24.02.2024
மக்கள் அதிகாரம் மூன்றாவது பொதுக்குழு தீர்மானங்கள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே, தோழர்களே,
மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடங்கிய நாள் முதல் 2021 வரை, கொள்கை அறிக்கை அமைப்பு விதிகளை வகுத்து, முறையாக அமைப்பில் வைத்து விவாதித்து நிறைவேற்றாமல் பின்பற்றப்பட்டு வந்த நவீன கலைப்புவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தது, 2022 ஜனவரியில் நடந்த எமது அமைப்பின் முதல் மாநில மாநாடு. “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்”, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்”, “புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்” ஆகிய மைய முழக்கங்களின் அடிப்படையிலான கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகளை வகுத்து அதன் அடிப்படையில், அன்று முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; ஆண்டு தோறும் முறையாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாதம் 24–ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தேறியது.
மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் மக்கள் அதிகாரம் கொடியை ஏற்றினார். பிறகு தியாகிகளுக்கு நினைவு சின்னத்தின் முன்பு பொதுக்குழு தோழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தினார்கள். தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. முதல் அமர்வு ஸ்டர்லைட் எதிர்ப்புப் போராளி தோழர் ஜெயராமன் அவர்கள் பெயரிலும், இரண்டாவது அமர்வு தோழர் சம்மனசு மற்றும் அம்பிகாபதி அவர்கள் பெயரிலும் துவங்கியது.
மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சாந்தகுமார் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக மேலப்புலம் புதூரை தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது. 2023க்கான ஆண்டறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சர்வதேசிய நெருக்கடிகளும் படர்ந்து வரும் பாசிச சூழலும் என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களும் , இன்றைய அரசியல் நிலைமையும் பாசிசத்தை வீழ்த்தப்பட வேண்டிய கடமையும் என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்களும் உரையாற்றினார்கள். தோழர் சிவகாமு அவர்களால் பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
ஆண்டுதோறும் ஜனவரியில் நடத்த வேண்டிய பொதுக்குழு கூட்டம் ஒரு மாதம் காலதாமதமாக நடத்தப்பட்டதற்கு மாநில செயற்குழு முன்வைத்த சுயவிமர்சனத்தை பொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அந்த அடிப்படையில் 2023-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக மாநில செயற்குழு முன்வைத்த அறிக்கை, நிதி அறிக்கையைப் பொதுக்குழு விவாதித்த அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சென்ற 2022-ஆம் ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் மக்கள் அதிகாரம் அரசியல் அரங்கில் முன்முயற்சியுடன் செயல்பட்டுள்ளது. முதன்மையான கட்சிகளுக்கு நிகராக மக்கள் அதிகாரம் நடப்புப் பிரச்சினைகள், மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுத்துள்ளது. தோழமை அமைப்புகள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாசிசத்திற்கு எதிராக போராடி முன்னேறி வருவதை இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கிறது.
அந்த அடிப்படையில், 2022 ஜனவரி மாநாடு, 2023 ஜனவரி பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றத் தொடர்ந்து போராடி வந்துள்ளதை இந்தப் பொதுக்குழு அங்கீகரித்தது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்களை இப்பொதுக்குழு ஒருமனதாக முன்வைக்கிறது.
