நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாடி, குருநாதபுரம், குரும்பூர், விச்சூர், சித்தம்பல், மருதாவூர், பத்தபாலூர் என ஏழு கிராம மக்கள் பல ஆண்டுகளாகப் போராடியும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் செய்துதரபடாததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமங்களில் சாலைகள் சீரமைக்கபடாமல் மண் சாலை குண்டும் குழியாகவும், மின்கம்பிகள் பழுதடைந்து சரி செய்யப்படாமலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக மழை வரும் போது சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மழைக் காலங்களில் பள்ளிக்கு செல்லமுடியாத நிலையில் உள்ளனர் என்றும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். 3 கிலோமீட்டர் வரை மண் சாலையாக உள்ளதால் மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு நகர்புறங்களுக்கு செல்வது சிரமமாக இருக்கிறது. சீரமைக்கப்படாமல் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்ற எங்களின் குரல்கள் கேட்கபடாமல் ஏர்வாடி ஊராட்சி மட்டும் தனித்து விடப்பட்டதாக இருக்கிறது.
இதையொட்டி பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினரும் ஒருமுறை கூட தங்கள் கிராமத்திற்கு வந்து தங்களின் அவலநிலையைப் பார்கவில்லை என வேதனைப்படுகின்றனர் கிராம மக்கள்.
படிக்க: கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது
இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள் “எங்களுக்கான அடிப்படை வசதிகளை துளியும் செய்து தராத இந்த தேர்தல் முறையில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம். அடிப்படை வசதிகளை செய்து தந்தபிறகே நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்” என ஏழு கிராம மக்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
இந்தியா கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளைத் தங்களின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பின்னடைவாகவே அமையும்.
தேர்தல் சமயத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால், தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாக மேற்கொள்ள துணிந்துவிட்டனர்.
தமிழ் பிரியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
சிற்பபான முன்னெடுப்பு வாழ்த்துகள் 💐💐💐