02.03.2024

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

மோடியே, உலகம் முழுவதும் தமிழைப் புகழ்ந்து பேசும் நாடகத்தை நிறுத்து!
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு என்று முழங்குவோம்!

பத்திரிகைச் செய்தி

“தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!” என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 24 பேர் தொடங்கியுள்ளனர். இது நீண்டப் போராட்டம். நான்காவது நாளாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த போராட்டம் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இப்போராட்டத்தில் வழக்குரைஞர் பகவத்சிங், மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வழக்குரைஞர் மருது, வழக்குரைஞர் புளியந்தோப்பு மோகன், 91 வயது, 73 வயது முதியவர்கள், பெண்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டு 24 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் கருவறையிலும் தமிழ் மறுக்கப்படுகிறது, நீதிமன்றத்திலும் தமிழ் மறுக்கப்படுகிறது.

படிக்க : வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

தனது இந்துராஷ்டிர கனவை நினைவாக்க சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தூக்கி பிடித்து மாநில மொழிகளை அழிக்கத் துடிக்கும் மோடி – அமித்ஷா பாசிசக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளையும், தமிழ் மொழியையும் உயர்த்தி பேசுவதுபோல் நடிக்கிறார். இந்த நாடகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். உடனே தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

இந்தியாவிலேயே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூட இந்தியில் மனு தாக்கல் செய்யலாம் என அந்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழக்காட அனுமதியில்லையென்பது தமிழ்நாட்டின், தமிழ்மொழியின் மீதான தீண்டாமை. ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணை (இந்திக்கு ஒரு நீதி? தமிழுக்கு ஒரு நீதியா?) என்பதே மோடி அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் நடக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு போலீசுத்துறை தற்போது தடை விதித்திருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

படிக்க : உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 2

2006-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்த வேண்டுமென்றுதான் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் போலீசுத்துறையோ போராடுபவர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. பேச்சாளர்களின் பட்டியலை தர வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தொந்தரவு செய்கிறது. நெருக்கடிகளை கொடுத்துவரும் போலீசுத்துறையின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் போலீசுத்துறை இயங்குகிறதா? ஆளும் திமுக அரசு பதில் கூற வேண்டும்? தமிழை வழக்காடு மொழியாக்கப் போராடினால் போலீசை கொண்டு நெருக்கடியை கொடுப்பதுதான் உங்களின் தமிழ் பற்றா? சமூக நீதியா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. ஆகவே தமிழ்நாடு அரசு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க