தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களை நிரந்தரமாக அகற்றக்கோரி போராடி வருவதோடு தற்போது தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களான ஜெனிஃபா இந்தியா,மேக்ஸ் மென் போன்ற பெரும் நிறுவனங்கள் கழிவு மீன்களை கொண்டு வந்து அதனுடன் சில வேதிப்பொருட்களை சேர்த்து விலங்கு தீவனங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடும் போது வெளிவரும் துர்நாற்றத்தால் கிராமமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நடு இரவில் இந்த கழிவு மீன் ஆலைகளிலிருந்து மீத்தேன், ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் திறந்து விடப்படுகிறன. இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவதுடன் மூச்சுத்திணறல் உண்டாகி வாந்தி, மயக்கம் என கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிகளவில் சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படுவதோடு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புள்ளது.
இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் இந்த கழிவு மீன் நிறுவனங்கள் இத்தோடு நின்று விடாமல் ஆலைகளின் மீன் கழிவுநீரை கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் கலந்து விட்டு சென்றுவிடுகின்றன. இதனால் அப்பகுதியில் விவசாயம் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் துர்நாற்றம் காரணமாக பாதியிலேயே தங்களுடைய வேலைகளை நிறுத்திவிட்டு வீட்டிற்கு ஓடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்தால் அங்கேயும் சுத்தமான காற்றை சுவாசிக்கமுடியாமல் அப்பகுதி மக்கள் சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மேலும் கிராம மக்கள் வளர்க்கும் கோழிகள் ஆடுகள் போன்ற கால்நடைகளும் காகங்கள், மயில்கள் போன்ற பறவைகளும் இந்த துர்நாற்ற வாயுக்களை சுவாசிப்பதால் இறந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் வேதனைப்படுகின்றனர்.
படிக்க: சாலைகளே இல்லாத கிராமங்களுக்கு தேர்தல் எதற்கு? தேர்தலைப் புறக்கணிக்கும் ஏர்வாடி மக்கள்
இப்படி பிரச்சனை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீடிக்கவே மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களுக்கும் என சுமார் 11 துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பொட்டலூரணி பொதுமக்கள் சார்பாக பல மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை கண்டுக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இதுவரை எந்த ஒரு முறையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இப்படி பல ஆண்டுகளாக போராடியும் எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை என்பதால் தற்பொழுது ஊர் பொதுக்கூட்டம் கூட்டி தீர்மானம் போட்டு இந்த தேர்தல் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஊரை சுற்றி பதாகைகள் அமைத்தும் கருப்பு கொடிகள் கட்டியும் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அடுத்த கட்டமாக கிராம மக்கள் போராட்டம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முயன்ற போது காவல்துறை உடனே அனைத்திற்கும் தடை விதிக்கிறது.
ஆகவே இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதாக மாவட்ட ஆட்சியர் இப்பகுதி மக்களை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்டமாக சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுப்போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது வாக்களிப்பது குடிமகனின் ஜனநாயகக் கடமையெனில் வாக்களித்த மக்களுக்கு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கடமை. அதனை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீறும்போது தாங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வது குற்றமல்ல. தேர்தலை புறக்கணிப்பது தங்களது உரிமை என்று கூறுகின்றனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube