தோழர் லெனினுடைய 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” நூலில் இருந்து இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.
கட்சியானது, தொழிலாளர் வர்க்கத்தினுடைய அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட படைப்பிரிவாகும். ஆனால், கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரே அமைப்பு அல்ல. இன்னும் எண்ணற்ற பிற அமைப்புகளையும் பாட்டாளி வர்க்கம் கொண்டுள்ளது. அவை: தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தொழிற்சாலைகளில் உள்ள அமைப்புகள், நாடாளுமன்றக் குழுக்கள், கட்சி சாரா மகளிர் அமைப்புகள், பத்திரிகையாளர் குழுக்கள், கலாச்சார அமைப்புகள், கல்வி அமைப்புகள், இளைஞர் கழகங்கள்; பகிரங்கமான புரட்சிகர நடவடிக்கை காலங்களில் அமைக்கப்படும் புரட்சிகரமான போரிடும் அமைப்புகள், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திலிருக்குமானால் அரசு அமைப்பின் வடிவமான சோவியத் பிரநிதிகள் அமைப்பு – இன்னும் பிற. இந்த அமைப்புகள் இல்லாமல் பாட்டாளி வர்க்கமானது மூலதனத்தின் ஆளுகையை எதிர்த்து வெற்றிகரமாகப் போரிட முடியாது.
இவற்றுள் மிகமிகப் பெரும்பான்மையான அமைப்புகள் கட்சி சாராதவை. இவற்றுள் சில அமைப்புகளே கட்சியைப் பின்பற்றுபவை. மிகச் சிலவே கட்சியிலிருந்து உதித்த அமைப்புகளாக உள்ளன. குறிப்பிட்ட சில நிலைமைகளில், இந்த அமைப்புகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும் அவசியமானவையாக இருக்கின்றன. ஏனென்றால், அவை இல்லாமல் போனால், போராட்டத்தின் பலவகைப்பட்ட அரங்குகளில் பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க பலாபல நிலைகளை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லாமல் போய்விடும். அவை இல்லாமல் போனால், முதலாளித்துவக் கட்டமைவிற்குப் பதிலாக சோசலிசக் கட்டமைவை நிறுவுவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள பாட்டாளி வர்க்கத்தை எஃகுறுதிமிக்கதாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும்.
ஆனால் இத்தகைய அமைப்புகள் பல்கிப் பெருகியுள்ள நிலைமைகளில் அந்த அமைப்புகளின் மீது கட்சியின் ஒரே தலைமையை எவ்வாறு செல்வாக்கு பெறும்படி செய்வது? இந்த அமைப்புகள் எண்ணற்றவையாகப் பெருகியுள்ள காரணத்தால், தலைமையில் வெவ்வேறான போக்குகள் தோன்றுவதற்கு இட்டுச் செல்லாதா? இப்படி நடக்காமலிருக்க உத்திரவாதம் என்ன? இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் அவற்றிற்குரிய தனிச்சிறப்பான துறையில் அவற்றின் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த அமைப்புகளின் வேலைகள் மற்றதன் வேலைகளைத் தடங்கல் செய்யாது என்று வாதிக்கப்படலாம். அது உண்மை என்பது நிச்சயம். ஆனால், இந்த அமைப்புகள் எல்லாம் ஒரே வர்க்கத்திற்காக, பாட்டாளி வர்க்கத்திற்காக இருப்பவை. ஏனென்றால், இவை அனைத்தும் ஒரே வர்க்கத்திற்குச் சேவை செய்பவை. இதனால் அவை அனைத்தும் ஒரே திசைவழியில் வேலை செய்பவையாக இருக்கவேண்டும் என்பதும் உண்மைதான். அப்படியானால் பின்வரும் கேள்விகள் நம்முன் எழுகின்றன: இந்த அமைப்புகளுடைய வேலைகள் எல்லாம் எந்த வழியில் செல்வது என்பதைத் தீர்மானிப்பது யார்? தேவையான அளவிற்கு தனக்கு அனுபவம் உண்டு என்ற காரணத்தால், தன்னால் இத்தகைய பொதுவழியை வகுத்துத் தர முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், தனக்குப் போதிய செல் வாக்கும் அந்தஸ்தும் உண்டு என்ற காரணத்தால், தலைமையின் ஒற்றுமையைச் சாதிப்பதற்கும், ஒவ்வொன்றும் மற்றொன்றுக்குத் தடங்கல் ஏற்படாமல் தடுக்கவும், இந்தப் பொது வழியை நடைமுறையில் நிறைவேற்றும்படி இந்த அமைப்புகளையெல்லாம் தூண்டிவிடவும் தகுதியுடைய மைய அமைப்பு எங்கே? அது எது?
அந்த அமைப்புதான் பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சி என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.
படிக்க: மே தினம் குறித்து தோழர் லெனின்
இவற்றைச் செய்வதற்கான எல்லா தகுதிகளும் கட்சியிடம் உள்ளன. இந்த தகுதிகள் அதற்கு இருப்பதற்கான காரணங்களை இனி நான் கூறுகிறேன்.
முதல் காரணம்: தொழிலாளர் வர்க்கத்தினால் சோதித்து தெரிவு செய்யப்பட்ட தலைசிறந்த தொழிலாளர்களின் அணிதிரளும் மையமாக கட்சி விளங்குகிறது. பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சிசாரா அமைப்புகளுடன் இதற்கு நேரடியான பிணைப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், கட்சியானது வழக்கமாக அந்த அமைப்புகளை வழிநடத்திச் செல்வதாகவும் இருக்கின்றது.
இரண்டாவது காரணம்: தொழிலாளர் வர்க்கத்தில் சோதித்து தெரிவு செய்யப்பட்ட தலைசிறந்த தொழிலாளர்களின் அணிதிரளும் மையம் என்ற முறையில் கட்சி இருக்கிறது. இதனால் தமது வர்க்க அமைப்புகளின் ஒவ்வொரு வடிவத்திலுமானவற்றை வழிநடத்திச் செல்லும் ஆற்றலுடைய தலைவர்களுக்கான பயிற்சிப் பள்ளியாக கட்சி விளங்குகிறது.
மூன்றாவது காரணம்: தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களுக்கான தலைசிறந்த பயிற்சிப் பள்ளி என்ற முறையில் இருப்பதற்குக் காரணம் அதனுடைய அனுபவமும் செல்வாக்கும்தான். இதனால், பாட்டாளி வர்க்கத்தினுடைய போராட்டத்தின் தலைமையை மையப்படுத்தும் ஆற்றலுடைய அமைப்பாக கட்சியால் மட்டுமே இருக்க முடிகிறது.
இவ்வாறான மையப்படுத்தலின் மூலம், தொழிலாளர் வர்க்கத்தினுடைய கட்சிசாரா அமைப்புகள் அனைத்தையும் ஒன்று பாக்கியில்லாமல் கட்சியின் துணை அமைப்புகளாக மாற்றும் ஆற்றலுடையதாக கட்சி விளங்குகிறது. இத்துடன், இந்த கட்சி சாரா அமைப்புகளை, கட்சியை வர்க்கத்துடன் இணைக்கும் இடமாற்றி அனுப்பும் வார்பட்டையாகவும் (transmission belt) திகழ்கிறது.
இதனால்தான், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.
படிக்க: பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
கட்சிசாரா அமைப்புகளான தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், இன்னும் இதுபோன்ற அமைப்புகளை அதிகார பூர்வமாக கீழ்ப்படுத்தி வைக்கவேண்டும் என்று நிச்சயமாக இதற்குப் பொருள்படாது. அப்படியானால், இதன் பொருள் என்ன? இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இந்த அமைப்புகளில் சந்தேகத்திற்கே இடமின்றி செல்வாக்குள்ளவர்களாக விளங்குபவர்களுமான கட்சி உறுப்பினர்கள், இந்தக் கட்சிசாரா அமைப்புகளை அவையவற்றின் வேலைகளைச் செய்கையில், பாட்டாளி வர்க்க கட்சியை நெருங்கிவரும்படி ஈர்க்க வேண்டும் என்பதும், கட்சியின் அரசியல் தலைமையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி அவற்றைச் செய்ய வேண்டும் என்பதும்தான். இதற்காக, தங்களால் இயன்றதனைத்தையும் கட்சி உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்பதுதான்.
கட்சி என்பது “பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே” என்றும், மற்றெல்லா பாட்டாளி வர்க்க அமைப்பு வடிவங்கள் இடையேயும் அதன் அரசியல் தலைமையை விரிவுபடுத்தியே தீரவேண்டும் என்றும் லெனின் சொல்வது இதனால்தான். (தொகுதி 25, பக் 194; “இடதுசாரி கம்யூனிசம்- ஒரு இளம் பருவக்கோளாறு” என்ற நூல் )
இதனால்தான், கட்சிசாரா அமைப்புகளின் “சுயேச்சை, நடு நிலைமை” என்பனவற்றை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதக் கோட்பாடானது, லெனினியத்தின் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் முழுக்க முழுக்க ஒவ்வாததாக இருக்கிறது. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பவாத கோட்பாடுதான் கட்சியிலிருந்து தனிமைப்பட்டுள்ள சுயேச்சையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரிகை யாளர்களையும் உருவாக்குகிறது. ஏற்கெனவே சூன்யவாதிகளாகவும் கட்சி மறுப்பியல்வாதிகளாகவும் தரங்குறைந்துவிட்ட குறுகிய மனப்பான்மையினரான தொழிற்சங்கத் தலைவர்களையும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளையும் உருவாக்குகிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,