000
- நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்ற ஒரு காரணத்தை கூறி மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜனநாயக இயக்கங்களையும் முடக்குவதற்கான சதிவேலை என்று மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
- இராமர் கோயில் திறப்பு நடவடிக்கை என்பது இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இன்னும் ஒரு தாக்குதலாகும். இது, இந்துராஷ்டிரத்திற்கான திறவுகோலே. இதனை வெறும் தேர்தல் பிரச்சார யுத்தியாக மட்டுமே சுருக்குவது தவறாகும். இதன் மூலம் பெயரளவிலான மதச்சார்பின்மைக்கு முடிவுகட்டி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலின் ஆட்சியை அரங்கேற்றத்தின் ஒரு படி கல்லாகும். இதற்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகளையும் பாசிச எதிப்பு ஜனநாயக சக்திகளையும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- அயோத்தி பாபரி மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் நீதித்துறை இந்துராஷ்டிரத்துக்கான ஒரு கருவியாக மாறி அப்பட்டமாக செயல்படுகிறது. உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. அரசு ஒரு மதரசாவை இடித்திருக்கிறது. அதையொட்டி போலீசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் நான்கு இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இசுலாமிய மக்களின் வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அயோத்தி ராமர் கோயில் உட்பட இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இசுலாமியர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல் தனது பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமலாக்கத்துறையை ஏவிவிட்டு எதிர்க்கட்சிகளை மிரட்டியும் எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களைக் கைது செய்தும் வருகிறது. அவ்வாறே பாசிச பிஜேபிக்கு கட்டுப்படாத ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு நபரையும் அமலாக்கத்துறை கைது செய்து தொடர்ந்து சிறைப்படுத்துவதற்கான கட்டற்ற அதிகாரத்தை பெற்றுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ ஆகியவற்றை கலைத்திட வேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சிகளும் இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைக்கப்பட்டதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. பாசிச ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. அமைப்பினரை கல்வி நிலையங்களில் இருந்து முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்த பாசிச மோடி அரசின் நடவடிக்கையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. மோடி அரசின் இப்பாசிச நடவடிக்கையை மக்கள் எதிர்க்கவில்லையெனில், காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல, இனி, அனைத்து தேசிய இன மக்களுக்கும் இதுவே நடக்கும் என்று மக்கள் அதிகாரம் எச்சரிக்கிறது.
- காசா முனையிலும் மேற்குக் கரையிலும் தங்களது தாய் நாட்டை காப்பாற்ற போராடுகின்ற பாலஸ்தீன மக்களுக்கு மக்கள் அதிகாரம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் அவர்களுடன் இணைந்து தோள் கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறது. போர் நிறுத்தத்தையும் போரையும் முடிவுக்கு கொண்டு வருவதில் பாசிச நெதன் யாஹூ அரசு செயல்படவில்லை என்பதை உணர்ந்த இஸ்ரேல் மக்கள் அவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதனை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது.
- அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடப்பட்டிருப்பதே இதற்கு அடிப்படை காரணம். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.தென் மாநிலங்களின் நிதி ஆதாரங்களை வழிப்பறி செய்து கொள்ளையடிக்கும், தென்மாநில சிறு தொழில்களை அழிக்கும் ஜி.எஸ்.டி. வரியை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.
- விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவிலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் மீது துணை இராணுவப் படை கொண்டு மோடி அரசு தாக்கியுள்ளதை மக்கள் அதிகாரம் வன்மையாக் கண்டிப்பதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு மக்கள் அதிகாரம் மோடி அரசை வலியுறுத்துகிறது.
000
- வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இப்போது வரை கைது செய்யப்படாமல் இருப்பது என்பது, ஆதிக்கச் சாதி சக்திகள் அரசு அதிகாரத்தில் வலுவான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.
- மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என்று இப்பொழுது வரை ஆதிக்கச் சாதி வெறியர்கள் அக்கோயிலை திறக்கவிடாமல் போராடி வருகின்றனர். மேல்பாதி கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கான அனைத்து உரிமைகளையும் இந்து அறநிலையத்துறை நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- விவசாய நிலங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் மக்களை மக்கள் அதிகாரம் வாழ்த்துவதுடன் மேற்கண்ட திட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் உள்ள ஓட்டக்கோவில்பட்டி, செக்கடிப்பட்டி, சேக்கிப்பட்டி , திருச்சுனை ஆகிய கிராமங்களில் பல வண்ண கிரானைட் குவாரிகளை அமைப்பதை எதிர்த்து அக்கிராமங்களின் மக்கள் போராட்டம் நடத்தி, கிரானைட் குவாரிகள் அமைக்கப்படுவதை முறியடித்துள்ளதை மக்கள் அதிகாரம் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும், மதுரை மாவட்டத்தில் கல்குவாரிகள் அமைப்பதற்கு தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
- ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- அம்மோனியா வாயு கசிவு, எண்ணெய் கசிவு என அடுத்தடுத்து வடசென்னை மக்கள் பாதிக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவதுடன் எண்ணெய் கசிவுக்கு காரணமான சி.பி.சி.எல். நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா கோரமண்டல் நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும். மிக மோசமான நச்சு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் வட சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமையவிருக்கிற காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
- சென்னை, தூத்துக்குடி பெருமழை வெள்ளம் – இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்காமல், கண்துடைப்பாக அற்ப தொகையை வழங்கி ஏமாற்றுவதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. வீடுகளை இழந்தவருக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பது, பொருட்களை இழந்தவருக்கு பொருட்களை வழங்குவது என்ற வகையில் முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பேரிடர் என்று அறிவிக்க முடியாது, நிவாரணமும் வழங்க முடியாது என்ற பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- காவிரியில் தமிழ்நாட்டின் மீதான உரிமையை பாதுகாக்கவும் மீண்டும் மாபெரும் மக்கள் திரள் இயக்கத்தை கட்டியெழுப்பவும் தமிழ்நாட்டு மக்களை மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.
- தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த அநீதிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- நாங்குநேரி, பெருந்தெரு தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் ஆதிக்கச் சாதி சங்கங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
- சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
- பாசிசப் படையின் உளவாளியாக இருக்கும் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
- தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் டாஸ்மாக் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
000
- “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்” என்ற மைய முழக்கத்தின் கீழ் தோழமை அமைப்புகளுடன் இணைந்து “சுற்றிவளைக்குது பாசிசப் படை”, “வீழாது தமிழ்நாடு , துவளாது போராடு” என்ற முழக்கத்தின் கீழ் 2023 மே, மதுரையில் வெற்றிகரமாக மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது; 2024 நாடாளுமன்றத் தேர்தல்: “ வேண்டாம் பி.ஜே.பி, வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் தோழமை அமைப்புகளோடு இணைந்து மேற்கொள்ளப்பட்ட இயக்கம் ஆகியவை மக்கள் மத்தியிலும் அரசியல் முன்னணியாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை, ஒவ்வொரு தருணத்திற்கு ஏற்ப மிகச் சரியான அரசியல் முழக்கங்களை முன்வைத்து செயல்படுவதற்கான நிரூபணங்களாக இருப்பதை இந்தப் பொதுக்குழு பேருற்சாகத்துடன் வரவேற்றது.
- கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் தனியார்மய-தாரளமய-உலகமயக் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர், வியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர், தலித் மக்கள் என அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மாபெரும் அநீதியை இழைத்து வரும் பாசிச மோடி-அமித்ஷா கும்பலுக்கு நாட்டு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது. அமலாக்கத்துறை, தேர்தல் கமிசன் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளையும் தனது ஏஜெண்டுகளாகப் பயன்படுத்தி, சட்ட விதி முறைகளை மீறி சர்வாதிகார முறையில் பாசிசத்தை அரங்கேற்றி வரும் இக்கும்பலை, தேர்தலில் வீழ்த்தி விட முடியும் எனக் கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். ஜல்லிக்கட்டுக்கான தமிழ்நாட்டு மக்களின் போராட்டம், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் மட்டுமே மோடி-அமித்ஷா கும்பலைத் தோல்வி முகத்தை நோக்கித் தள்ளியுள்ளது. ஆகையால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்த பாசிச கும்பலைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் தேர்தலுக்கு வெளியே மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறுவழி ஏதுமில்லை என்று மக்கள் அதிகாரம் உறுதிப்பட கூறுகிறது.
- மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட ராஜு -காளியப்பன், முத்துக்குமார் – கோபிநாத் போன்றவர்கள் எமது அமைப்பு பெயரை தொடர்ந்து பயன்படுத்துவதை பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுக்குழு,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube