி” என கௌதம் அதானி எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகிறார்.

னவரி 3 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் அதானி குழுமம் மீதான விசாரணையை செபி (SEBI) மட்டுமே செய்தால் போதுமானது வேறு எந்த விசாரணையும் தேவை இல்லை என்று கூறியது. இந்த விசாரணையை 3 மாதத்திற்குள் செபி முடிக்க வேண்டும் என்றும் செபியின் அதிகார வரம்பிற்குள் ஓரளவிற்கு மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் கருத்து கூறியது.

வழக்கின் சுருக்கம்

ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் 106 பக்கங்கள் 32,000 சொற்கள், 720-க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் மீதான பலவிதமான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியது. “அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மிகக் குறிப்பாக மொரிஷியஸ், கரிபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

ஆனால் இவை அனைத்தையுமே அதானி குழுமம் நிராகரித்தது மட்டுமில்லாமல் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை முற்றிலுமே ஆதாரமற்றது என்றும் கூறி மறுத்தது. உச்ச நீதிமன்றம் மார்ச் 2, 2023 அன்று ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை அறிய முன்னாள் நீதிபதி அபேய் எம்.சாப்ரே தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. 2 மாதங்களில் இந்த குழு விசாரித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டது.

மேலும் செபி–யும் 2 மாதங்களில் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதன்மூலம் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதன் காரணத்தால் தான் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில் அதானி குழுமம் மீதான விசாரணையை விரைவு படுத்தும் நோக்கில் பல தரப்பினர்கள் தாங்களாகவே முன் வந்து ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதிலும் குறிப்பாக செபி (SEBI) அமைப்பு இதை விசாரிக்காமல் காலம் கடத்துவது என்பதே சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. ஆகவே சிறப்பு குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.  இதை இப்பொழுது விசாரித்த உச்ச நீதிமன்றம் தான் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

யாருக்கான தீர்ப்பு?

இத்தீர்ப்பு வந்த உடனேயே ”ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி” என கௌதம் அதானி எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகிறார்.

முதலாளிகளின் நலனைக் காக்க அமைக்கப்பட்ட SEBI அமைப்பினால் ஒரு போதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. SEBI-யின் கையிலே மீண்டும் அதிகாரத்தை வழங்குவது என்பது திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது போன்றது. அதுமட்டுமல்ல, SEBI-யின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் அதானியின்  மகனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் உச்ச நீதிமன்றம் எப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கப்போகிறது என்று நம்பிக்கை வைத்துக் காத்திருந்தனர். அதானியே அத்தீர்ப்பை வரவேற்றதானது அது யாருக்கான தீர்ப்பு என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிவரும் முக்கியமான பல வழக்குகளின் தீர்ப்புகளில் வழக்கு போட்டவரையே குற்றவாளியாக்குவதும், உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதும்  வழக்கமாகி வருகிறது. நீதிமன்றமும், அரசும் எப்பொழுதும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை மட்டுமே பாதுகாக்கும் என இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.


கலைமதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க